கீழடி ஆய்வறிக்கையை வெளியிடாவிட்டால் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து நாடாளுமன்றத்தை முடக்குவோம்: திமுக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் திருச்சி சிவா எம்பி ஆவேசம்

மதுரை: மதுரை விரகனூர் சுற்றுச்சாலையில் திமுக மாணவரணி சார்பில், கீழடி ஆய்வறிக்கையை அங்கீகரிக்க வலியுறுத்தியும், ஒன்றிய அரசைக் கண்டித்தும் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. திமுக மாணவரணி மாநில செயலாளர் ராஜீவ் காந்தி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று திமுக துணை பொதுச்செயலாளர் திருச்சி சிவா எம்பி பேசுகையில், வரவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முதல் பிரச்னையாக கீழடி எதிரொலிக்கும். கீழடி அகழாய்வை ஒன்றிய அரசு வெளியிடவில்லை என்றால் நாடாளுமன்றத்தை நடக்க விடாமல் முடக்குவோம் என்றார. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான மாணவர்கள் முதலமைச்சர் ஸ்டாலினின் முகமூடியை அணிந்திருந்தனர்.

சென்னையில் ஆர்ப்பாட்டம்: கீழடி ஆய்வின் முடிவை மறைக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கையை கண்டித்து திக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சைதாப்பேட்டையில் நேற்று நடைபெற்றது. தி.க. தலைவர் கி.வீரமணி தலைமையில் நடந்த இந்த கண்டன ஆர்பாட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், காங்கிரஸ் சொத்துப் பாதுகாப்புக்குழு தலைவர் தங்கபாலு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துணை தலைவர் அப்துல் ரகுமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

* திருமாவளவன் பேசுகையில், ‘‘கீழடி ஆய்வு தொடர்பான அறிக்கையினை ஒன்றிய அரசு திருப்பி அனுப்பி உள்ளது. தமிழர்களின் தொன்மையே இந்தியர்களின் வரலாறு என்பதை அவர்களால் ஏற்றுகொள்ள முடியவில்லை” என்று கூறினார்.

The post கீழடி ஆய்வறிக்கையை வெளியிடாவிட்டால் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து நாடாளுமன்றத்தை முடக்குவோம்: திமுக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் திருச்சி சிவா எம்பி ஆவேசம் appeared first on Dinakaran.

Related Stories: