கேளம்பாக்கம் அருகே கஞ்சா விற்ற மூவர் கைது

திருப்போரூர்: கேளம்பாக்கம், தாழம்பூர் பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றும் இளம் பணியாளர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், எஸ்.ஐ. தமிழன்பன் ஆகியோர் ஏகாட்டூர் ஓ.எம்.ஆர். சாலையில் ஷாப்பிங் மால் ஒன்றின் அருகே திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் போலீசாரைக் கண்டதும் தப்பி ஓட முயன்றனர். இதையடுத்து போலீசார் அவர்களை விரட்டிப்பிடித்து சோதனை நடத்தியதில் மோட்டார் சைக்கிளில் சீட்டிற்கு கீழே கஞ்சா பொட்டலங்களை அடுக்கி கொண்டு வந்ததும் அவற்றை பொட்டலங்களாக கட்டி விற்பனை செய்து வருவதும் தெரிய வந்தது. விசாரணையில் மூவரும் கழிப்பட்டூரைச் சேர்ந்த சதீஷ்கண்ணன் (27), செம்மஞ்சேரியைச் சேர்ந்த தினேஷ் (27), ஹரிகிருஷ்ணன் (27) என்பதும் தெரிய வந்தது. இவர்கள் ஆந்திராவில் இருந்து மொத்தமாக கஞ்சாவை வாங்கி வந்து 5 கிராம், 10 கிராம் பொட்டலங்களாக கட்டி விற்பனை செய்து வருவதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் மூவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே தாம்பரம் மாநகர ஆணையர் அமல்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டால் அவர்கள் கைது செய்யப்பட்ட குண்டர் சட்டத்தின் கீழ் ஒரு ஆண்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்….

The post கேளம்பாக்கம் அருகே கஞ்சா விற்ற மூவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: