விஷ்ணு தலங்களில் உள்ள விநாயகர்

திருவரங்கம்:  ஸ்ரீரங்கத்தில் ப்ரணவாகர விமானத்தின் இடது புறத்தில் உள்ள ஒரு மாடத்தில் விக்னபதி என்ற திருநாமத்துடன் விநாயகர் அருள்கிறார்.

காஞ்சிபுரம்: சின்னக் காஞ்சியில் வரதராஜப் பெருமாள் கோயிலில் கீழ் பிரகாரத்தில் மேடை மீது உள்ள அறையில் விநாயகர் வீற்றிருக்கிறார். இங்கு முழுவதுமாக விபூதி நிறைந்திருக்கும். எனவே இவருக்கு விபூதி விநாயகர் என்று பெயர்.

திருவல்லிக்கேணி: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் சந்நதியில், கோபுர வாசலுக்கு மேல் இடது பக்கமாக வலம்புரி விநாயகர் எழுந்தருளியிருக்கின்றார். அவரது திருமேனியில் வெண்ணெய் சாத்தப்படுகிறது.

வைரக்கண் விநாயகர்: புனேயிலிருந்து 65 கி.மீ.யில் ‘மோர்கான்’ எனும் கிராமத்தில் மயூரேஷ்வர் எனும் பெயரில் ஒரு விநாயகர் இருக்கிறார். ஆதிசங்கரர் பூஜித்த இந்த விநாயகருக்கு வைரத்தில் கண்கள் பொருத்தப்பட்டுள்ளன. குங்குமத்தால் இவருக்கு இடைவிடாமல் அர்ச்சனை செய்யப்படுகிறது.

கருத்து விநாயகர்: நாகர்கோவில் நகரின் ஒரு பகுதியான ‘வடசேரியில்’ ‘கருத்து விநாயகர்’ கோயில் உள்ளது. இக்கோயிலில் பக்தர்கள் எலுமிச்சப்பழம், வெற்றிலை, பாக்கு வைத்து தங்கள் செய்ய நினைக்கும் காரியங்களுக்கு விநாயகப் பெருமானிடம் கருத்து கேட்கின்றனர். குறிப்பால் கருத்தினை அறிந்து, அதை செயல்படுத்தி நன்மை பெறுகின்றனர். அதனால்தான் இவ்விநாயகரை ‘கருத்து விநாயகர்’ என அழைக்கின்றனர்.

மதுரையில் சோமசூரிய கணபதி

மதுரைகீழ ஆவணிமூல வீதியில் உள்ளது பைரவர் கோயில். மதுரை மீனாட்சி அம்மனுக்குக் காவல் தெய்வமான பைரவர் உள்ள இங்கு, சுவாமிக்கு முன்புறம் சோமசூரிய கணபதி உள்ளார். தும்பிக்கையில் சூரியன் மற்றும் பிறைச்சந்திரனுடன் இவர் காட்சி தருவதால், இவர் ‘சோமசூரிய கணபதி’ எனப்படுகிறார். சந்திராஷ்டமம் காலத்தில் இவரை வணங்கினால், சோதனைகள் குறையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பிற கிரக தோஷங்கள் மற்றும் நாகதோஷம் உள்ளவர்கள் இவரை வணங்குவர். எதிரி பயம், பிணி, பீடைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சூரியனும், சந்திரனும் சந்திக்கும் அமாவாசை நாளில் இவருக்கு அபிஷேகங்கள் செய்து வணங்கிட அரிய பல பேறுகளையும் பெறலாம் என்ற நம்பிக்கையில் அன்று விசேஷ பூஜைகள் செய்கிறார்கள் பக்தர்கள்.

மாத்தூர் கலங்காத கண்ட விநாயகர்

சிவகங்கை மாவட்டம், மாத்தூரில் உள்ள ஐந்நூற்றீஸ்வரர் கோயிலில் இருக்கும் விநாயகர் ‘‘கலங்காத கண்ட விநாயகர்’’எனப்படுகிறார். கண்டங்களால் ஏற்படும் தோஷங்களைப் போக்குவதிலும், தன்னை வேண்டும் பக்தர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து பக்தர்களைக் கலங்காமல் காப்பதாலும் இப்பெயரால் அழைக்கப்படுகிறார். கலங்காத கண்ட விநாயகர் கோயில் பிராகாரத்தில் தனி சந்நதியில் காட்சி தருகிறார். இவரது சந்நதி விமானத்தில் இவரது பலவிதமான கோலங்களை குறிக்கும் சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கலங்காத கண்ட விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்து வழிபட்டால் முன் வினைகள் தீரும், குடும்பம் சிறந்து விளங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பூம்புகார் ஸ்ரீசங்கமத்துறை விநாயகர்

நாகை மாவட்டம் ‘பூம்புகார்’ என்றழைக்கப்படும் ‘‘காவிரிப்பூம்பட்டின’’த்தில் தான் குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு கடலோடு சங்கமம் ஆகிறது. காவிரி கடலோடு கலக்கும் இடத்தைத்தான் ‘‘சங்கமத்துறை’’ என்றும், இந்த இடத்தில் குளித்து விட்டு நம்முடைய மூதாதையருக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டால் நமக்கு ஏற்பட்டு இருக்கக்கூடிய பித்ருதோஷங்கள் உள்ளிட்ட தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். காவிரி சங்கமத்துறையில் கோயில் கொண்டுள்ள விநாயகர் ‘‘சங்குமுக விநாயகர்’’ என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். இந்த கோயில் புராதனகாலக் கோயிலாக விளங்கி வருகிறது. இந்த விநாயகர் கோயில் ஏறத்தாழ ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோயிலாகும். இந்த விநாயகரை வணங்கி ஒரு காரியம் ெதாடங்குவதற்கு முன் தேங்காய் உடைத்து வேண்டிக் கொண்டால் எவ்வளவு தடையான காரியமாக இருந்தாலும் அது நிறைவேறும் என்பது உண்மை.

சேலம் ஆத்தூரில் தலையாட்டி பிள்ளையார்

சேலம் மாவட்டம், ஆத்தூரில் உள்ளது தலையாட்டிப் பிள்ளையார் கோயில். இங்குள்ள பிள்ளையார் தனது தலையை சற்றே இடப்புறமாகச் சாய்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். பல்லாண்டுகளுக்கு முன்பு, இக்கோயிலுக்கு அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு ‘‘கெட்டி முதலி’’ என்னும் குறுநில மன்னர் திருப்பணி செய்தார். குறுநில மன்னர் பணிகள் எல்லாம் முடிந்த பிறகு இந்தப் பிள்ளையாரிடம், ‘‘தான் செய்த வேலைகள் எல்லாம் திருப்தியா?’’ என்று கேட்டார் குறுநில மன்னர். அதற்கு இவர் ‘ஆம்’ என்று சொல்வது போல தலையாட்டினாராம். அன்று முதல் இவரை, ‘‘தலையாட்டிப் பிள்ளையார்’’ என்றே மக்கள் அழைக்கின்றனர். புதியதாக ஏதேனும் செயல்கள் தொடங்கும் முன்பு, இவரை வணங்கிச் செய்தால் அவை தங்கு தடையின்றி சிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

Related Stories: