யாருடன் கூட்டணி என்பதை வரும் 9ம் தேதி அறிவிப்போம் தேமுதிக பற்றி எந்த கட்சி சொன்னதோ அதுக்கு அழிவுகாலம் ஆரம்பமாகி விட்டது: சென்னையில் பிரேமலதா ஆவேச பேட்டி

சென்னை: யாருடன் கூட்டணி என்பதை வரும் 9ம் தேதி அறிவிப்போம் என்றும், தேமுதிகவுக்கு இவ்வளவு சீட் என்று எந்த கட்சி சொன்னதோ அதுக்கு அழிவுகாலம் ஆரம்பமாகி விட்டது என்று பிரேமலதா பேட்டியளித்துள்ளார். தமிழக பாஜ தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் கடந்த செவ்வாய்க்கிழமை சென்னை வந்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனை நடத்தினார். கூட்டம் முடிந்ததும் அதிமுகவுக்கு தேர்தல் பணிகளை செய்து வரும் நிறுவனத்தின் மூலமாக செய்தி ஒன்று வெளியிடப்பட்டது. அதாவது ஒவ்வொரு கட்சிக்கும் எவ்வளவு தொகுதி என்ற பட்டியல் தான் அது. அதிமுகவுக்கு 170 தொகுதி, பாஜ, பாமகவிற்கு 23 தொகுதி மற்றும் தேமுதிக, அமமுக, ஓபிஎஸ்சுக்கு எவ்வளவு தொகுதி என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த தகவல் கூட்டணியிலேயே இல்லாத கட்சிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு கூட்டணியில் சேராத கட்சிகள் கடும் கண்டனத்தையும், தங்களுடைய அதிருப்தியையும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கிறிஸ்துமஸ் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா பங்கேற்று கேக் வெட்டினார். தொடர்ந்து, பிரமாண்ட கொடி கம்பத்தில் கட்சி கொடியை அவர் ஏற்றி வைத்தார். பின்னர் அவர், 150 பெண்களுக்கு புடவை மற்றும் நல உதவிகளை வழங்கினார். வந்திருந்தவர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில், பொருளாளர் எல்.கே.சுதீஷ், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, மாவட்ட செயலாளர் அனகை முருகேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

தொடர்ந்து பிரேமலதா அளித்த பேட்டி: தேமுதிக மாநாடு ஜனவரி 9ம் தேதி நடக்கிறது. அந்த மாநாட்டில் யாருடன் கூட்டணி என்பதை நாங்கள் தெளிவாக சொல்வோம் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அப்படியிருக்கும் போது எதுவுமே தெரியாமல், ஏதோ ஒரு சோஷியல் மீடியாவில் வந்தது என்று உண்மை செய்தி மாதிரி போடுவதில் எங்களுக்கு என்ன நம்பிக்கை உள்ளது. தங்கம் விலை உயர்ந்தது, குறைந்தது என்று அடிக்கடி பிரேக்கிங் செய்தி போடுகிறார்கள். அதுக்கும் இதுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. வருகின்ற தேர்தல் 2026 தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் மிக,மிக முக்கியமான தேர்தல்.

எனவே, ஊடகத்தினர் பொறுப்புணர்வோடும், பொறுப்பாகவும் நடந்து கொள்ள வேண்டும். உங்கள் டிஆர்பியை ஏற்றுவதற்கு தேமுதிகவை பயன்படுத்தாதீர்கள். கட்சியின் வளர்ச்சி, என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதை நிர்மாணிக்கக்கூடியவர்கள், கட்சிக்காக உழைத்து கொண்டிருக்கும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் தான். ஊடகத்தினர் கிடையாது. அப்படியிருக்கும் போது எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லாமல் செய்தி வெளியிடுவதை கண்டிக்கிறேன். தேமுதிகவை பற்றி எங்கள் அனுமதி இல்லாமல் போடக்கூடாது. நாங்கள் சிட்டியில் இருக்கிறோம் இது பொய் செய்தி என்று எங்களுக்கு தெரிகிறது. கடைகோடியில் இருக்கும் தொண்டரின் மனநிலை என்ன என்பதை யோசித்தீர்களா?. பொறுப்பு இல்லாமல் இந்த பதிவை போட வேண்டாம். உங்களுக்கும் அந்த கடமை உள்ளது.

கூட்டணியை பற்றி உறுதியாக மாநாட்டிற்கு வரும் போது தெரிவிப்போம். எங்கள் நிலைப்பாடு என்ன என்பதை கட்சி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், தொண்டர்களுடன் ஆலோசனை செய்த பிறகு தான் நாங்கள் சரியான முடிவை எடுப்போம். எந்த கட்சியின் சார்பாக அந்த அறிவிப்பு வந்ததாக நீங்கள் சொல்றீங்களோ, இதுவே அந்த கட்சிக்கு அழிவு காலத்தை உண்டாக்கும் என்பதையும் நான் உறுதியாக சொல்கிறேன். இதை அந்த கட்சியில் உள்ள நிர்வாகிகளும், தொண்டர்களும் ஏற்றுக்கொள்வார்களா? அன்றைக்கு அதிமுகவும், பாஜகவும் தான் ஆலோசனை பண்ணியிருக்கிறார்கள். இன்றைக்கு நான் கேட்கிறேன். எங்களுக்கு எல்லாம் உரிமை இருக்கிறது. அவர்கள் அறிவித்த அறிவிப்பை அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் ஏற்றுக்கொள்வார்களா? பாஜவில் உள்ள தொண்டர்கள், நிர்வாகிகள் ஏற்றுக்கொள்வார்களா? என்பதற்கு பதில் சொல்ல வேண்டும்.

சும்மா அப்படியே தட்டி விடக்கூடாது. இது கட்சி. இதற்காக உயிரை கொடுத்து, கோடிக்கணக்கான பேர் கட்சிக்காக உழைத்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் உரிமையை நீங்கள் கட்டாயம் மதிக்க வேண்டும். அது உண்மைக்கு புறம்பான செய்தி. பொய் செய்தியை பரப்ப வேண்டாம். உத்தேச பட்டியலை வெளியிட்டது யார்?. அதிமுகவா, பாஜவா. யார் வெளியிட்டது. அது தெரிய வேண்டும். இந்த கட்சிக்காக உயிரையும், பொருளையும் பணயம் வைத்து தலைமைக்கும், தலைவருக்கும் கட்டுப்பட்டு பயணித்து கொண்டிருக்கும் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் தான் அந்த அதிகாரம் உண்டு. அவர்கள் யாரை கையை காட்டுகிறார்களோ, அவர்களுடன் தான் தேமுதிக கூட்டணி வைக்கும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. அதிமுக, பாஜவை சொல்கிறேன். இது அனைவரையும் பாதித்து இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

* எடப்பாடியுடன் திடீர் சந்திப்பு
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, அதிமுக, பாஜ பற்றி கடுமையாக விமர்சித்து இருந்தார். இந்த நிலையில் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி ஆகியோர் நேற்று மாலை திடீரென சென்னை கிரின்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை திடீரென சந்தித்து பேசினர். அப்போது, தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் குருபூஜை நிகழ்ச்சிக்காக பங்கேற்குமாறு அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: