அனந்தனுக்கு 1000 நாமங்கள் !!

173. மஹோத்ஸாஹாய நமஹ: (Mahothsaahaaya namaha)

வேதாந்த தேசிகனிடம் ஒரு பண்டிதர், “இறைவனுக்கு உருவம் உண்டா? இல்லையா?” என்று கேட்டார். “இறைவனுக்கு எப்போதுமே அழகான உருவம் உண்டு. உலகம் படைக்கப்படுவதற்கு முன்பும் சரி, பின்பும் சரி, இறைவன் அழகான திருமேனியோடு விளங்குகிறார்!” என்றார் தேசிகன். “எதை வைத்துச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டார் பண்டிதர். “முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே என்று நம்மாழ்வார் பாடியுள்ளார். உலகைப் படைக்கும் போது கார் மேகம் போன்ற வண்ணத்துடன் இறைவன் இருந்தான் என்பது இப்பாடலின் பொருள். உருவம் இருந்தால் தானே வண்ணம் இருக்க முடியும்? உருவமே இல்லாத ஒருவனுக்கு வண்ணம் எப்படி இருக்கும்? எனவே உலகின் படைப்புக்கு முன்பிருந்தே, அநாதி காலமாக, கார்முகில் போன்ற நிறம் கொண்ட அழகிய உருவத்தோடு தான் இறைவன் விளங்குகிறார்!” என்றார் தேசிகன்.

“இறைவனுடைய கார்முகில் வண்ணத்தின் பின்னணி என்ன?” என்று கேட்டார் பண்டிதர். அதற்கு தேசிகன், “மையார் கருங்கண்ணியான மகாலட்சுமியின் திருக்கண்களின் பார்வை எப்போதும் திருமாலின் திருமேனியில் பட்டபடியால், அக்கண்களின் கறுப்பு நிறம் அவரது திருமேனியில் படிந்து விட்டது. அதுமட்டுமின்றி, அவரது நாபியிலுள்ள தாமரை மலரை மொய்க்கும் வண்டுகளின் கருமை நிறம் திருமால் திருமேனியில் பட்டு, அது மேலும் கருமையானது. அது மட்டுமா? தோளிணை மேலும், நன் மார்பின் மேலும், சுடர்முடி மேலும், தாளிணை மேலும் திருமால் அணிந்திருக்கும் துளசி மாலையின் பசுமை திருமாலின் கறுப்பு நிறத்தை மேலும் வளர்த்து விட்டது. கறுப்பு நிறம் கொண்ட யமுனை நதியின் கரையில் கிருஷ்ணாவதாரத்தில் எப்போதும் விளையாடிக் கொண்டிருந்தபடியால், யமுனையின் கருமை திருமால் திருமேனியில் படிந்து, அது மேலும் கறுப்பாகி விட்டது.

இவைகள் ஒருபுறமிருக்க, உலகைப் படைக்க முற்பட்ட போது, திருமால் ஆனந்தத்தால் கருமை நிறத்தை அடைந்தார்!” என்றார் தேசிகன். “அது என்ன? ஆனந்தத்தால் கருமை நிறம் பெற்றாரா?” என்று கேட்டார் பண்டிதர்.“ஆம் உலகம் படைக்கப்படுவதற்கு முன், உயிர்களாகிய நாம் அனைவரும் அறிவற்றவர்களாக, ஜடப் பொருட்களுக்குச் சமமானவர்களாகச் சிந்தையும் கரணங்களும் சிதைந்து கிடந்தோம். நாம் அந்நிலையிலேயே இருந்திருந்தால், இறைவனை அடைவதற்காகக் கர்ம யோகமோ, ஞான யோகமோ, பக்தி யோகமோ, சரணாகதியோ எதையுமே நம்மால் செய்ய இயலாதல்லவா? அதனால், நம்மேல் கருணை கொண்ட இறைவன், உலகைப் படைத்து நமக்கு உடலையும், அறிவையும், சாஸ்திரங்களையும், ஆசார்யர்களையும் வழங்கினார். அனைத்தையும் நமக்குத் தந்து விட்டு, இனி இந்த ஜீவாத்மாக்கள் இந்த உடல், அறிவு உள்ளிட்டவற்றை நல்ல வழியில் பயன்படுத்தி, கர்ம, ஞான, பக்தி யோகங்களையோ அல்லது சரணாகதியையோ செய்து நம்மை வந்து அடையப் போகிறார்கள் என்று எண்ணி மகிழ்ந்தார் இறைவன்.

மிகவும் மகிழ்ச்சி அடைந்தால் உடல் கறுத்துப் போய்விடும் என்று சொல்வார்கள். ஏற்கெனவே கருங்கண்ணியான லட்சுமியின் பார்வையாலும், உந்தித் தாமரையை மொய்க்கும் வண்டுகளாலும், துளசி மாலையின் பசுமையாலும், யமுனையின் பிரதிபலிப்பாலும் கருமையாக இருந்த திருமாலின் திருமேனி உலகைப் படைத்த உற்சாகத்தாலும் மகிழ்ச்சியாலும் மேலும் கருமையானது. இவற்றைக் கருத்தில் கொண்டு தான் ஆழ்வார், ‘முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே!’ என்று பாடினார். ஆண்டாளும், ‘ஊழி முதல்வன் உருவம் போல் மெய்க்கறுத்து’ என்று பாடினாள். இவ்வாறு நாம் நற்கதி அடையவேண்டும் என்ற உற்சாகத்துடன் உலகைப் படைத்து, அந்த உற்சாகத்தால் மேலும் கருமையடைந்த திருமாலின் கறுப்புநிறம் நம்மைக் காக்கட்டும்!” என்று  கூறினார் தேசிகன்.

இக்கருத்தை ஒரு ஸ்லோக வடிவில், தேசிகன் “தத்வ முக்தா கலாபம்” என்னும் நூலில் கூறுகிறார்:

“லக்ஷ்மீ நேத்ரோத்பல ஸ்ரீஸதத பரிசயாத் ஏஷ ஸம்வர்தமான:

நாபீ நாலீக ரிங்கன் மதுகர படலீ தத்த ஹஸ்தாவலம்ப: |

அஸ்மாகம் ஸம்பதோகாத் அவிரல துளஸீ தாம ஸஞ்ஜாத பூமா

காளிந்தீ காந்தி ஹாரீ கலயது வபுஷ: காலி மா கைடபாரே: ||”

இவ்வாறு நாம் அனைவரும் நற்கதி அடையவேண்டும் என்ற எண்ணத்தில் பெரும் உற்சாகத்தோடு உலகைப் படைத்தபடியால், திருமால் ‘மஹோத்ஸாஹ:’ (மஹா + உத்ஸாஹ: = மஹோத்ஸாஹ:) என்றழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 173-வது திருநாமம். ‘உத்ஸாஹ:’ என்னும் வடமொழிச் சொல்லின் தமிழாக்கமே ‘உற்சாகம்’. “மஹோத்ஸாஹாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு அவர்கள் கடமைகளைச் சிறப்பாகச் செய்வதற்குரிய  உற்சாகத்தைத் திருமால் அருள்வார்.

174. மஹாபலாய நமஹ:  (Mahaabalaaya namaha)

சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள், தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள். அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன், “கர்ணா! இனி இவர்களின் அனைத்துச் சொத்துக்களும் நமக்கே சொந்தம். அக்னி பகவானின் பரிசாக அர்ஜுனன் பெற்ற காண்டீவ வில்லை இனி நீ எடுத்துக் கொள்!” என்றான். ஆனால் கர்ணனோ காண்டீவத்தை வாங்க மறுத்துவிட்டான். “நான் எனது வலிமையிலும் திறமையிலும் நம்பிக்கை வைத்திருக்கிறேன். அவற்றைக் கொண்டு அர்ஜுனனை வெல்வேன். தேவர்களின் அருளால் கிட்டிய இந்த வில் எனக்குத் தேவையில்லை!” என்று சொன்னான் கர்ணன். “ஆஹா! நீ அல்லவோ சுத்த வீரன்! அர்ஜுனன் காண்டீவத்தை நம்புகிறான். நீ உன் திறமையை நம்புகிறாய்!” என்று கர்ணனைத் துரியோதனன் பாராட்டினான்.

அர்ஜுனன் வனவாச காலத்தில் இந்தச் சம்பவத்தை வியாசரிடம் சொல்லி மிகவும் வருந்தினான். இதைக் கேட்டுச் சிரித்த வியாசர், “கர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்ததற்கு வேறு காரணம் உள்ளது! அதை அவன் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை!” என்றார். “அது என்ன?” என்று கேட்டான் அர்ஜுனன். “நேரம் வரும் போது சொல்கிறேன்!” என்றார் வியாசர். பல ஆண்டுகள் கழிந்தன. மகாபாரத யுத்தம் முடிந்து, தர்மபுத்திரர் முடிசூடிய பின், கண்ணனைச் சந்திக்க அர்ஜுனன் துவாரகைக்குச் சென்றான். “அர்ஜுனா! நான் எனது அவதாரத்தை முடித்துக்கொண்டு வைகுண்டம் செல்லவுள்ளேன். அதனால் எனது அரண்மனையிலுள்ள பெண்களை எல்லாம் நீ பாதுகாப்பாக அழைத்துக் கொண்டு இந்திரப்ரஸ்தத்துக்குச் சென்றுவிடு!” என்று கூறினான் கண்ணன்.

கனத்த மனத்துடன் கண்ணனிடமிருந்து விடைபெற்ற அர்ஜுனன், தனது தேரில் பெண்களை அழைத்துக் கொண்டு சென்றான். வழியில் சில கொள்ளையர்கள் தேரை நிறுத்தி அர்ஜுனனைத் தாக்கினார்கள். அவர்களைப் பதிலுக்குத் தாக்குவதற்காகக் காண்டீவத்தை எடுக்க முற்பட்டான் அர்ஜுனன். ஆனால் அவனால் காண்டீவத்தைத் தூக்க முடியவில்லை. பற்பல பேரரசர்களை வீழ்த்தியவனும், யாராலும் வீழ்த்தமுடியாதவன் என்று போற்றப்படுபவனும், வில் விஜயன் எனப் பெயர் பெற்றவனுமாகிய அர்ஜுனனை அந்தச் சாதாரணத் திருடர்கள் வீழ்த்திவிட்டார்கள். தன் வாழ்வில் முதன்முறையாகத் தோல்வியைச் சந்தித்தான் அர்ஜுனன். அதுவும் சாதாரணத் திருடர்களிடம்!

வெட்கத்தால் தலைகுனிந்த நிலையில், இந்திரப்ரஸ்தத்துக்கு நடந்தான் அர்ஜுனன். அப்போது அவன் எதிரில் வந்தார் வேத வியாசர். “அர்ஜுனா! நீயும் உன் சகோதரர்களும் பூமியில் இருந்து புறப்படுவதற்கான காலம் வந்து விட்டது. இப்போது நடந்த சம்பவம் அதை நினைவூட்டவே ஏற்பட்டது!” என்று கூறினார் வியாசர். “கண்ணனே புறப்பட்ட பின், நாங்கள் பூமியில் இருந்து என்ன செய்யப் போகிறோம். நாங்களும் புறப்படத் தாயார். ஆனால், என் மனதில் பெரும் ஐயம் எழுந்துள்ளது! இதுவரை நான் காண்டீவத்தைப் பொம்மை போலக் கருதி அனாயாசமாகக் கையில் ஏந்தினேன். ஆனால் இப்போது அது மலை போல் கனமாக உள்ளது. என்னால் அதைத் தூக்க முடியவில்லையே! என்ன காரணம்?” என்று கேட்டான் அர்ஜுனன்.

