18 வயது நிரம்பியவர்களின் ஓட்டை உறுதி செய்யுங்கள்: தேர்தல் ஆணையத்துக்கு மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

கீழ்வேளூர்: வாக்காளர் பட்டியலில் 18 வயது நிரம்பியவர்கள் இடம்பெறுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் சண்முகம் தெரிவித்தார். நாகப்பட்டினம் மாவட்டம் கீழவெண்மணியில் 57ம் ஆண்டு தியாகிகள் நினைவு தினத்தையொட்டி நினைவு ஸ்தூபிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் நேற்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: கடந்த 20 ஆண்டு காலமாக நடைமுறையில் இருந்து வரும் 100 நாள் வேலைத்திட்டம் விவசாய தொழிலாளர்கள் வறுமையிலிருந்து விடுபடுவதற்கும், புலம்பெயர்தலை தடுப்பதற்கும், குறிப்பாக கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் திட்டத்தை ஒன்றிய பாஜ அரசு முற்றிலும் சீரழிக்கும் வகையில் புதிய திட்டத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள். அதை திரும்ப பெற்று, ஏற்கனவே நடைமுறையில் இருந்த மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி அளிப்பு சட்டத்தை மீண்டும் கொண்டு வருவதற்கு ஒன்றிய அரசை வற்புறுத்துகிறோம்.

தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட ஒரு கோடி வாக்காளர்கள் வாக்குரிமைகள் பறிக்கப்பட்டு இருக்கிறது. 27 லட்சம் பேர் ஓராண்டு காலத்தில் இறந்து போய்விட்டார்கள் என்பது நம்ப தகுந்ததாக இல்லை. அவசர ேகாலத்தில் அள்ளித்தெளித்த கதையாக தான் தேர்தல் ஆணையம் நடந்து கொண்டுள்ளது. உயிரோடு இருப்பவர்கள் இறந்து போனதாகவும், இறந்து போனவர்கள் உயிரோடு இருப்பதாகவும் உள்ளது. கவிஞர் புலமைப்பித்தன் இறந்து 4 வருடத்திற்கு மேல் ஆகிறது. அவருடைய பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளது. 67லட்சம் பேர் முகவரி அற்றவர்கள், காண முடியாதவர்கள் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது. வயது வந்த 18 வயது நிரம்பிய, அதற்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: