அவல் சர்க்கரை பொங்கல்

தேவையானவை

அவல் - 1 கப்

வெல்லம் - 1 கப்

குங்குமப்பூ - சிறிதளவு

திராட்சை - 10

பால் - 1/2 கப்

நெய் - 1/4 கப்

ஏலக்காய் - 1

முந்திரி - 10

பச்சைப்பயறு - 1/4 கப்

செய்முறை

பச்சைப்பயறை வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும். அதே வாணலியில் அவலைப் போட்டு சூடேறும் வரை வறுக்கவும். பின் பச்சைப்பயறை ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் விட்டு வேக வைக்கவும். பருப்பு வெந்ததும் அதில் ஒரு பங்கு அவலுக்கு இரண்டு பங்கு பாலும், தண்ணீருமாகக் கலந்து ஊற்றி கொதிக்க வைக்கவும். கொதி வந்ததும் அவலை கொட்டிக் கிளறி மூடி மிதமான  தீயில் வேக வைக்கவும். அவல் சீக்கிரமே வெந்துவிடும். சிறிது சூடான பாலில் குங்குமப்பூவைப் போட்டுக் கலக்கி பொங்கலில் சேர்த்துவிடவும். மற்றொரு வாணலியில் ஒரு அடி கனமான பாத்திரத்தில் பொடித்த வெல்லத்தைப் போட்டு, சிறிதளவு தண்ணீர் விட்டு பாகு பதம் வந்ததும், பொங்கலில் கொட்டிக் கிளறவும்.இதில் ஏலக்காயை தட்டிப் போடவும். வாணலியில் நெய் விட்டு முந்திரி, திராட்சை இரண்டையும் பொன்னிறமாக வறுத்து ,இவற்றை நெய்யுடன் சேர்த்து பொங்கலில் கொட்டிக்கிளறி இறக்கவும். அவல் சர்க்கரைப் பொங்கல் ரெடி.

Related Stories: