நவராத்திரி நாயகியர்

ஈசனுக்கு ஒரு ராத்திரி, சிவராத்திரி. ஆனால் அம்பிகைக்கு நவராத்திரி. நவம் என்றால் ஒன்பது. ஒன்பது ராத்திரிகள் அம்பிகையை வழிபட்டு, வித விதமான சாப்பாடுகள், பலகாரங்கள், பட்சணங்கள், சுண்டல் வகைகள் எனச் செய்து சாப்பிடுவதோடு அல்லாமல் விநியோகமும் செய்வது வழக்கம். வருடம் தோறும் புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படும் பண்டிகை நவராத்திரியாகும். அன்னை சக்திதேவியை ஒன்பது நாட்களும் வெவ்வேறு ரூபங்களில் மக்கள் வழிபடுகின்றனர்.

Advertising
Advertising

மகிஷாசுரனை தேவியானவள் ஒன்பது நாட்கள் போரிட்டு வெற்றி வாகை சூடிய நாளே விஜயதசமியாக கொண்டாடப்படுகிறது. எனவே தேவியை விரதமிருந்து ஒன்பது நாட்கள் வழிபட்டு, 10ம் நாள் வெற்றியை கொண்டாடி விரதத்தை முடித்துக்கொள்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.வட மாநிலங்களின் முக்கிய நகரங்களில் துர்கா பூஜையாகவும் விஜயதசமி அழைக்கப்படுகிறது. தேவியின் வெற்றியை கொண்டாடும் விதமாக அன்னையை பிரமாண்டமாக அலங்கரித்து ஊர்வலமாக கொண்டு செல்லும் வழக்கம் இன்றளவும் இருந்து வருகிறது.

அம்பிகையின் அருளை பெறுவதற்கு பல விரதங்கள் அனுஷ்டிக்கப்பெற்றாலும் அவற்றுள் நவராத்திரி விரதமே மிகவும் சிறப்பானது. நவநாயகியாக போற்றப்படும் அன்னை மற்றும் அவள் அருள் பாலிக்கும் இடங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.m பாரதி, சரஸ்வதி, சாரதாதேவி, ஹம்ஸவாகினி, ஜகதீ, வாணீஸ்வரி, கவுமாரி, பிரம்மசாரிணி, புத்திதாத்ரீ, வரதாயிணி, ஷடத்ரகண்டா, புவனேஸ்வரி முதலிய பன்னிரெண்டு பெயர்கள் சரஸ்வதிக்கு வழங்கப்படுகின்றன.

* கடலூர் பாடலீஸ்வரர் கோயிலில் அம்மன் பெரிய நாயகி பிராகாரத்தில் பராசக்திக்கு சந்நதி உள்ளது. பராசக்திக்கு எதிரில் உள்ள வாசல் நவராத்திரியின்போது மட்டும் திறக்கப்படும். எனவே இதை நவராத்திரி வாசல் என்றழைக்கிறார்கள். இந்நாட்களில் பராசக்தி இந்த வாசல் வழியாக புறப்பட்டு சிவன் சந்நதியில் சென்று அவரை வலம் வந்து மீண்டும் சந்நதிக்குத் திரும்புகிறாள்.

* கோட்டயம் - சங்கனாச்சேரி சாலையிலுள்ள பனிச்சிக்காடு சரஸ்வதி கோயிலில் நவராத்திரியின்போது சரஸ்வதியை குழந்தை வடிவில் அலங்காரம் செய்து பூஜை செய்கிறார்கள்.

* கல்விக்கடவுள் சரஸ்வதிக்கென்று இந்தியாவிலேயே இரண்டு இடங்களில் தான் தனிக்கோயில்கள் உள்ளன. தஞ்சை மாவட்டம் திருவாரூர் பூந்தோட்டம் என்ற ஊருக்கருகிலுள்ள கூத்தனூர் மற்றும் திருநெல்வேலி டவுன் கீழரத வீதியிலுள்ள விஜயசரஸ்வதி கோயில் ஆகிய இரண்டுதான் சரஸ்வதிக்கான தனிக்கோயில்கள். விஜயதசமி அன்று பல ஊர்களிலிருந்தும் பக்தர்கள் இங்கு வந்து வித்யாவியாசம் செய்தும், அம்பாளின் பாதங்களில் பேனாவை வைத்தும் சரஸ்வதி அருள் பெறுவர்.

* சரஸ்வதிக்கு பவள மல்லிகை தவிர மற்ற எல்லா மலர்களாலும் அர்ச்சனை செய்யலாம்.