அதற்கு வியாசர், “உன்னால் இந்தக் காண்டீவத்தை நிச்சயமாகத் தூக்க முடியாது. கண்ணன் உன்னுடன் இருந்தவரை இந்தக் காண்டீவத்தை ஏந்துவதற்கான பலத்தை அவன் உனக்கு அளித்தான். அவனது அருளால் தான் நீ காண்டீவத்தைப் பொம்மை போலத் தாங்கினாய். இப்போது அவன் பூமியை விட்டுச் சென்று விட்டதால், இதை உன்னால் தூக்க முடியவில்லை!” என்றார். மேலும், “சூதாட்டத்தில் நீ காண்டீவத்தை இழந்த போது, அதைக் கர்ணன் வாங்க மறுத்தானே, ஏன் தெரியுமா? கண்ணனின் அருள்பெற்ற நீ காண்டீவத்தைத் தூக்கிவிட்டாய். ஆனால் கண்ணனின் அருள்பெறாத கர்ணனால் இந்தக் காண்டீவத்தை அசைக்கக் கூட இயலாது. இது கர்ணனுக்கும் நன்றாகத் தெரியும்.

அந்தக் காரணத்தை வெளியே சொல்ல விரும்பாத கர்ணன், கௌரவமாகத் தான் சுத்த வீரன் என்றும் இந்த வில்லை நம்பித் தான் இல்லை என்றும் கூறிச் சமாளித்து, காண்டீவம் தனக்கு வேண்டாம் என்று கூறினான்!” என்றார் வியாசர்.இதிலிருந்து பலசாலிகள் என்று போற்றப்படுபவர்களுக்கும் கூட அந்த பலத்தைத் திருமால் தான் வழங்குகிறார் என்பதை நாம் உணர முடிகிறது. இக்கருத்தை “ஸத்வம் ஸத்வவதாம் அஹம்” (பலசாலிகளின் பலமாக நானே இருக்கிறேன்) என்று கண்ணன் கீதையில் கூறுகிறான். இத்தகைய மகா பலத்தோடு கூடியவராகத் திருமால் விளங்குவதால் ‘மஹாபல:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 174-வது திருநாமம். “மஹாபலாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு மிகச் சிறந்த உடல்வலிமையையும் மனவலிமையையும்  திருமால் அருளுவார்.

175. மஹாபுத்தயே நமஹ:  (Mahaabuddhaye namaha)

யக்ஞமூர்த்தி என்ற பண்டிதர், வேத வாக்கியங்கள் தொடர்பாகச் சம்பிரதாய ரீதியில், ராமாநுஜரோடு வாதப்போர் புரிய வந்தார். “ராமாநுஜரே! நான் மட்டும் உங்களிடம் தோற்றுவிட்டால், என் சம்பிரதாயத்தை விட்டுவிட்டு, உங்கள் சம்பிரதாயத்துக்கு வந்துவிடுகிறேன். உங்கள் பெயரை என் பெயரோடு இணைத்துக் கொள்கிறேன். என்னோடு வாதம் செய்ய நீங்கள் தயாரா?” என்று கேட்டார். “தயார்!” என்றார் ராமாநுஜர். வாதம் தொடங்கியது. பாரதப் போர் போல் அந்த வாதப் போர் பதினேழு நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. “இறைவனும் ஜீவாத்மாவும் ஒன்று” என்ற ரீதியில் யக்ஞமூர்த்தியும், “இறைவன் வேறு, ஜீவாத்மா வேறு” என்ற ரீதியில் ராமாநுஜரும், பற்பல வேத வாக்கியங்களை மேற்கோள் காட்டி வாதிட்டார்கள்.

பதினேழாம் நாள் வாதத்தில், சாந்தோக்ய உபநிஷத்திலுள்ள “ஏகம் ஏவ அத்விதீயம்” என்ற வாக்கியத்தை மேற்கோள் காட்டினார் யக்ஞமூர்த்தி. “இறைவன் ஒருவனே இருக்கிறான், அவனுக்கு இரண்டாவதே இல்லை என்று இவ்வாக்கியம் தெள்ளத்தெளிவாகச் சொல்கிறதே. அவ்வாறிருக்க இறைவனைக் காட்டிலும் வேறுபட்டதாக ஜீவாத்மா எவ்வாறு இருக்க முடியும்? அதனால் தான் சொல்கிறேன் இறைவனும் ஜீவாத்மாவும் ஒன்றே!” என்றார் யக்ஞமூர்த்தி.அதற்கு விடையளிக்க முடியாமல் திகைத்தார் ராமாநுஜர். அதற்குள், மாலை நேரம் வந்தமையால், “நாளை விவாதத்தை தொடர்வோம்!” என்று சொல்லி விட்டுத் தம் மாலை அநுஷ்டானங்களுக்குச் சென்றார் ராமாநுஜர். வெற்றிச் செருக்கு பொங்கும் முகத்துடன் யக்ஞமூர்த்தி சபையிலிருந்து வெளியேறினார். கனத்த மனத்துடன் தமது மடத்திலிருக்கும் வரதராஜப் பெருமாளிடம் வந்தார் ராமாநுஜர்.

“எம்பெருமானே! நம்மாழ்வார், நாதமுனிகள், ஆளவந்தார் போன்ற ஓராண் வழி ஆசார்யர்கள் மூலமாக நீ தந்த இந்தச் சம்பிரதாயத்தை நீயே அழிக்கலாம் எனத் திட்டமிட்டு விட்டாயோ? இவ்வளவு உயர்ந்த சம்பிரதாயம் என் குற்றத்தால் தோற்கலாமா? நீ என்ன லீலை செய்யத் திட்டமிட்டுள்ளாய்?” என்று பெருமாளிடம் புலம்பிவிட்டு இரவு உணவு உட்கொள்ளாமல் உறங்கச் சென்றார். அன்று இரவு ராமாநுஜர் கனவில் தோன்றிய வரதராஜப் பெருமாள், “ஆளவந்தாருடைய ‘ஸித்தி த்ரயம்’ உங்களுக்குத் தெரியாதா?” என்று கேட்டார். அடுத்த நாள் காலை விழித்தெழுந்த ராமாநுஜர், ஸித்தி த்ரயத்திலுள்ள கருத்துக்களைச் சிந்தித்துப் பார்த்தார். “ஏகம் ஏவ அத்விதீயம் - இறைவன் ஒருவனே இருக்கிறான், இரண்டாவது இல்லை என்றால் இரண்டாவது பொருளே இல்லை என்றோ, ஜீவாத்மாக்களே இல்லை என்றோ பொருளல்ல. இறைவன் ஒப்பற்ற ஒருவனாக இருக்கிறான். அந்த ஒப்பில்லா அப்பனைப் போல இரண்டாவது நபர் யாரும் இல்லை என்று தான் பொருள்” என்று ஆளவந்தார் கூறிய விளக்கம் ராமாநுஜரின் நினைவுக்கு வந்தது.

பெருமாளுக்கு நன்றி தெரிவித்து விட்டுப் புதுப்பொலிவோடும் கம்பீரத்தோடும் சபைக்கு வந்தார் ராமாநுஜர். அவர் வந்த தோரணையைப் பார்த்தவுடனேயே அஞ்சிய யக்ஞமூர்த்தி, நேராக ராமாநுஜரின் திருவடிகளில் வந்து விழுந்தார். “என் தோல்வியை நான் ஒப்புக் கொள்கிறேன்!” என்றார். “இன்னும் ஏகம் ஏவ அத்விதீயம் என்ற வாக்கியதுக்கு நான் விளக்கமே அளிக்கவில்லையே!” என்றார் ராமாநுஜர். “இல்லை! உங்கள் முகத்தைப் பார்த்தவுடனேயே எனக்கு எல்லாம் புரிந்து விட்டது. என் தோல்வியை ஒப்புக் கொள்கிறேன். இன்று முதல் உங்கள் சீடனாகிறேன். உங்கள் பெயரை என் பெயரோடு இணைத்துக் கொள்கிறேன்!” என்றார் யக்ஞமூர்த்தி.

“இன்று இந்த வாதத்தில் நான் வென்றேன் என்றால், எனது புத்தியால் நான் வெல்லவில்லை. இதற்கான புத்தியை அடியேனுக்குத் தந்தவர் வரதராஜப் பெருமாள். அதனால் அந்த வரதராஜப் பெருமாளின் திருநாமமான அருளாளப் பெருமாள் என்பதையும் உங்கள் பெயரோடு இணைத்துக் கொள்வது தான் பொருத்தமாக இருக்கும்!” என்றார் ராமாநுஜர். அதன்படி, வரதராஜரின் திருநாமமாகிய ‘அருளாளப் பெருமாள்’, ராமாநுஜரின் திருநாமமாகிய ‘எம்பெருமானார்’ இரண்டும் இணைக்கப்பட்டு, ‘அருளாளப் பெருமாள் எம்பெருமானார்’ என்று அவருக்குத் திருநாமம் உண்டானது.

இவ்வாறு ராமாநுஜர் போன்ற மாபெரும் குருமார்களுக்கும் வாதம் செய்வதற்குத் தேவையான அறிவைத் தரக்கூடிய ஞானநிதியாகத் திருமால் திகழ்வதால், ‘மஹாபுத்தி:’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 175-வது திருநாமம். “மஹாபுத்தயே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் மாணவர்களுக்கு ஞாபக சக்தி நன்கு வளரும்படித் திருமால் அருள்புரிவார்.

176. மஹாவீர்யாய நமஹ:  (Mahaaveeryaaya namaha)

(‘அதீந்த்ரிய:’ என்ற 171-வது திருநாமம் தொடங்கி, ‘அமேயாத்மா’ என்ற 181-வது திருநாமம் வரையிலான 11 திருநாமங்கள் வைகுண்டநாதனின் திருக்கல்யாண குணங்களை விளக்கவந்தவை.) ‘திருமந்திரம்’ என்று போற்றப்படும் எட்டெழுத்து மந்திரத்தை உலகுக்கு உபதேசிக்க எண்ணினார் திருமால். அதனால், நாராயண ரிஷி என்னும் குருவாகவும், நர ரிஷி என்ற சீடராகவும் இரு அவதாரங்களைத் திருமால் ஒரே நேரத்தில் எடுத்தார். பத்ரிநாத்தில் நரனுக்கு நாராயணன் திருமந்திரத்தை உபதேசித்தார். உலகில் குருவும் சீடரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக இருவரும் வாழ்ந்து காட்டினார்கள்.

ஒருமுறை பத்ரிநாத்துக்குச் சென்ற இந்திரன், அங்கே தவம் செய்து கொண்டிருந்த நர-நாராயண ரிஷிகளைக் கண்டான். அவர்களைத் திருமாலின் அவதாரம் என்று உணராத இந்திரன், “யாரோ இரண்டு ரிஷிகள் கடுந்தவம் புரிகிறார்களே! இவர்கள் பெரும் தவ வலிமையைச் சம்பாதித்து, அதனால் நமது இந்திரப் பதவியை வந்து பிடித்து விட்டால் என்ன செய்வது?” என அஞ்சினான். அதனால் மன்மதனை அழைத்த இந்திரன், “அங்கே இரண்டு ரிஷிகள் தவம் செய்து கொண்டிருக்கிறார்கள் பார்! அவர்களின் தவத்தை உடனடியாகக் கலைத்துவிடு!” என்றான். “முதலில் குருவின் தவத்தைக் கலைக்கிறேன். பிறகு சீடனைப் பார்த்துக் கொள்ளலாம்!” என்று சொன்ன மன்மதன், அரம்பை, மேனகை உள்ளிட்ட தேவமாதுகளை நாராயண ரிஷியின் முன் நடனமாட வைத்தான். அப்படியே தென்றல் காற்றும், அதில் மல்லிகைப்பூ மணமும் வீசும்படிச் செய்தான். தனது கரும்பு வில்லில் இருந்து கணைகளை நாராயண ரிஷியின் மேல் தொடுத்தான். ஆனால் இவை எதுவுமே நாராயண ரிஷியைப் பாதிக்கவில்லை. அவர் தொடர்ந்து தவத்தில் ஈடுபட்ட வண்ணமிருந்தார்.

இதைக் கண்ட மன்மதனும் தேவமாதுகளும் அஞ்சினார்கள். “இவர் சாதாரண மனிதர் அல்லர் போலும்! இந்திரனின் பேச்சைக் கேட்டுக் கொண்டு இவரிடம் விளையாடி விட்டோமே! பரமசிவன் நம்மை எரித்துச் சாம்பல் ஆக்கியது போல், இவரும் எரித்து விடுவாரோ!” என மன்மதன் அஞ்சினான். ஆனால் புன்னகையுடன் மன்மதனைத் தன் அருகே அழைத்த நாராயண ரிஷி, “இந்திரப் பதவியை அடைவது என் நோக்கமல்ல. உலகில் குருவும் சீடனும் வாழ வேண்டிய முறையை விளக்குவதற்காக, ஸர்வேச்வரனான நானே இங்கே குருவாகவும் சீடனாகவும் அவதரித்துத் தவம் செய்து கொண்டிருக்கிறேன். அதனால், இந்திரனின் பதவிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று அவனிடம் போய்ச் சொல்!” என்று கூறினார்.

நாராயண ரிஷி தமது தொடையைத் தம் கைகளால் தட்டினார். அவரது தொடையில் இருந்து ஒரு தேவமாது தோன்றினாள். வடமொழியில் ‘ஊரு’ என்றால் தொடை என்று பொருள். ஊருவிலிருந்து தோன்றியமையால் அவள் ‘ஊர்வசி’ என்று பெயர் பெற்றாள். அவளது அழகைக் கண்டதும் மன்மதனும் அவனது நண்பர்களும் மயங்கிவிட்டார்கள். “உன்னை மயக்க எண்ணி நாங்கள் வந்தோம். ஆனால் நீ உருவாக்கிய பெண்ணைக் கண்டு நாங்கள் மயங்கி விட்டோமே! வேட்டையாட வந்தவனே வேட்டையாடப் பட்ட கதை போல் ஆகி விட்டதே!” என்று வெட்கத்துடன் சொன்னான் மன்மதன். “இந்தப் பெண்ணை இந்திர லோகத்துக்கு அழைத்துச் செல். இவள் இனி அங்கேயே வசிப்பாள்!” என்று நாராயண ரிஷி சொல்ல, மன்மதனும் ஊர்வசியை இந்திர லோகத்துக்கு அழைத்துச் சென்றான்.

பத்ரிநாத்தில் இருந்து இந்திர லோகம் செல்லும் வழியில் கைலாசத்தில் பரமசிவனைச் சந்தித்தான் மன்மதன். மன்மதனைப் பார்த்துச் சிரித்தபடி, “நாராயண ரிஷியிடம் உன் கணைகள் தோற்று விட்டனவா?” என்று கேட்டார்

பரமசிவன். “ஆம்!” என்று வெட்கத்துடன் சொன்னான் மன்மதன். “நான் தவம் புரியும் போதும் நீ என் தவத்தைக் கலைக்கப் பார்த்தாய். நான் காமத்தை வென்றாலும், கோபத்துக்கு வசப்பட்டு விட்டேன். கோபத்தில் உன்னை எரித்தேன். ஆனால் நாராயண ரிஷி, காமம் கோபம் உள்ளிட்ட எதற்கும் ஆளாகாமல் உன்னை வென்று விட்டார் பார்த்தாயா?” என்றார் பரமசிவன். “ஆம்! அவர் எந்த மாறுதலுக்கும் உள்ளாகாமல் தவம் செய்து கொண்டே என்னையும் வென்று விட்டார்!” என்றான் மன்மதன்.

மாறுதலுக்கு உள்ளாகாமல், ஒரே மாதிரியான தன்மையோடு இருக்கும் பண்புக்கு ‘வீர்யம்’ என்று பெயர். திருமால் எப்போதும் மாறாது இருப்பதால் ‘மஹாவீர்ய:’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 176-வது திருநாமம். “மஹாவீர்யாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு மாறாத நற்குணங்களைத் திருமால் அருள்வார்.

(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

Related Stories:

>