கடந்த 2014ல் காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான மோதலில் வீரமரணம் அடைந்த சென்னையைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து வெளியாகியுள்ள படம், ‘அமரன்’. சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த முகுந்த் வரதராஜன் (சிவகார்த்திகேயன்), ராணுவத்தில் சேர்ந்து கேப்டனாகவும், பிறகு மேஜராகவும் பொறுப்பு வகிக்கிறார். காஷ்மீரில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்ட 44வது ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் குழுவில் இணைகிறார்.
முன்னதாக அவர் தனது நீண்டநாள் காதலி இந்து ரெபேக்கா வர்கீஸை (சாய் பல்லவி), அவரது பெற்றோரை சமாதானப்படுத்தி திருமணம் செய்கிறார். ஒருபுறம் இருவருக்கும் இடையிலான காதல் வாழ்க்கை, அவர்களின் ஒரு மகள், மறுபுறம் காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான முகுந்த் வரதராஜனின் அதிரடி நடவடிக்கைகள், இறுதியில் நாட்டைக் காக்க வீரமரணம் அடைவதே இப்படத்தின் கதை. முகுந்த் வரதராஜனாகவே வாழ்ந்துள்ள சிவகார்த்திகேயனுக்கு இப்படம் ஒரு மைல் கல்.
இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்ற லட்சியத்தில் ஜெயிப்பதிலும், தீவிரவாதிகளை வேருடன் அழிக்கும் உந்துதலும், சாய் பல்லவி மீது கொண்ட காதலும், மகள் மீது செலுத்தும் பாசமும், அவரது மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த உதவியுள்ளது. அவரது இறுதிக்காட்சி நெஞ்சை கனக்க வைக்கிறது. அவரது மனைவியாக வரும் சாய் பல்லவி, இயல்பான நடிப்பில் மிரட்டியிருக்கிறார். இருவருக்குமான ஜோடிப் பொருத்தம் கச்சிதம்.
முகுந்த் வரதராஜனுக்கு பக்கபலமாக இருக்கும் விக்ரம் சிங் கேரக்டரில் புவன் அரோரா சிறப்பாக நடித்துள்ளார். ராகுல் போஸ், கீதா கைலாசம் அந்தந்த கேரக்டர்களில் கச்சிதம். தந்தையின் மரணத்தை அறியாத மகள், ‘அப்பாவுக்கு அடுத்து எப்ப லீவும்மா?’ என்று தாயிடம் கேட்கும் காட்சி கண்கலங்க வைக்கிறது. தீவிரவாதிகள் பற்றி நுணுக்கமாக பேசிய படம், காஷ்மீர் மக்களின் வலியை பற்றியும் அங்கு ராணுவம் செய்யும் அட்டூழியம் பற்றியும் பேசத் தவறியிருக்கிறது.
படத்தின் இன்னொரு ஹீரோ, ஜி.வி.பிரகாஷ் குமார். பாடல்களிலும், பின்னணி இசையிலும் மிரட்டியிருக்கிறார். சி.ஹெச்.சாய் ஒளிப்பதிவு மிகப்பெரிய பலம். காஷ்மீர் தாக்குதல்கள், ராணுவ காட்சிகள் நேர்த்தியாக இருக்கின்றன. அதுபோல் எடிட்டிங், ஸ்டண்ட், கலை இயக்கமும் குறிப்பிடத்தக்கவை. கமர்ஷியல் பக்கம் திரும்பாமல், நாட்டுக்காக உயிர்நீத்த ராணுவ மேஜரின் தியாகத்தைச் சொன்னவிதத்தில், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமிக்கு ராயல் சல்யூட்.