தூத்துக்குடி: சென்னையில் விஜய் காரை மறித்து போராட்டம் நடத்திய அஜிதா, பதவி வழங்காமல் புறக்கணிக்கப்பட்டதால் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி லயன்ஸ் டவுனை சேர்ந்தவர் அஜிதாஆக்னல். ஆசிரியர் பயற்சி முடித்த இவர், தவெகவில் இணைந்து கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக செயல்பட்டு வந்தார். தவெக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியதுடன் நலத்திட்ட உதவிகளும் வழங்கி வந்தார். இதனால் மாவட்ட செயலாளர் பதவி தனக்கு கிடைக்கும் என எண்ணியிருந்தார்.
ஆனால், தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பான்மையாக நாடார் சமூகத்தினர் இருப்பதால், அந்த சமூகத்தை சேர்ந்தவர்களையே கட்சி மாவட்ட செயலாளராக நியமிக்க வேண்டும் என்று தவெகவின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், விஜய்க்கு யோசனை கூறி உள்ளார். இதனால் தூத்துக்குடி மாவட்ட தவெக செயலாளரை நியமிக்க முடியாத சூழல்நிலை நிலவி வந்தது. இந்நிலையில், கடந்த 23ம் தேதி தூத்துக்குடி மாவட்ட செயலாளராக நாடார் சமூகத்தை சேர்ந்த எஸ்.டி.ஆர்.சாமுவேல் ராஜை நியமித்து விஜய் உத்தரவிட்டார். மேலும், இணை செயலாளர்கள், பொருளாளர், துணை செயலாளர் மற்றும் 10 செயற்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.
இதில் எந்த பதவிக்கும் அஜிதாவின் பெயர் இல்லை. இதனால் அஜிதா மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதைத்தொடர்ந்து, அஜிதா தனது ஆதரவாளர்களுடன் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு சென்று கட்சி தலைவர் விஜய்யை சந்தித்து முறையிட முயன்றார். அவர்களை பவுன்சர்கள் தடுத்து நிறுத்தி உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனால் வாசலில் காத்திருந்த அஜிதா மற்றும் ஆதரவாளர்கள், கட்சி அலுவலகத்துக்கு வந்த விஜய்யின் காரை முற்றுகையிட்டு முறையிட முயன்றனர். ஆனால், விஜய்யின் கார் அவர்களை இடித்து தள்ளிவிட்டு நிற்காமல் சென்றது. இதையடுத்து அலுவலக வாசலில் அமர்ந்து அஜிதா மற்றும் ஆதரவாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால், புஸ்ஸி ஆனந்த் பின் வாசல் வழியாக எஸ்கேப்பானார்.
மாவட்ட செயலாளர் பதவி கிடைக்காததால் மனமுடைந்த அஜிதா, தூத்துக்குடி வந்த நிலையில் நேற்று தூக்க மாத்திரைகள் தின்று தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர், ஜார்ஜ் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், பின்னர் பாளை. ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தென்பாகம் போலீசார் விசாரித்து வருகின்றனர். தவெக பெண் நிர்வாகி, பதவி கிடைக்காமல் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பதவி கிடைக்காத விரக்தியில் தவெகவினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், தூத்துக்குடி அஜிதா தற்கொலைக்கு முயன்றது விஜய் கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
