சென்னை, மார்ச் 18: அண்ணா சாலை மற்றும் ஸ்கைவாக், பெரம்பூர் பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பைக் ரேசில் ஈடுபட்ட 27 வாலிபர்கள் மீது போலீசார் சிசிடிவி மற்றும் வீடியோ காட்சிகள் மூலம் வழக்கு பதிவு செய்து, 27 பைக்குகளை பறிமுதல் செய்தனர். சென்னை பெருநகர காவல் எல்லையில் இரவு நேரங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ரேஸ் மற்றும் பைக் சாகசங்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் அருண் போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவுப்படி இரவு நேரங்களில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், அமைந்தகரை ஸ்கைவாக் பகுதியில் உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென வாலிபர்கள் சிலர் பைக் ரேசில் ஈடுபட்டனர். அதேபோல் பெரம்பூர் மேம்பாலம் பகுதி மற்றும் அண்ணா சாலையில் வாலாஜா சந்திப்பு முதல் அண்ணா மேம்பாலம் வரை தனித்தனி குழுக்களாக வாலிபர்கள் திடீரென பைக் ரேசில் ஈடுபட்டனர். இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனே பைக் ரேசில் ஈடுபட்ட வாலிபர்களை பிடிக்க ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து தடுக்க முயன்றனர். ஆனால் போலீசாரை கண்டதும் பைக் ரேசில் ஈடுபட்ட வாலிபர்கள் மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டனர். அண்ணா சாலை மசூதி அருகே போலீசார் சில வாலிபர்களை பிடித்தனர். அவர்களை மசூதிக்கு வந்த நபர்கள் போலீசாரிடம் வாக்குவாதம் செய்து அவர்களை விடுதித்தனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இருந்தாலும் போலீசார் பைக் ரேசில் ஈடுபட்ட வாலிபர்களை வீடியோ காட்சிகளை வைத்து 27 பேர் மீது வழக்கு பதிவு செய்து 27 ைபக்குகளை பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்றவர்களையும் தேடி வருகின்றனர்.