* வெவ்வேறு  விதமாக அருள்புரிந்த நிலையில் நவதுர்க்கைகளாக அன்னை போற்றப்படுகிறாள். பிறவிப் பெருங்காட்டை அழிப்பவள்-வனதுர்க்கை, திரிபுரம் எரிக்கச்சென்றவள்-சூலினி துர்க்கை, அக்கினிக்கும், வாயுவுக்கும் அருளியவள்-ஜாத வேதா துர்க்கை, அனல் பிழம்பாக காட்சியளிப்பவள்-ஜுவாலா துர்க்கை, சிவனைச்சாந்தப்படுத்தியவள்-சாந்தி துர்க்கை, ஒளியாக நிற்பவள்-தீப துர்க்கை, அமுதம் பங்கிட உதவியவள்- ஆசரி துர்க்கை, ராமர் வழிபட்ட துர்க்கை-லவண துர்க்கை.

* சட்டீஸ்கர் மாநில பஸ்தார் ஜில்லாவில் உள்ள ஜகதல்பூர் என்ற ஊரில் உள்ளது தண்டேஸ்வரி மாயி திருக்கோயில். இந்தப் பகுதியிலுள்ள பழங்குடி மக்கள் இணைந்து தசரா பண்டிகையை 75 நாட்கள் கொண்டாடுகின்றனர். இந்தப் பகுதியிலுள்ள பழங்குடியினர் தங்களது பிரிவுக்கு தக்கபடி தெய்வ சிலைகளுடன் வருவர். பின் அதை தண்டேஸ்வரி அம்மன் முன் வைத்து தசரா விழாவைத் துவக்குகின்றனர். இந்த திருவிழா தொடர்ந்து 75 நாட்கள் நடக்கும். இதைப் போன்ற தசரா திருவிழா இந்தியாவில் வேறு எங்குமே நடப்பதில்லை.

* தம்பதி சமேதராக அருள்பாலிக்கும் சரஸ்வதி தேவியை ஆஜ்மீரிலுள்ள புஷ்கர் கோயிலிலும், தஞ்சாவூர் மாவட்டம் கண்டியூரில் உள்ள சிரகண்டீஸ்வரர் கோயிலிலும் காணலாம். பிரம்மனுடன் காட்சி அளிக்கும் சரஸ்வதி இங்கு வீணை எதுவுமின்றி அபூர்வமான திருக்கோலத்தில் தரிசனமளிக்கிறாள்.

* திருநெல்வேலியிலிருந்து தாழையூத்துக்குச்செல்லும் வழியில் கங்கை கொண்டான் திருத்தலத்திற்கு அருகில் உள்ள பாராஞ்சேரி என்னும் இடத்தில் படுத்துள்ள கோலத்தில் சயன துர்க்கை அருள்புரிகிறாள்.

* சுருட்டப்பள்ளி பள்ளி கொண்ட ஈஸ்வரன் கோயிலில் பிடாரியின் மீது நிற்கும் கோலத்தில் துர்க்கை அருள்புரிகிறாள்.

* விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் திருவக்கரை திருத்தலத்தில் அருள்புரியும் வக்ரகாளியம்மன் கோயிலில் அருள்புரியும் துர்க்கை தலை சாய்ந்த கோலத்துடன் வடக்கு நோக்கி பிரமாண்டமான தோற்றத்தில் அருள்புரிகிறாள்.

* நாகை மாவட்டம் கடலங்குடி சிவன் கோயிலில் உள்ள சரஸ்வதி நெற்றிச்சுட்டி, கிரீடம், முத்துமாலைகள், வளையல்கள், கொலுசுகள் ஆகியவற்றுடன் அற்புதமாகக் காட்சி அளிக்கிறாள்.

*நாகை மாவட்டம் அம்பர் மாகாளம் என்ற திருத்தலத்தில் மகாகாளி சூலினி துர்க்கையாக அருள்புரியும் துர்க்கையை அர்ச்சகர்கள் தொட்டு அர்ச்சிப்பதில்லை. ஒரு சிறு கோலால் மாலை அணிவிப்பார்கள். ஆடைகள் அணிவிப்பதும் அப்படியே.

* சிதம்பரத்தில் உள்ள தில்லைக் காளிக்கு வெள்ளை நிறப்புடவை-பார்டர் இல்லாததை அணிவிக்கிறார்கள்.

- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி

Related Stories: