திருமணம் நிச்சயமாகும்

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பரிகாரமும் சொல்கிறார் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

?என் மகன் பிறந்ததில் இருந்து எதுவும் சுலபமாக கிடைக்கவில்லை. தற்போது சென்னையில் பணியில் இருக்கிறான். திருமண வயது என்பதால் ஜாதகத்தைக் காண்பித்தபோது களத்ர தோஷம், ராகு தோஷம், முன்னோர் சாபம் என்று பல குறைகளைச் சொல்கிறார்கள். என் மகனின் நல்வாழ்விற்கு வழிகாட்டி ஆசிர்வதியுங்கள்.

- நந்தினி, நாகர்கோவில்.

ரேவதி நட்சத்திரம், மீன ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது சுக்கிர தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதி சூரியன் நீச பலத்துடன் மூன்றாம் பாவத்தில் அமர்ந்திருப்பதோடு உடன் செவ்வாய், புதன், குரு ஆகிய கிரகங்களின் இணைவினையும் பெற்றிருப்பதால் உடல்நிலையில் சிறு வயதில் பிரச்னை உண்டாகியிருக்கிறது. 10 வயது வரை நரம்பியல் சார்ந்த பிரச்னைகளில் பாதிக்கப்பட்டிருந்ததால் உங்கள் மனதில் தேவையற்ற பயம் குடிகொண்டிருக்கிறது. நீங்கள் கடிதத்தில் எழுதியுள்ளதுபோல் அவருடைய ஜாதகத்தில் களத்ர தோஷமோ, ராகு - கேது தோஷமோ எதுவும் கிடையாது. முன்னோர் சாபம் போன்ற விஷயங்கள் எதுவும் அவரது ஜாதகத்தில் காணப்படவில்லை. கவலை ஏதுமின்றி பெண் பார்க்கத் துவங்குங்கள். இளம் வயதில் சிரமப்பட்டிருந்தாலும் திருமண வாழ்வு என்பது நல்லபடியாக அமையும். எதிர்காலம் சிறப்பாக உள்ளது. வீட்டில் சுமங்கலி பூஜை செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். விடாமல் தொடர்ந்து செய்து வாருங்கள். அது ஒன்றே போதுமானது. வேறு சிறப்பு பரிகாரம் எதுவும் தேவையில்லை. வருகின்ற 15.10.2020ற்குள் அவரது திருமணம் நிச்சயமாகிவிடும். கவலை வேண்டாம்.

?ஏழு ஆண் பிள்ளைகளில் நான் இரண்டாவதாக பிறந்தேன். ஏழுபேரில் எனக்கு மட்டும் குழந்தைகள் இல்லை. சகோதரனுடன் இணைந்து ஜவுளி வியாபாரம் செய்து வந்தேன். தற்போது நஷ்டம் உண்டாகி கஷ்டத்தில் உள்ளேன். என் ஜாதகத்தில் இரண்டு கிரகங்கள் உச்சம் பெற்று ஒருவரை ஒருவர் பார்ப்பதாகவும், உச்சனை உச்சன் பார்த்தால் பிச்சை எடுப்பான் என்றும் ஜோதிடர் கூறுகிறார். உரிய பரிகாரம் கூறி உதவிடுங்கள்.

- மோகன்,

ஈரோடு மாவட்டம்.

பூரம் நட்சத்திரம், சிம்ம ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தை பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கணித்துப் பார்த்ததில் தற்போது குரு தசையில் சனி புக்தி நடந்து வருவது புலனாகிறது. உச்சனை உச்சன் பார்த்தால் பிச்சை எடுப்பான் என்ற பழமொழி எதுகை மோனையின் அடிப்படையில் உருவானதே தவிர ஜோதிட நூல்களில் இதற்கான ஆதாரம் எதுவும் கிடையாது. இது போன்ற வாக்கியங்களை மனதில் நினைக்காமல் தொடர்ந்து உங்கள் உழைப்பினை வெளிப்படுத்தி வாருங்கள். சகோதரனின் உதவியில் வாழ்வதால் பிச்சை எடுப்பதாக பொருள் காண்பது தவறு. தொழில் ஸ்தானத்திற்கு அதிபதி ஆகிய சனி பகவான் ஆறாம் வீட்டில் அமர்ந்திருந்தாலும் உச்ச பலத்தோடு சஞ்சரிக்கிறார். தனது தசாபுக்தியின் ஆரம்பத்தில் கஷ்டத்தைத் தந்தாலும் அதன்பின் அவரே அளப்பறிய நன்மையையும் செய்வார். நீங்கள் தொடர்ந்து உங்கள் சகோதரருடன் இணைந்து சுயதொழிலே செய்து வரலாம். இந்த வயதில் அடுத்தவர்களிடம் சென்று கைகட்டி வேலை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. 01.06.2020 முதல் மீண்டும் தொழில் முறையில் நல்ல லாபத்தினைக் காணத் துவங்குவீர்கள். அதுவரை சற்று பொறுத்திருங்கள். சனிக்கிழமை தோறும் அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று ஸ்ரீ பைரவரை வழிபட்டு வாருங்கள். தெருவில் அலைந்து கொண்டிருக்கும் நாய்கள் முதலான பிராணிகளுக்கு உங்களால் இயன்ற அளவில் உணவு அளித்து வாருங்கள். பைரவரின் திருவருளால் உங்கள் வாழ்வு முன்னேற்றம் காணும்.

?நான் பத்தாம் வகுப்பு படிக்கிறேன். பெற்றோர் நிறைய கடன் வாங்கிவிட்டனர். தற்போது முறுக்கு வியாபாரம் செய்து வருகிறோம். வீட்டினில் நிம்மதி இல்லை. பணமும் நிற்பதில்லை. நல்ல வழி காட்டுங்கள்.

- பிரகாஷ், திருவண்ணாமலை மாவட்டம்.

இளமையில் வறுமை என்பது மிகவும் கொடுமையானது என்பது ஔவையாரின் கூற்று. அதனை மெய்ப்பிக்கும் விதமாக உங்கள் கடிதம் அமைந்திருக்கிறது. மூலம் நட்சத்திரம், தனுசு ராசி, மீன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது சுக்கிர தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. ஏழரைச்சனியில் ஜென்மச்சனி, ஜென்ம கேது என்று ஜோதிடக் குறிப்புகளை இந்த வயதிலேயே அதிகமாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். பதின்பருவத்தில் கஷ்டங்களையெல்லாம் விளையாட்டாக எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும். அதனை விடுத்து விரக்தியான எண்ணங்களை மனதில் வளர்த்துக்கொள்ளக் கூடாது. விரய ஸ்தான அதிபதியின் தசை நடப்பதால் மிகுந்த சிரமத்தைக் கண்டு வருகிறீர்கள். குடும்ப பாரத்தை சுமப்பதற்காக முறுக்கு வியாபாரம் செய்வதாக எழுதியுள்ளீர்கள். கூடவே உங்கள் படிப்பினையும் தொடருங்கள். குடும்ப கஷ்டத்தை சாக்காக வைத்து படிப்பினை கைவிட்டு விடாதீர்கள். கல்வி ஒன்றே பெரும்சொத்து என்பதை நினைவில் கொள்ளுங்கள். வாக்கு ஸ்தானத்தில் உச்சம் பெற்றிருக்கும் சூரியனின் துணையுடன் சிறப்பான பேச்சுத்திறமையினைப் பெற்றிருக்கிறீர்கள். வாக்கு சாதுர்யத்தால் வாழ்க்கையில் முன்னேறும் வாய்ப்பு உங்கள் ஜாதகத்தில் பிரகாசமாக உள்ளது. தினமும் காலையில் எழுந்து சூரிய நமஸ்காரம் செய்து வாருங்கள். உங்கள் வாழ்வினில் ஒளி பிறக்கும்.

?ஆரம்பம் முதலே நிரந்தர தொழில் கிடையாது. என் படிப்பு மற்றும் திறமைக்கு ஏற்ற வேலை பார்த்து வந்துள்ளேன். 74 வயதில் இன்னமும் கடமைகள் பாக்கி இருப்பதால் கமிஷன் அடிப்படையிலான தொழில் ஆரம்பித்துள்ளேன். அதில் நான் வெற்றி பெறவும் பொருளாதார நிலை உயரவும் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

- சங்கரன், திருநெல்வேலி.

74வது வயதிலும் உழைத்து வாழ வேண்டும் என்ற உங்களது எண்ணம் மிகவும் பாராட்டுதலுக்கு உரியது. இன்றைய இளம் தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறீர்கள். ஹஸ்தம் நட்சத்திரம், கன்னி ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது புதன் தசையில் சந்திர புக்தி நடந்து வருவதாக எழுதியுள்ளீர்கள். உங்கள் ஜாதக பலத்தின்படி நீங்கள் இன்னமும் 10 ஆண்டு காலம் வேலை பார்த்து சம்பாதிக்க இயலும். தற்போது நீங்கள் ஆரம்பித்திருக்கும் கமிஷன் அடிப்படையிலான தொழில் புதன் சார்ந்தது என்பதால் இதனையே தொடர்ந்து செய்து வாருங்கள். லக்னாதிபதி குருவோடு சந்திரனும் இணைந்து யோகத்தினைத் தந்திருக்கிறார்கள். என்றாலும் ஆறாம் பாவகத்தில் சஞ்சரிக்கும் சூரியனும் ராகுவும் கடன் பிரச்னைகளைத் தந்து சிரமத்திற்கு உள்ளாக்குவார்கள் என்பதால் கவனத்தோடு செயல்படுங்கள். பண விஷயத்தில் யாரையும் நம்பாமல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வருகின்ற 11.05.2020 முதல் உங்கள் தொழிலில் அபார வளர்ச்சி காண்பீர்கள். ஏதேனும் ஒரு புதன்கிழமை நாளில் நெல்லையப்பர் கோவில் தாமிரசபையில் அருட்பாலிக்கும் நடராஜப்பெருமானை தரிசிப்பதோடு சந்நதியினை 17 சுற்றுக்கள் வலம் வந்து வணங்குங்கள். உங்கள் கடமைகளை சரிவரச் செய்து முடித்தவுடன் நடராஜப் பெருமானுக்கு உங்களால் இயன்ற திருப்பணியைச் செய்வதாக பிரார்த்தனை செய்து கொள்ள உங்கள் எண்ணம் நல்லபடியாக நடந்தேறும்.

?எனது மூன்றாவது மகனுக்குத் திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகியும் இதுவரை குழந்தை பாக்கியம் இல்லை. மற்ற இரண்டு மகன்களுக்கும் குழந்தைச் செல்வங்கள் உள்ள நிலையில் இவருக்கு மட்டும் இல்லாதது பெரும் கவலையாக உள்ளது. அமெரிக்காவில் பணிபுரியும் அவன் சார்பாக நாங்கள் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? என் தந்தை இறந்து முதலாம் ஆண்டு நிறைவதற்குள் பரிகாரத்தைச் செய்யலாமா?

- கோவிந்தராஜ், திருச்சி.

யாருக்கு உடல்நிலை சரியில்லையோ, அவர்தான் மருந்து சாப்பிட வேண்டும். அவரது சார்பாக பெற்றோர் மருந்து சாப்பிட்டால் நோயாளியின் உடல்நிலை குணமாகிவிடுமா? அதுபோலத்தான் பரிகாரங்களும். விவரம் தெரியாத குழந்தையாக இருந்தால் பெற்றோர் பரிகாரம் செய்யலாம். உங்கள் மகனுக்கு புத்திர பாக்கியம் வேண்டுமெனில் அவர்தான் பரிகாரத்தைச் செய்ய வேண்டும். நீங்கள் செய்வதால் எந்த பலனும் இல்லை. பூசம் நட்சத்திரம், கடக ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மருமகளின் ஜாதகப்படி தற்போது சுக்கிர தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. ரேவதி நட்சத்திரம், மீன ராசி, மகர லக்னத்தில் உங்கள் மகன் பிறந்திருப்பதாக நீங்கள் அனுப்பியுள்ள ஜாதகம் சொல்கிறது. அதே நேரத்தில் அவர் பிறந்த நேரம் அதிகாலை 03.03 மணி என்று தெள்ளத் தெளிவாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. புரட்டாசி மாதம் அதிகாலை வேளையில் பிறப்பவருக்கு மகர லக்னம் என்பது வரவே வராது. அவசரகதியில் ஜாதகத்தை கணித்த ஜோதிடர் மதியம் 03.03 மணி என்ற கணக்கில் ஜாதகத்தை எழுதியுள்ளார். முதலில் உங்கள் மகனின் ஜாதகத்தை சரியாக கணித்து வைத்துக் கொள்ளுங்கள்.

கடக லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகத்தில் புத்ர ஸ்தானத்தைக் குறிக்கும் ஐந்தாம் வீட்டில் சனி அமர்ந்திருக்கிறார். மூன்றாம் வீட்டில் சூரியன் - புதன் - கேது இணைந்திருப்பதும் பலவீனமான நிலையே. இருந்தாலும் ஐந்தாம் பாவக அதிபதி செவ்வாய் ஏழில் உச்சம் பெற்றிருப்பதால் பிள்ளைப்பேறு பெறுவதற்கான வாய்ப்பு உண்டு. மாதந்தோறும் வருகின்ற அஷ்டமி நாட்களில் விரதம் இருந்து ஸ்ரீ கிருஷ்ணனை பூஜித்து வணங்கி வரச் சொல்லுங்கள். அவர்கள் இருவரும் இந்தியா வரும்பொழுது வீட்டினில் வைத்து சந்தான கோபால ஹோமத்தினைச் செய்வதோடு வெள்ளிப் பிரதிமையினால் ஆன ஸ்ரீ கிருஷ்ண விக்கிரகத்தை தானம் செய்யுங்கள். உங்கள் தந்தையின் முதல் வருட சிரார்த்தத்திற்கும் உங்கள் மகன் செய்ய வேண்டிய பரிகார பூஜைக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. சிரார்த்தம் வருகின்ற நாளில் செய்யாமல் அதற்கு முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ வேறொரு நாளில் செய்வதால் எந்தவித தவறும் இல்லை. குறிப்பாக செவ்வாயும் அஷ்டமியும் இணைகின்ற நாளிலோ அல்லது வெள்ளியும் அஷ்டமியும் இணைகின்ற நாளிலோ பரிகார பூஜையை செய்து முடியுங்கள். கண்ணனின் திருவருளால் குழந்தைப்பேறு என்பது உங்கள் மகனுக்கு நிச்சயமாகக் கிடைக்கும்.

Related Stories: