அனந்தனுக்கு 1000 நாமங்கள்

177. மஹாசக்தயே நமஹ: (Mahaashakthaye namaha)

பத்ரிநாத்தில் வியாசர், ஜைமினி, காசக்ருத்ஸ்னர், பாதரி, ஆச்மரத்யர் உள்ளிட்ட முனிவர்கள் அமர்ந்து “இறைவனை அறிவது எப்படி?” என்பது குறித்து விவாதித்து வந்தார்கள். அப்போது வியாசர்,  “வேதங்களின் சித்தாந்தம் எதுவோ, அதுதான் இறைவனைப்பற்றி நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய கொள்கையாகும்! வேதத்தைத் தவிர வேறு எந்த வழியாலும் இறைவனை அறிய இயலாது!” என்றார்.

அப்போது குறுக்கிட்ட ஜைமினி, “எந்த ஒரு பொருளுக்கும் காரணப் பொருள் ஒன்று இருக்க வேண்டும் என்பது நியதி. ஒரு பானை இருந்தால், அதைச் செய்த ஒரு குயவர் இருக்க வேண்டுமல்லவா? அந்த அடிப்படையில், இந்த உலகத்திற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும். அது தான் இறைவன் என்று ஊகம் செய்ய இயலுமே! இவ்வாறு ஊகத்தினாலேயே எளிமையாக இறைவனை அறிய வழி இருக்கையில், ஏன் வேதத்தைக் கொண்டு மட்டுமே இறைவனை அறிய முடியும் என்று கூறுகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு வியாசர், “இறைவனுடைய இருப்பை இவ்வாறு ஊகத்தினாலே ஸ்தாபிப்பதில் பல இடர்ப்பாடுகள் இருக்கின்றன.

நீங்கள் சொன்ன உதாரணத்தில், பானையைச் செய்த குயவருக்குத் துணி நெய்வதிலோ அல்லது வேறு சில துறைகளிலோ கல்வி அறிவோ திறமையோ இருப்பதில்லை. ஆகவே, இந்த உதாரணத்தை இறைவனோடு பொருத்திப் பார்த்தால், இறைவனும் குயவரைப் போல ஏதேனும் ஒரு துறையிலோ அல்லது சில துறைகளிலோ வல்லவர் என்ற நிலை கிடைக்கலாமே தவிர எல்லாம் அறிந்த இறைவனை இந்த ஊகத்தின் மூலம் நிருபிக்க இயலாது!” என்றார். மேலும், “வீடுகள், அரண்மனைகள், மாட மாளிகைகள் போன்ற கட்டிடங்கள் கொத்தனார், ஆசாரி, மின்னியல் வல்லுனர், குழாய்ச் செப்பனிடுபவர் உள்ளிட்ட பலரால் சேர்ந்து படைக்கப் பட்டிருப்பதை நாம் பார்க்கிறோம்.

இவ்வுதாரணத்தை இறைவனோடு பொருத்தினால், பல கடவுள்கள் இணைந்து கூட்டணியாக உலகைப் படைத்திருக்கலாம் என்று சொல்ல வேண்டி வரலாம், ஒரே இறைவன் உலகைப் படைத்தார் என்பதை நிரூபிக்க இயலாது. அது மட்டுமின்றி, பானைக்கு மூலப்பொருள் களிமண், படைப்பாளி குயவர். ஆனால் உலகத்துக்குப் படைப்பாளியும் இறைவனே, மூலப்பொருளும் இறைவனே. படைப்பவரே காரணப் பொருளாகவும் இருந்து, காரியப் பொருளாகவும் மாறுவதை எந்த உதாரணத்தாலும் விளக்க இயலாது. அதனால் தான், வேதம் ஒன்றினாலேயே இறைவனை உணர முடியும்! தர்க்கமோ வாதமோ செய்து இறைவனின் இருப்பை நிரூபிக்க இயலாது!” என்று வியாச பகவான் கூறினார்.

(மறைந்த காவியக் கவிஞர் வாலி அவர்கள், “God is a fact; can be approved, cannot be proved” என்று சொன்னதும் இதனோடு இணைத்து நோக்கத்தக்கது.) அப்போது பாதரி முனிவர், “சிலர் தர்க்கம் செய்து இறைவன் இல்லை என்று வாதிடுகிறீர்களே...” என்று கேட்க, “எப்படி இறைவன் இருக்கிறான் என்பதைத் தர்க்கத்தினாலே ஸ்தாபிக்க முடியாதோ, அவ்வாறே இறைவன் இல்லை என்பதையும் தர்க்கத்தினாலே ஸ்தாபிக்க முடியாது. ஏனென்றால், இறைவன் இல்லை என்று சொல்லும்போது, ‘எங்கே இல்லை?’ ‘எப்போது இல்லை?’ என்று சில கேள்விகள் எழும். ‘நான் பார்த்த எந்த இடத்திலும் இறைவன் இல்லை’ என்று சொன்னால், ‘நான் பார்க்காத இடங்களில் எல்லாம் இறைவன் இருக்கிறார்’ என்று தான் அதற்குப் பொருள்.

‘இப்பொழுது இறைவன் இல்லை’ என்று சொன்னால், ‘நேற்று இறைவன் இருந்தார்’, ‘வருங்காலத்தில் இறைவன் இருப்பார்’ என்று பொருள்படும். ‘பேனா இல்லை’ என்று ஒருவன் சொன்னால், ‘அவனிடம் பேனா இல்லை’ என்று தான் பொருளே ஒழிய, ‘உலகில் பேனாவே இல்லை’ என்று பொருளாகாது அல்லவா? அவ்வாறே ‘இறைவன் இல்லை’ என்று சொன்னாலும், ‘உலகில் இறைவன் இல்லை’ என்று பொருள் இல்லை. ‘இறைவனை அறியும் பக்குவம் சொல்பவனுக்கு இல்லை’ என்றே பொருள். எனவே ‘இறைவன் இல்லை’ என்று சொல்லும் வார்த்தைகளுக்குள்ளும் ‘இறைவன் உள்ளார்’ என்ற வார்த்தை மறைந்திருக்கிறது!” என்றார் வியாசர்.

இக்கருத்துக்களைத் தொகுத்து பிரம்ம சூத்திரத்தின் மூன்றாம் சூத்திரமான “சாஸ்த்ர யோநித்வாத்” என்ற சூத்திரத்தில் வியாசர் கூறுகிறார். பிரம்ம சூத்திரத்தில் வியாசர் விளக்கியது போல், உலகுக்குத் திருமாலே படைப்பாளியாகவும், அவரே காரணப் பொருளாகவும் உள்ளார். நாம் ஒரு பொருளைத் தயாரிக்க வேறு பொருட்களின் உதவியை நாடுகிறோம். ஆனால் திருமாலோ வேறு யாருடைய உதவியையும் நாடாமல், தன்னிலிருந்து தானே உலகைப் படைக்கிறார். அத்தகைய பெரும் சக்தி பொருந்தியவராக விளங்குவதால், திருமால் ‘மஹாசக்தி:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 177-வது திருநாமம். “மஹாசக்தயே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் பக்தர்களை ஆற்றல் மிக்கவர்களாகத் திருமால் ஆக்கி அருள்வார்.

178. மஹாத்யுதயே நமஹ: (Mahaadhyuthaye namaha)

காஞ்சிபுரத்தில் பிரம்மதேவர் பெரும் வேள்வி ஒன்றைச் செய்தார். வைதீக தர்மத்தில் எந்த ஒரு வேள்வி செய்தாலும், மனைவி உடன் இல்லாமல் செய்யக் கூடாது என்ற விதி உள்ளது. ஆனால் பிரம்மாவுக்கும் சரஸ்வதிக்கும் இடையே சிறிய மனஸ்தாபம் ஏற்பட்டுவிட்டது. அதனால் யாகம் செய்யும் போது, பிரம்மாவுடன் சரஸ்வதி இல்லை. (“நதிகளுள் எந்த நதி சிறந்தது? கங்கையா? யமுனையா? சரஸ்வதியா?” என்று தேவர்களோடும் முனிவர்களோடும் விவாதித்துக் கொண்டிருந்த பிரம்மா, “சரஸ்வதி தேவியின் அம்சமான சரஸ்வதி நதியை விட, திருமாலின் பாதத்திலிருந்து தோன்றிய கங்கை தான் புனிதமானது!” என்று தீர்ப்பளித்தார்.

தன்னைவிடக் கங்கை புனிதமானவள் என்ற பிரம்மாவின் தீர்ப்பால் வருத்தமடைந்த சரஸ்வதி, பிரம்மாவை விட்டுப் பிரிந்து சென்று, சரஸ்வதி நதிக்கரையில் தவம் புரிந்து வந்தாள்.) அதற்கு மாற்று ஏற்பாடாகத் தனது மற்ற இரண்டு மனைவிகளான சாவித்ரி, காயத்ரி என்ற இருவருடன் இணைந்து யாகம் செய்தார். பிரம்மாவின் யாகத்தைத் தடுக்க நினைத்த அசுரர்கள், சரஸ்வதி தேவியிடம் சென்று, “உங்களை விட்டுவிட்டு சாவித்ரியோடும் காயத்ரியோடும் பிரம்மா யாகம் செய்கிறார். நீங்கள் அதைத் தடுக்க வேண்டாமா?” என்று கேட்டார்கள். ஏற்கெனவே பிரம்மாவின் மேல் கோபத்திலிருந்த சரஸ்வதி தேவி, மேலும் கோபம் கொண்டாள். தனது சக்தியால் சந்திரன், சூரியன் இருவரின் ஒளியும் காஞ்சிபுரத்தில் விழாதபடி செய்தாள்.

அதனால் காஞ்சி நகரையே இருள் சூழ்ந்தது. வேள்வித் தீயைத் தவிர வேறு எதையும் பிரம்மாவால் காணமுடியவில்லை. அந்த வேள்வித் தீயைக் கூட மறைத்து விட வேண்டும் என்று நினைத்தாள் சரஸ்வதி. அதற்காக ‘மகானலன்’ என்ற அசுரனை உருவாக்கினாள். அவன் வேள்வித் தீயைச் சூழ்ந்து கொண்டு அதன் ஒளி மங்கிப் போகும்படிச் செய்தான். என்ன செய்வதென்று தெரியாமல் இருட்டில் தத்தளித்த பிரம்மா, திருமாலை வேண்டினார். அப்போது அங்கே திடீரென ஒரு விளக்கு தெரிந்தது. அந்த விளக்கின் ஒளி அங்கிருந்த இருளை எல்லாம் ஓட்டி விட்டது. அந்த விளக்கொளி பட்ட மாத்திரத்தில் மகானலன் என்ற அந்த அசுரன் எரிந்து சாம்பலானான். அந்த விளக்கை உற்று நோக்கினார் பிரம்மா.

விளக்காக வந்தவர் திருமால் என்பதை உணர்ந்து கொண்டார். திருமாலுக்கு நன்றி தெரிவித்து விட்டுத் தன் யாகத்தைத் தொடர்ந்து நடத்தினார். இவ்வாறு பிரம்மாவின் யாகத்தைக் காத்த திருமால், இன்றும் காஞ்சியில் ‘திருத்தண்கா’ எனப்படும் திவ்யதேசத்தில் தீபப்பிரகாசர் எனப்படும் விளக்கொளிப் பெருமாளாகக் கோயில் கொண்டுள்ளார். விஸ்வாமித்ர கோத்திரத்தைச் சேர்ந்த அந்தணர்கள் பலர் பின்னாளில் அந்தத் திருத்தண்காவுக்கு குடிபெயர்ந்தார்கள். யாகங்களில் பயன்படுத்தப்படுகின்ற ‘தூப்புல்’ எனப்படும் தூய தர்ப்பைப் புல்லுக்கு ‘விஸ்வாமித்ரம்’ என்று பெயருண்டு. அதனால் விஸ்வாமித்ரர் குலத்தில் பிறந்தவர்கள் ‘தூப்புல் குலத்தார்’ என்று அழைக்கப்பட்டார்கள்.

தூப்புல் குலத்தார் அதிக எண்ணிக்கையால் வாழ்ந்தபடியால், திருத்தண்கா திவ்ய தேசமும் ‘தூப்புல்’ என்று பெயர் பெற்றது. திருமலையில் குன்றின்மேல் இட்ட விளக்காக விளங்கும் திருமலையப்பன், விளக்கொளிப் பெருமாள் குடிகொண்டிருக்கும் தூப்புல் திருத்தலத்தில், விஸ்வாமித்ர குலத்தில், வேதாந்த தேசிகனாக அவதாரம் செய்தார். வேதாந்தங்கள் கூறும் அரிய கருத்துக்களை எல்லாம் தம்முடைய விளக்க உரைகளாலும், எளிய ஸ்லோகங்களாலும், தமிழ் நூல்களாலும் விளக்கி, வேதாந்தத்துக்கே ஒரு விளக்காக வேதாந்த தேசிகன் திகழ்ந்தார். தூப்புலில் தோன்றிய விளக்கொளிப் பெருமாள் பிரம்மாவின் யாகத்துக்கு இடையூறு செய்த புற இருட்டைப் போக்கினார்.

அதே தூப்புலில் திருமலையப்பன் தேசிகனாக அவதரித்து, வேதாந்தத்தை விளக்கும் விளக்காய் விளங்கி, அறியாமை என்னும் அக இருட்டைப் போக்கினார். இவ்வாறு இருளைப் போக்கும் ஒளிபடைத்தவராகத் திருமால் விளங்குவதால், ‘மஹாத்யுதி:’ என்றழைக்கப்படுகிறார். ‘த்யுதி:’ என்றால் ஒளி என்று பொருள். ‘மஹாத்யுதி:’ என்றால் மிகுந்த ஒளிபடைத்தவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 178-வது திருநாமம். “மஹாத்யுதயே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமையும்படித் திருமால் அருள்புரிவார்.

179. அநிர்தேச்யவபுஷே நமஹ: (Anirdheshyavapushe namaha)

“ஞானத்தில் தன் பேச்சு, பிரேமத்தில் பெண் பேச்சு” என்ற ரீதியில், ஆழ்வார்கள் ஞான நிலையில் பாடும் போது ஆண் தன்மையிலும், எம்பெருமானிடத்தில் காதல் முற்றிய நிலையில் பாடும் போது பெண் தன்மையிலும் (நாயகி பாவத்திலும்) பாசுரங்கள் பாடுவார்கள். அந்த வகையில், பெண் தன்மையை ஏறிட்டுக் கொண்ட நம்மாழ்வார், திருமாலிடம் ஊடல் கொண்டாள். நாயகி நாயகன்மீது கோபித்துக் கொண்டு, “இனி நீ என்னுடன் பேசாதே, பழகாதே!” என்று கூறுவதற்கு ஊடல் என்று பெயர். அதை இலக்கியங்களில் ‘பிரணய கலகம்’ என்று சொல்வார்கள். அவ்வாறு ஊடல் கொண்ட நம்மாழ்வார்,

“மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார் முன்பு நானதஞ்சுவன்

மன்னுடை இலங்கை அரண்காய்ந்த மாயவனே

உன்னுடைய சுண்டாயம் நான் அறிவன் இனி அதுகொண்டு செய்வதென்என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ”

என்று பாடி, இனிமேல் உன்னோடு சேர மாட்டேன் என்று திருமாலைப் பார்த்துச் சொல்லிவிட்டார். இப்படிப் பிரிந்து சென்ற ஆழ்வாரைத் துரத்திச் சென்ற திருமால், திருவிண்ணகர் என்று அழைக்கப்படும் ஒப்பிலியப்பன் கோயிலில் ஆழ்வாருக்குத் தனது அழகையும் மேன்மைகளையும் குணங்களையும் காட்டி, “என்னுடன் சேருங்கள்!” என்று ஆழ்வாரை அழைத்தார். அவ்வாறு தன்னைத் தேடி வந்து ஆதரித்த ஒப்பிலியப்பனின் குணங்களை அனுபவித்த நம்மாழ்வார், தனக்கு அனைத்து வித உறவுகளாகவும் ஒப்பிலியப்பன் ஒருவனே இருப்பதாகப் பாடினார் நம்மாழ்வார்:

“என்னப்பன் எனக்காயிகுளாய் என்னைப் பெற்றவளாய்

பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்

மின்னப் பொன்மதிள்சூழ்த் திருவிண்ணகர்ச் சேர்ந்த அப்பன்தன்னொப்பாரில்லப்பன் தந்தனன் தனதாள் நிழலே”

“உடலுக்குப் பிறப்பைத் தரும் சாதாரணத் தந்தையைப் போல் அல்லாது, ஆத்மாவுக்கு ஞானமென்னும் பிறப்பைத் தரும் தந்தையாகவும், செவிலித்தாய் ஒரு குழந்தையை வளர்ப்பது போல், அடியேனுடைய பக்தியை வளர்த்துத் தந்த செவிலித்தாயாகவும், தன் துன்பங்களைப் பொருட்படுத்தாமல், தன் குழந்தையின் நலனைப் பேணும் பாசம் மிக்கத் தாயாகவும், பொன், மணி, முத்து இவைகளைப் போல் விலைமதிக்கமுடியாத பொருளாகவும், திருவிண்ணகரில் விளங்கும் ஒப்பிலியப்பன், நான் விலகிச் சென்றாலும் என்னைத் தேடி வந்து அருள்புரிந்தவன்.

ஒரு மனிதரால் ஒரே நேரத்தில் இன்னொருவருக்குத் தந்தையாகவும், வளர்ப்புத் தாயாகவும், பெற்ற தாயாகவும், பொன்னாகவும், மணியாகவும், முத்தாகவும் இருக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. ஆனால் திருமால் ஒரே நேரத்தில் எனக்கு அனைத்துமாக இருக்கிறார். அதனால் அவர் தன்னொப்பாரில் அப்பன். அவருக்கு நிகர் யாருமில்லை!” என்பது இப்பாடலின் கருத்து. ஒரே நேரத்தில் எப்படி திருமாலால் நம்மாழ்வாருக்கு அனைத்து விதமான உறவுகளாகவும் இருக்க முடிகிறது என்றால், மனிதர்களின் உடல் என்பது ஐம்பூதங்களால் ஆனது.

அதனால் அது கால, தேச, வர்த்தமானங்களுக்கு உட்பட்டதாகும். ஆனால் திருமாலின் திருமேனியோ ஐம்பூதங்களால் ஆனதல்ல. ஞானம், பலம், வீர்யம், சக்தி, ஐச்வர்யம், தேஜஸ் உள்ளிட்ட ஆறு குணங்களால் ஆனது. கால, தேச, வர்த்தமானங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டது. இப்படிப்பட்ட தன்மைகளைக் கொண்டதால் திருமாலின் திருமேனி ஒப்பில்லாததாகவும், வர்ணனைக்கு அப்பாற்பட்டதாகவும் விளங்குகிறது. எனவே அந்த ஒப்பில்லா அப்பன் ஒரே நேரத்தில் தனது ஞானம், பலம், வீர்யம், சக்தி, ஐச்வர்யம், தேஜஸ் அனைத்தையும் நம்மாழ்வாருக்குக் காட்டி, அவருக்குத் தந்தையாக, பெற்ற தாயாக, வளர்ப்புத் தாயாக, பொன்னாக, மணியாக, முத்தாக ஒரே நேரத்தில் விளங்குகிறார்.

‘அநிர்தேச்ய’ என்றால் வர்ணிக்க முடியாத என்று பொருள். ‘வபு:’ என்றால் உடல் என்று பொருள். வர்ணிக்க முடியாத ஒப்பற்ற தன்மையோடு கூடிய திருமேனியைக் கொண்டமையால் திருமால் ‘அநிர்தேச்யவபு:’ என்றழைக்கப்படுகிறார் அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 179-வது திருநாமம். “அநிர்தேச்யவபுஷே நமஹ:” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தையும் அழகையும் திருமால் அருள்வார்.

180. ஸ்ரீமதே நமஹ: (Shreemathe namaha)

சோழநாட்டில் வாழ்ந்த ஊன்பொதி பசுங்குடையார் என்ற புலவர் வறுமையால் மிகவும் வாடினார். அதனால், சோழன் இளஞ்சேட்சென்னியின் அரசவைக்குச் சென்று, வடக்கிலுள்ள வடுக மன்னர்களையும், தெற்கிலுள்ள பரத மன்னர்களையும் அவன் வீழ்த்திய வரலாற்றைப் பாராட்டி ஒரு பாடல் பாடினார். அதுவே புறநானூற்றின் 378-வது பாடல்:

“தென் பரதவர் மிடல் சாய,

வட வடுகர் வாள் ஓட்டிய,

தொடை அமை கண்ணி, திருந்துவேல்

தடக் கை,

கடுமா கடைஇய விடுபரி வடிம்பின்,

நல்தார் கள்ளின் சோழன் கோயில்,

புதுப்பிறை அன்ன சுதைசேய் மாடத்து,

பனிக்கயத் தன்ன நீள்நகர் நின்று, என்

அரிக்கூடு மாக்கிணை இரிய ஒற்றி,

எஞ்சா மரபின் வஞ்சி பாட...”

இப்பாடலைக் கேட்டு மகிழ்ந்த சோழன், புலவருக்கு ஏராளமான தங்கக் காசுகளையும் தங்க நகைகளையும் பரிசாகத் தந்தான். அவற்றையெல்லாம் ஒரு மாட்டுவண்டியில் தன் வீட்டுக்குக் கொண்டு வந்தார். அதைக் கண்ட அவரது மனைவி, எல்லையில்லாத மகிழ்ச்சியடைந்தாள். நகைகளையே அதுவரையில் கண்டிராத அந்தப் பெண், அப்போதே அனைத்தையும் அணிந்து கொள்ள விரும்பினாள். நகைகளை அணிந்து கொள்ளத் தெரியாத அவள், தோடுகளை மூக்கிலும், கொலுசுகளைத் தோள்களிலும், வளையல்களைக் காதுகளிலும், ஆரங்களை இடுப்பிலும் அணிந்திருந்தாள். அதைக் கண்டு அவ்வூர்ப் பெண்கள் அவளைக் கேலி செய்தார்கள்.

“அன்று அரக்கனாகிய ராவணன் சீதையை அபகரித்துச் சென்ற போது, சீதை தனது நகைகளை எல்லாம் ஒரு துணியில் கட்டிக் கீழே வீசி எறிந்தாள். கிஷ்கிந்தையில் இருந்த குரங்குகள் அந்த மூட்டையைக் கண்டெடுத்தன. அதிலுள்ள நகைகளைக் கண்டு வியந்த அந்தக் குரங்குகள், சீதையின் தோடுகளைத் தங்கள் மூக்கிலும், அவளது கொலுசுகளைத் தங்கள் தோள்களிலும், வளையல்களைக் காதுகளிலும், ஆரங்களை இடுப்பிலும் அணிந்து கொண்டன. அந்தக் குரங்குகள் செய்துகொண்ட அலங்காரம் போலுள்ளது இப்போது உன் கோலம்!” என்று புலவரின் மனைவியைப் பார்த்து எல்லோரும் சொன்னார்களாம். இக்கருத்தைப் பாடலின் இரண்டாம் பகுதியில் புலவர் தெரிவிக்கிறார்:

“... எமக்கென வகுத்த அல்ல, மிகப்பல,

மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை

தாங்காது பொழிதந்தோனே அது கண்டு,

இலம்பாடுழந்த என் இரும்பேர் ஒக்கல்,

விரல்செறி மரபின செவித் தொடக்குநரும்,

செவித்தொடர் மரபின விரல் செறிக்குநரும்,

அரைக்கமை மரபின மிடற்று யாக்குநரும்,

மிடற்றமை மரபின அரைக்கு யாக்குநரும்,

கடுந்தெறல் இராமனுடன் புணர்சீதையை

வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை,

நிலம்சேர் மதரணி கண்ட குரங்கின்

செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந்தாஅங்கு,

அறாஅ அருநகை இனிது பெற்றிகுமே

இருங்கிளைத் தலைமை எய்தி,

அரும்படர் எவ்வம் உழந்ததன் தலையே.”

இதிலிருந்து, சாதாரண மனிதர்களான நாம் ஆபரணங்களைச் சரியான விதத்தில் அணிந்தால் தான் நன்றாக இருக்குமே ஒழிய, தாறுமாறாக அணிந்து கொண்டால் நன்றாக இருக்காது என்பது புரிகிறது. ஆனால் திருமாலுக்கோ அவர் ஆபரணங்களை எப்படி அணிந்து கொண்டாலும் அது அழகாகத் தான் உள்ளது. மன்னார்குடியில் ராஜகோபாலன் வெண்ணெய்த் தாழி அலங்காரத்தின் போது, ராக்கொடியை இடுப்பில் அணிந்து கொள்வார். ராக்கொடி என்பது தலையில் அணிய வேண்டிய ஆபரணம் என்றாலும், ராஜகோபாலன் இடுப்பில் அணிந்தாலும் அது அழகாகத்தான் இருக்கும். கஜேந்திரனைக் காக்க ஓடி வந்த போதும், அவசரத்தில் ஆபரணங்களைத் தவறான முறையில் அணிந்து வந்தார் திருமால். ஆனால் அதுவும் அவருக்கு அழகாகத்தான் இருந்தது.

“பூணித் தொழுவினில் புக்குப் புழுதி

அளைந்த பொன்மேனி

காணப் பெரிதும் உகப்பன் ஆகிலும்

கண்டார் பழிப்பர்”

என்ற பாசுரத்தில் பெரியாழ்வார், மாடு மேய்த்து விட்டுப் புழுதி படிந்த முகத்தோடு கண்ணன் வருகையில், அவன் முகத்திலுள்ள மண் துகள்கள் கூட அவனது முகத்துக்கு ஆபரணமாக, அழகாக இருப்பதாகப் பாடுகிறார். எந்த ஆபரணத்தை எந்த முறையில் அணிந்தாலும், அது திருமாலுக்கு அழகாகத்தான் இருக்கிறது.

‘ஸ்ரீ:’ என்பதற்கு ஆபரணங்கள் என்றொரு பொருளுண்டு. ஆபரணங்களோடு அழகாக விளங்கும் திருமால் ‘ஸ்ரீமான்’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 180-வது திருநாமம்.

“ஸ்ரீமதே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குத் தனித்தன்மையும் ஆளுமைத் திறனும் வளரும்படித் திருமால் அருள்புரிவார். (‘ஸ்ரீமான்’ என்ற திருநாமம் ஸஹஸ் ரநாமத்தில் மூன்று இடங்களில் வருகிறது. 22-வது திருநாமமாக வரும் ஸ்ரீமானுக்கு அழகு நிறைந்தவன் என்று பொருள், 180-வது திருநாமமான ஹமானுக்கு ஆபரணச் சேர்த்தி நிறைந்தவன் என்பது பொருள். மேலும், 222-வது திருநாமமாகவும் ஹமான் வரவுள்ளது.)

(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

படங்கள்-மது ஜெகதீஷ்

Related Stories: