திருமண தடை நீக்கும் வைத்தியநாத சுவாமி

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் சுவேத நதி எனப்படும் வெள்ளாற்றங்கரையில் அமைந்துள்ளது வைத்தியநாதசுவாமி கோயில். இக்கோயிலில் மூலவர் வைத்தியநாதர் என்னும் திருநாமத்துடன் அழைக்கப்படுகிறார். அம்பாள் பெயர் அசனாம்பிகை.

தல பெருமை

பிரம்மனின் மகன் வசிஷ்டர், பூலோகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களும் முக்தியடைய வழிவகை காண வேண்டும் என பிரம்மதேவனிடம் வலியுறுத்தினார். இதையடுத்து, பிரம்மன் அன்னப்பட்சி வடிவம் கொண்டு சிவபெருமானை நாடி சென்றார். ஆனால் அவரை காண முடியவில்லை. அப்போது, விஷ்ணுபெருமான் திட்டக்குடியில் உள்ள வைத்தியநாத சுவாமியை தரிசிக்குமாறு, பிரம்மனிடம் கூறினார். இதையடுத்து பிரம்மதேவன் திட்டக்குடி சென்று வைத்தியநாத சுவாமியை வழிபட்டு, இறைவனின் சன்னிதி முன்பு அசுவமேத யாகம் நடத்தினார். மேலும், சிவபெருமானை நினைத்து தவமும் மேற்கொண்டார். இதனால் மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான், இத்தலத்தில் திருமண கோலத்தில் பிரம்மதேவனுக்கு காட்சி அளித்தார். அப்போது, வைத்தியநாத சுவாமி, அசனாம்பிகையை கண்ட பிரம்மன், தன்னுடைய மகன் வசிஷ்டருடன் சிவன் காலில் விழுந்து வணங்கினார்.

அந்த சமயத்தில் வசிஷ்டருக்கு ஞானப்பிரகாசம் என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசம் செய்யுமாறு சிவபெருமானிடம், பிரம்மதேவர் வேண்டுகோள் வைத்தார். இதை ஏற்ற சிவபெருமான், ‘நமசிவாய’ என்ற பஞ்சாட்சர மந்திரத்தை வசிஷ்டருக்கு கொடுத்தார். இதனால், இக்கோவில் நமசிவாய மந்திரம் உபதேசம் பெற்ற தலமாக பெருமை பெற்று விளங்குகிறது. இந்தக்கோயிலை உருவாக்கியவர் வசிஷ்டமுனிவர் ஆவார்.அவருடைய ஆசிரமத்தில் இருந்த காமதேனு என்ற பசு ஒரு புற்றின் மீது பால்சொறிந்து நின்றது. இதை கண்ட வசிஷ்டர் அந்த புற்றை அகற்றி பார்த்த போது, அங்கு சுயம்புலிங்கம் இருப்பதை கண்டார். அந்த சுயம்புலிங்கத்தை கர்ப்பகிரகமாக கொண்டு, மனுசக்கரவர்த்தி கோவில் கட்டினார். தொடர்ந்து, இரண்டாம் குலோத்துங்க சோழன், ராஜேந்திர சோழன், ராஜராஜசோழன், சுந்தரபாண்டியன் ஆகிய மன்னர்களும், விஜய நகர சாம்ராஜ்யத்தின் வீரகண்ண உடையார், பூபதிராய உடையார் ஆகியோரும் திருப்பணிகள் செய்துள்ளார்களாம்.

 

கோவில் அமைப்பு

கோவில் 3 கோபுரங்களை கொண்டு உள்ளது. முதல் கோபுரத்தின் வழியாக கோவிலுக்குள் நுழைந்தவுடன் கொடிக்கம்பம் உள்ளது. இந்த கோவிலில் விநாயகர், பாலசுப்பிரமணியன், பன்னிருமுருகன், சனீஸ்வரர், துர்க்கை, சப்த கன்னிகள், எமலிங்கம், நாகதேவலிங்கம், வாயு லிங்கம், வர்ண லிங்கம், அண்ணாமலையார், தட்சிணாமூர்த்தி, சட்டநாதர், சண்டீகேஸ்வரர், குபேர லிங்கம், கஜலட்சுமி,பல்லவ பாலசுப்பிரமணியன் ஆகிய சாமிகளுக்கு தனித்தனி சன்னதி உள்ளது.

திருமண தடை நீங்கும்

இக்கோயிலின் சிறப்புகள் குறித்து பக்தர்கள் கூறும்போது, இக்கோவிலில் ஆடிப்பூரம், நவராத்திரி, மகாசிவராத்திரி உள்ளிட்ட விழாக்கள் சிறப்பாக நடைபெறும். அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷ நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. திருமணக் கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் சிவபெருமான்,  பக்தர்களுக்கு திருமண தடைகளையும், தீராத நோயை தீர்க்கும் கடவுளாகவும் உள்ளார்.  நோய் தீர்க்கும் மருத்துவராக இறைவன் அருள்பாலிப்பதால்,  ‘வைத்தியநாத சுவாமி’ என்று அழைக்கப்படுகிறார். சூரியன்  வழிபடும் கோவில்களில் இதுவும் ஒன்று என்று தெரிவித்தனர்.

செல்வது எப்படி?

கடலூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திட்டக்குடி நகரில் வைத்தியநாதசுவாமி கோயில் உள்ளது.பேருந்து வசதி உண்டு.

Related Stories: