அம்பலத்தரசே! அருமருந்தே!

இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன்-30

உலக வரலாற்றில் பாரதத்தின் பக்தி உணர்வை மேலோங்கிய விதத்தில் எடுத்துக்காட்டும் மேன்மை மிகு ஆலயமாக விளங்கிச் சிறக்கிறது சிதம்பரம் நடராஜர் திருக்கோயில். ‘கருவுற்ற நாள் முதலாக நின் பாதமே காண்பதற்கு உருகிற்று என் உள்ளம்’ என ஒவ்வொருவரும் சஞ்சித வினைகளைப் போக்கும் குஞ்சித பாதனைக் கும்பிட்டு குறை அனைத்தும் நீங்கப்பெறுகிறார்கள். ‘கோயில்’ என்று சொன்னாலே அந்தத் தமிழ்ப் பதம் - அழகுப்பதம் தூக்கி ஆடும் சிதம்பரத்தையே குறிக்கும்.

‘சிதம்பரம்’ சிவபெருமானின் பழைமையான திருத்தலம். திருவாரூர்த் தலமும் அத்தகைய தொன்மைச்சிறப்பு வாய்ந்ததுதான். சிதம்பரமா? திருவாரூரா? எது பழமை? எனக் குறிப்பிட்டுச்  சொல்ல முடியாமல் தேவாரம் எப்படித் தேனோழுகப் பாடுகிறது என்பதைத் தெரிந்து கொள்வோமா ?

‘மாடமொடு மாளிகைகள் மல்கு தில்லை

மணிதிகழும் அம்பலத்தே மன்னிக் கூடத்தை

ஆடுவான் புகுவதற்கு முன்னோ பின்னோ

அணி ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே !’’

பழைமையான கோயில் தான் சிதம்பரம்!

ஆனால் என்று புதுமையாக தகதகக்கும் தங்கப் பந்தலுடன் விளங்குகிறது!

‘கனக சபை மேவும் எனது குருநாதா’

- என திருப்புகழ் பாடுகிறது. வெள்ளி அம்பலமாக மதுரையும், ரத்தின சபையாக திரு ஆலங்காடும், தாமிர சபையாக திருநெல்வேலியும், சித்திர சபையாக குற்றாலமும், பொன்னம்பலமாக தில்லையும் பொலிகின்றது.

‘தூய செம் பொன்னினால் எழுதி வேய்ந்த

சிற்றம்பலக் கூத்தனை’

என திருநாவுக்கரசர் போற்றுகிறார். பஞ்ச சபைகளில் ஒன்றாக விளங்கும் சிதம்பரத்தின் கோயிலுக்குள்ளேயும் மேலும் பஞ்ச சபைகள் விளங்குகிறது. நடராஜர் அற்புதத் தனிக் கூத்து இயற்றும் சிற்றம்பல சிற்சபை! அதற்கு முன்னுள்ள எதிரம்பலம் கனகசபை! கொடிமரத்தின் தெற்கே உள்ள ஊர்த்துவ தாண்டவரின் சந்நதி நிருத்தசபை! சோமாஸ்கந்தர் எழுந்தருளும் திருமேனியுள்ள சந்நதி தேவசபை! ஆயிரங்கால் மண்டபம் ராஜசபை! இவ்வைந்து சபைகளும் சோழப் பேரரசர்களால் திருப்பணி செய்யப் பெற்றுள்ளன என்பதைக் கட்டிட அமைப்பே நமக்குக் காட்டி விடுகிறது. இறைவன் அருவமாகவும், அருவுருவமாகவும், உருவமாகவும் விளங்குகிறான் என்பதைச் சிதம்பரத் தலமே சிறப்பாகச் சுட்டிக் காட்டுகிறது.

அருவமே சிதம்பர ரகசியம் ! அருவுருமே ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரராகப் பெயர் சூடிய ஸ்படிக லிங்கம்! உருவமே கூத்தியற்றும் நடராஜர் வடிவம்! அது மட்டுமல்ல! பிரம்மா, திருமால், சிவன் என மும்மூர்த்திகளும் முறையாகப் பூசை ஏற்கும் திருத்தலம் இது ஒன்றே! சிதம்பரத்தில் விளங்கும் பெருமாள் சந்நதி ‘தில்லை திருச்சித்திரக்கூடம்’ என்பதாகப் பெயர் பெற்று பொலிகிறது. ஆனந்த நடராஜராகிய சிவபெருமானையும், அறிதுயில் கொள்ளும் கோவிந்தராஜப் பெருமாளையும் ஒருங்கே கண்டு தெய்வீக ஒருமை கொள்ளும் எண்ணப் பாங்கை திண்ணமாக வளர்ப்பது தில்லைத் திருத்தலம் ஒன்றே ! மேலும் வியப்பிற்குரிய ஒரு விஷயம். இங்கு பெருமாளை முற்காலத்தில் பூஜை புரிந்தவர்கள் ‘தில்லை மூவாயிரவர்’ என சிறப்பிக்கப் படும் தீட்சிதர்களே !

‘மூவாயிர நான்மறையளர் நாளும் முறையால் வணங்க’

- என திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழியில் பேசுகிறார்.

‘அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த

அணிமணி ஆசனத்திருந்த அம்மானை’

தில்லைநகர் திருச்சித்திரக் கூடந்தன்னில் தரிசித்துக் குதூகலம் அடைகிறார் குலசேகர ஆழ்வார். தில்லை அம்பலத்தில் நடம்புரியும் கூத்தப் பெருமான் சந்நதியை அடைந்து தென்புறமாக எதிரிலுள்ள படிகளில் ஏறி நின்றால்  நடராஜர் திருத்தோற்றத்தையும், உறங்குவான் போல் யோகு செய்யும் ெபருமாள் தோற்றத்தையும் ஒருங்கே காணலாம். அப்படிக் கண்டு ஆனந்தக் கண்ணீர் சொரிந்த அடியவர் யார் தெரியுமா? அவரே வேதவிற்பனமும்  வடமொழிப் புலமையும் நிறைந்த மகான் அப்பைய தீட்சிதர். தில்லையில் ஓரிடத்தில் நின்று சைவ வைணவ தெய்வங்களைத் தரிசித்த அப்பைய தீட்சிதர் சமரச பாவத்தில் வடமொழித் தோத்திரங்கள் பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. உருவத் திருமேனியாகி ஒளிரும் நடராஜரைப் போற்றிபாடாத புலவர்களே இல்லை எனலாம்.

‘குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற்

குமிண் சிரிப்பும்

பனித்த சடையும் பவளம்போல் மேனியில்

பால் வெண்ணீறும்.

இனித்தமுடைய எடுத்த பொற் பாதமும்

காணப் பெற்றால்

மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த

மா நிலத்தே !’

திருநாவுக்கரசரின் திருப்பாட்டு நடராஜரை எவ்வளவு அழகாக நெஞ்சினிக்கும் தமிழில் நிழற்படம் பிடித்துவிட்டது பார்த்தீர்களா ? காலையில் கதிரவன் உதிப்பதைக் காண்கிறார் கம்பர். சூரியனின் வீரியக்கதிர்கள் சுற்றி விரிகின்றன. நடராஜர் வடிவத்தை அதில் கண்டு ஆனந்திக்கிறார் கவியரசர் கம்பர்.

( தொடரும்)

Related Stories: