சாலையில் நடந்து சென்ற வாலிபரை வெட்டிய அண்ணன், தம்பி கைது

பல்லாவரம், மார்ச் 17: குன்றத்தூர் அருகே சாலையில் நடந்து சென்ற வாலிபரின் தலையில் கத்தியால் வெட்டிய அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர். குன்றத்தூர் அடுத்த நத்தம், பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் ரவிசங்கர் (எ) ராகுல் (30). அதே பகுதியில் மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர், நேற்று முன்தினம் மாலை தனது வீட்டின் அருகே உள்ள சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, அங்கு மதுபோதையில் வந்த நத்தம், ஒத்தவாடை தெருவை சேர்ந்த சஞ்சய் (20) என்பவர், ரவிசங்கரிடம் வீண் தகராறில் ஈடுபட்டார். இதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சஞ்சய், தனது தம்பி சுனில் (18) என்பவருக்கு போன் செய்து வரவழைத்தார். பின்னர் இருவரும் சேர்ந்து, ரவிசங்கர் தலையில் கத்தியால் வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில், பலத்த காயமடைந்த ரவிசங்கரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் விரைந்து சென்ற போலீசார், ரவிசங்கரை வெட்டிய அண்ணன், தம்பியான சஞ்சய் மற்றும் சுனில் ஆகியோரை கைது செய்தனர். கைதான 2 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: