சாலை பள்ளத்தில் பைக் கவிழ்ந்து சென்னை பேராசிரியர் பலி

 

சென்னை, ஜூலை 16: வேளச்சேரி அண்ணாநகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (65). இவர் சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி மீரா, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர். இதனால் இவருக்கு சாத்தான்குளத்திலும் சொந்த வீடு உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஆறுமுகம், சாத்தான்குளத்திற்கு வந்திருந்தார். அப்போது அவர் தனது மகளுக்கு வரன் பார்ப்பதற்காக நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவிக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து தனது பைக்கில் சாத்தான்குளத்திற்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.

களக்காடு – சேரன்மகாதேவி ரோட்டில் நெடுவிளை விலக்கு அருகே சென்றபோது, சாலையில் குடிநீர் குழாய் உடைந்து ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கி பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த ஆறுமுகத்தை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி களக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post சாலை பள்ளத்தில் பைக் கவிழ்ந்து சென்னை பேராசிரியர் பலி appeared first on Dinakaran.

Related Stories: