தெருக்கூத்து குழு ஒன்றை நடத்தி வருகிறார், சங்கரபாண்டியன். தெருக்கூத்துநிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வரும் தரகர் ஆண்ட்ரூஸ் மேற்பார்வையில், வளர்ப்புத்தாயின் ஆதரவில் இருக்கும் தீப்தி ராஜ், சங்கரபாண்டியனின் குழுவில் இணைந்து நடனமாடுகிறார். பிறகு அவரையே காதலிக்கிறார். ஆனால், தனது அம்மா யார் என்று கண்டுபிடித்து, அவர் குற்றமற்றவர் என்று நிரூபித்த பிறகே திருமணம் செய்வேன் என்பதில் உறுதியாக இருக்கிறார். இதையடுத்து அவரது அம்மாவைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் சங்கரபாண்டியன் ஈடுபடும்போது, பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவருகிறது. அது என்ன, திருமணம் நடந்ததா என்பது மீதி கதை.
தெருக்கூத்து கலைகள் மற்றும் அக்கலைஞர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ளது. சங்கரபாண்டியன் நடிப்பும், நடனமும் சிறப்பு. தனது கேரக்டரை உணர்ந்து நடித்துள்ளார், தீப்தி ராஜ். பபூன் வேடத்தில் ‘காதல்’ சுகுமார் கவனத்தை ஈர்க்கிறார். துர்கா, தொழிலதிபர், சங்கரபாண்டியனின் அம்மா, தீப்தி ராஜின் வளர்ப்புத்தாய் தாய் உள்பட, நடித்துள்ள அனைவரும் தங்களுக்கு கொடுத்த வேலையைக் கச்சிதமாகச் செய்துள்ளனர்.
அதிகமான பாடல்கள் சலிப்புஏற்படுத்திவிடும் என்பதை இசை அமைப்பாளர் சரவணன் யோசித்துஇருக்க வேண்டும். பின்னணி இசை காட்சிகளுக்கு வலிமை சேர்த்துள்ளது. 45 ஆறுகளை மையப்படுத்திய பாடல் காட்சி சிறப்பு. ஒளிப்பதிவாளர் ராஜா கே.பக்தவச்சலத்தின் கேமரா பலம் சேர்த்துள்ளது. அழிந்து வரும் தெருக்கூத்து கலைகள் மற்றும் அவர் களின் அவல நிலையை எஸ்.டி.குணசேகரனின் எழுத்து அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது. நாட்டுப்புறக்
கலையின் மேன்மையைச் சொல்லி இருக்கிறார், இயக்குனர் ஆர்.முத்து வீரா. அதை வலிமையான காட்சிகளின் மூலம் இன்னும் கூட அழுத்தமாகச் சொல்லி இருக்கலாம்.