மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மயில் சிலை மாயம் யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

சென்னை: சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு மேற்கொண்டார். கபாலீஸ்வரர் கோயிலில் மூடுபனி அமைப்பிலான நீர் தெளிப்பான் பொருத்தப்பட்டுள்ளது. இதனை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார். மேலும் சூரிய ஒளிசக்தி (சோலார்) மூலம் தானாக இயங்கக்கூடிய இறையம்சம் பொருந்திய 2 சோலார் விளக்கை அமைச்சர் அறிமுகப்படுத்தினார். கோயில்களில் பொதுமக்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்யும்பொழுது அப்பகுதியில் ஏற்படும் வெப்பத்தை தணிக்கும் வகையில் இந்த மூடுபனி அமைப்பிலான நீர் தெளிப்பான் பொருத்தப்பட்டுள்ளது.இந்த ஆய்வுக்கு பின்பு அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு வெயிலின் தாக்கம் அறியாத வகையில் நீர்த் தெளிப்பான் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் இறையம்சம் பொருந்திய 2 புதிய சோலார் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. வருமானம் குறைவாக உள்ள கோயில்கள் மற்றும் வாய்ப்பு உள்ள கோயில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் 2019ம் ஆண்டுக்கு முன்பு வரை கனகசபை தரிசனம் முறையாக நடைபெறவில்லை. கொரோனா தொற்றுக்கு பின்பு கனகசபை தரிசனம் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலில் கனகசபை தரிசனம் செய்ய தீட்சிதர்களுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலில் எழுந்த புகார் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்குழு அளிக்கும் அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோன்று, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் மயில் சிலை மாயமானது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்….

The post மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மயில் சிலை மாயம் யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: