தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்; அன்புமணி பேச்சு

திருவள்ளூர்: தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று அன்புமணி கூறினார்.‘’தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்’’ என்ற பெயரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் 100 நாட்கள் நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். நேற்று மாலை திருவள்ளூரில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு தன்னுடைய நடைபயணத்தை மேற்கொண்டார். இதற்கு மாவட்ட செயலாளர் இ.தினேஷ்குமார் தலைமை வகித்தார். மாநில நிர்வாகிகள் அம்பத்தூர் கே.என்.சேகர், ஆலப்பாக்கம் லயன் ஏ.ஆர்.டில்லிபாபு, வ.பாலா என்கிற பாலாயோகி, நா.வெங்கடேசன் முன்னிலை வகித்தனர்.இதில், அன்புமணி பேசியதாவது;

டாக்டர் ராமதாஸ் எதற்காக பாமகவை தொடங்கினார். சமூக நீதி போராளி டாக்டர் ராமதாஸ் எதற்காக இந்த கட்சியை தொடங்கினார் தெரியுமா? அடிமட்டத்தில் இருக்கும் மக்கள் முன்னேறவேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்கு சமூகநீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் ராமதாஸ் பாமகவை தொடங்கினார். சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்தால்தான் பின்தங்கிய சமூகங்களின் உண்மையான நிலையை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான வசதி செய்து கொடுக்க முடியும்.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை எடுத்து முடித்துவிட்டன. சில மாநிலங்கள் தற்போது எடுத்துக்கொண்டிருக்கின்றன. எனவே தமிழகத்திலும் விரைவில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். இவ்வாறு அன்புமணி பேசினார்.

The post தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்; அன்புமணி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: