தைப்பூச தரிசன திருத்தலங்கள்

தைப்பூசத் திருநாள் முருகனுக்கு உகந்த நாள். அன்று வீட்டில் தனி பூஜை செய்து முருகப்பெருமானை ஆராதனை செய்பவர்களும் உண்டு. முருகன்  தலங்களுக்குச் சென்று வழிபடுபவர்களும் உண்டு. இந்த தைப்பூச நாளில் சென்று வழிபடக்கூடிய சில கோயில்கள், இங்கே, உங்கள் தரிசனத்துக்காக...

திருப்புடைமருதூர்

மருத மரத்தை தலமரமாகக் கொண்ட தலங்களில் தெற்கே உள்ளது  திருப்புடை மருதூராகும். இதனை வடமொழியில் புடார்ஜுனம் என்பார்கள்.  அர்ஜுனம் என்றால் மருதமரம் என்று பொருள். அம்பாசமுத்திரத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள தலம். கலை எழில் ததும்பும் ஓவியங்களும், சிற்பங்களும் நிறைந்த கோயில். சுவாமி நாறும்பூநாதர். அம்பாள் கோமதியம்பாள். தீர்த்தம் தாமிரபரணி ஆறு. இந்த ஆலயத்தில் சூரியன், வன்னி  விநாயகர், சனீஸ்வரன், சரஸ்வதி, ஸஹஸ்ரலிங்கம் ஆகிய சந்நதிகளும் அமைந்துள்ளன.

பிரம்மஹத்தி தோஷத்தால் பெரிதும் துன்பப்பட்ட இந்திரன்  இத்தலத்திற்கு வந்து தவம் புரிந்தான். ஈசன் அவனுடைய தவத்திற்கு மெச்சி இத்தலத்தில் மருத மரத்தின் கீழ் அவனுக்குக் காட்சி தந்து பிரம்மஹத்தி  தோஷத்தை நீக்கியருளினார் என புராணங்கள் கூறுகின்றன. கும்பகோணம் மகாமகம் போல் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இங்கு தைபூசமும்  விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.

திருவிடைமருதூர்

காவிரிக் கரையோரம் உள்ள பாடல் பெற்ற திருத்தலங்களில் சிறப்பிடம் பெறுவது திருவிடைமருதூர். திருவிடைமருதூரிலே உள்ள இறைவன் மகாலிங்கம். அம்பாள் பெருநலமாமுலையம்மன். தலமரம் - மருதம். தீர்த்தம் - காருண்யாம்ருத தீர்த்தம். இங்குள்ள 32 தீர்த்தங்களில் ஒன்று கல்யாண தீர்த்தம் எனப்படும் காவிரிப்படித்துறை. அதன் தேவதை  மத்யார்ஜுனேஸ்வரர். அதில் புனித நீராடுபவர்கள், எல்லா மங்களங்களும் பெறுவார்கள். முக்தியையும் அடைவார்கள். இங்கு தைப்பூசத்தன்று நீராடுவது  சிறப்பாகக் கருதப்படுகிறது. 27 நட்சத்திரங்களும் தனித்தனியாக லிங்கங்கள் நிறுவி பூஜை செய்த சிறப்பு பெற்ற தலம் இது. பூச நட்சத்திரத்தில்  பிறந்தவர்கள் மட்டுமின்றி அனைவருமே பூச தீர்த்தவாரியின் போது இத்தல காவிரியில் நீராடினால் அவர்கள் தோஷங்கள் தொலைவது உறுதி.

திருக்குற்றாலம்

அமாவாசையன்றும் தைப்பூசத்தன்றும் தீர்த்தவாரி நடைபெறும் திருத்தலம் திருக்குற்றாலம். இறைவன் குற்றாலநாதர். இறைவி  குழல்வாய்மொழியம்மை. தலமரம் குறும்பலா, தீர்த்தங்கள் சிவமதுகங்கை, வடஅருவி. உள்ளன்புடன் எவர் குற்றாலநாதரை வணங்குகின்றாரோ அவர்  ஜீவன் முக்தராகிறார். அகத்திய முனிவர் திருமாலைக் குறுக்கி சிவலிங்கமாக பிரதிஷ்டை செய்தார். அவருடைய கை பதிந்த வடு லிங்கத்தில்  காணப்படுகிறது. அதனால் விசேஷமான தைலக் காப்பினை அவருக்கு செய்கிறார்கள். ஆலயத்தின் வெளிப்பிராகாரத்தில் வடக்கு திசையில்  குற்றாலநாதரின் இடப்புறத்தில் ஞானசக்தியாக துலங்குகிறாள் அம்பிகை.

பிற தலங்களில் அம்பிகையின் சந்நதியில் பீட சக்தி இருக்கும். இங்கு பராசக்தி பீடமே அம்பிகையாக விளங்குகிறது. அப்பீடம் சிவாலய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நடராஜரின் ஐந்து சபைகளில் ஒன்றான சித்திரசபை,  ஆலயத்தின் வடபுறம் உள்ளது. உமையம்மை மட்டும் தரிசிக்க சிவன் ஆடிய திரிபுரதாண்டவம் இங்குதான் நிகழ்ந்தது. அத்திருக்கூத்து, மகாபரம ரகசியம் எனப்படுகிறது. தைப்பூசத் திருவிழா மகோன்னதமாக நடை

பெறும் கோயில் இது.

Related Stories: