சேலம்: சேலத்தில் வரும் 29ம் தேதி, ராமதாஸ் தலைமையில் நடைபெறும் பாமக பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது என, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், அன்புமணி தரப்பினர் மனு அளித்துள்ளனர். பாமக அன்புமணி ஆதரவு முன்னாள் எம்எல்ஏவும், மாநில ஒருங்கிணைப்பாளருமான கார்த்தி, மேட்டூர் தொகுதி எம்எல்ஏ சதாசிவம் உள்ளிட்ட நிர்வாகிகள், நேற்று சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருந்ததாவது: பாமக விதிப்படி பொதுக்குழு, செயற்குழு உள்ளிட்ட எந்தக் கூட்டமும் பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட கட்சித் தலைவர் தலைமையில் தான் நடத்தப்பட வேண்டும்.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், பாமக தலைவர் அன்புமணி தான் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுக்குழுவை கூட்டவும், அதன் தலைமை ஏற்கவும் அன்புமணியை தவிர வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை. பாமக பெயரை தவறாக பயன்படுத்தி, சேலத்தில் டிசம்பர் 29ம் தேதி சட்ட விரோதமாக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது குறித்து தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொதுக்குழு கூட்டம், பாமக கூட்டம் அல்ல. இதற்கு போலீசார் அனுமதியும், பாதுகாப்பும் தரக்கூடாது. பாமக பெயரையும் அதன் கொடியையும், அடையாளங்களையும் தவறாக பயன்படுத்தும் நபர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முன்னாள் எம்எல்ஏ கார்த்தி கூறுகையில், ‘பாமகவிற்கு தலைவர் அன்புமணி தான். பொதுக்குழு, செயற்குழு கூட்டுவதற்கான அதிகாரம், தலைவர் அன்புமணிக்கு மட்டுமே உள்ளது. அதில் நிறுவனர் பங்கேற்கலாமே தவிர, அவரால் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. பாமகவின் கூட்டணி குறித்து அவர்கள் அறிவிக்க முடியாது. எதுவும் தெரியாமல், சேலத்தை சேர்ந்த எம்எல்ஏ, தர்மபுரி எம்எல்ஏ ஆகியோர் உளறி வருகின்றனர். அவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர்,’ என்றார்.
