எல்லாம் சரியாகத்தான் நடந்துள்ளது!

‘‘மறைநூல் அறிஞரும், பரிசேயரும், விபச்சாரத்தில் ஈடுபட்ட ஒரு பெண்ணைக் கூட்டிக்கொண்டுவந்து நடுவில் நிறுத்தி,‘போதகரே! இப்பெண் விபச்சாரத்தில் கையும் மெய்யுமாய் பிடிபட்டாள். இப்படிப்பட்டவர்களைக் கல் எறிந்துகொல்ல வேண்டும் என்பது மோசே நமக்குக் கொடுத்தத் திருச்சட்டத்திலுள்ள கட்டளை. நீர் என்ன சொல்கிறீர்?’ என்று இயேசுவிடம் கேட்டனர். அவர்மேல் குற்றம் சுமத்த ஏதாவது வேண்டும் என்பதற்காக அவர்கள் இவ்வாறு கேட்டு சோதித்தார்கள்.அவர் நிமிர்ந்து பார்த்து, ‘‘உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண் மேல் முதலில் கல் எறியட்டும்’’ என்று உறுதியாகக் கூறினார். அவர் சொன்னதைக் கேட்டதும் முதியோர் தொடங்கி ஒருவர்பின் ஒருவராக அவர்கள் யாவரும் அங்கிருந்து சென்றுவிட்டார்கள். இறுதி யாக இயேசு மட்டுமே அங்கு இருந்தார். அப்பெண்ணும் அங்கேயே நின்றுகொண்டிருந்தார்.

இயேசு, ‘‘அம்மா, அவர்கள் எங்கே? நீர் குற்றவாளி என்று எவரும் தீர்ப்பிடவில்லையா?’’ என்று கேட்டார். அவர், ‘‘இல்லை ஐயா,’’ என்றார். இயேசு அவரிடம், ‘‘நானும் தீர்ப்பளிக்கவில்லை. நீர் போகலாம். இனிப்பாவம் செய்யாதீர்’’ என்றார். - (யோவான் 8: 3-11)அந்தத் தெருவில் சந்நியாசி ஒருவர் வாழ்ந்து வந்தார். அதே தெருவில் அவர் வீட்டிற்கு முன்பாக ஒரு தாசி வாழ்ந்து வந்தாள். தாசியின் வீட்டிற்குப் பலர் வருவதும் போவதுமாக இருந்தார்கள். இதைப்பார்த்த சந்நியாசி ஒவ்வொரு முறையும் ஒரு மனிதன் உள்ளே நுழையும்போது ஒரு சிறிய கல்லை எடுத்து வைத்தார். நாளடைவில் அது ஒரு பெரிய குவியலாக மாறிவிட்டது. ஒருநாள் இவர் அவளை அழைத்து, ‘‘உன்னுடைய பாவங்களின் எண்ணிக்கையைப் பார்.’’ எத்தனை பேருடைய வாழ்க்கையைக் கெடுத்திருக்கிறாய்? உனக்கு சத்தியமாக நரகம்தான் கிடைக்கும் என்று கடுமையாகச் சொன்னார். தாசியும் அழுதுகொண்டே திரும்பிவிட்டாள்.

இருவரும் இறந்தனர். தாசி மோட்சம் போனார். சந்நியாசி நரகம் போனார். சந்நியாசி கத்தினார்: ‘‘இறைவா! உன்னுடைய தீர்ப்பில் ஏதோ தவறு நேர்ந்திருக்கிறது. மோட்சத்துக்குப் போக வேண்டிய நான் நரகத்தில் இருக்கிறேன். நரகத்தில் இருக்க வேண்டியவள் மோட்சத்தில் இருக்கிறாள்.’’இறைவன் பதில் சொன்னார்: ‘‘எல்லாம் சரியாகத்தான் நடந்துள்ளது. அந்தத் தாசி பாவத்தொழில் செய்து வந்தாலும் அவளுடைய மனமானது தூய்மையாக இருந்தது. வயிற்றுப் பிழைப்பிற்காக மனசாட்சிக்கு விரோதமாக இப்படிப்பட்டப் பாவத்தொழிலை செய்ய வேண்டியிருக்கிறதே என்று மனம் நொந்து அழுது வந்தார். ஆனால் உம்முடைய எண்ணமெல்லாம் அந்தத் தாசியின் வீட்டில்தானே இருந்தது? தாசியின் வீட்டில் பிறர் எப்படி எல்லாம் இன்பம் அனுபவிக்கிறார்கள் என்பதை அல்லவா எப்பொழுதும் எண்ணிக்

கொண்டிருந்தீர். எனவேதான் இந்தத் தீர்ப்பு.’’தங்கள் தவறையும், குறைகளையும் மறைக்காமல், நியாயப்படுத்தாமல் ஏற்றுக்கொள்ள முன்வரும் மனிதர் மட்டுமே புதிய வாழ்வை அனுபவிக்க முடியும். இப்படிப்பட்ட மனிதர்கள் மட்டுமே இறைவனது புதுவாழ்வையும், அவர் தரும் மன்னிப்பையும் அனுபவிக்க முடியும்.

- ‘‘மணவைப்பிரியன்’’

ஜெயதாஸ் பெர்னாண்டோ

Related Stories: