சென்னை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட அனைத்து தமிழக மீனவர்களையும் உடனே விடுவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொடூரமாக தாக்கப்படுவதும், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதும், படகுகள் சிதைக்கப்பட்டு பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் மீன்பிடித் தொழிலையே நம்பி இருக்கும் மீனவர்களின் வாழ்வாதாரம் அடிக்கடி பாதிப்புக்கு உள்ளாகிறது. அவர்களின் குடும்பத்தினரின் அன்றாட வாழ்க்கை மட்டுமல்லாது, பிள்ளைகளின் கல்வியும் பாதிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இது போன்ற செயல்கள் தமிழக மீனவ மக்களிடையே வேதனையையும், அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.
பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்திய அரசு மறு சீரமைப்புக்கான நிதி உதவிகளையும், பல்வேறு கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொண்டிருக்கிறது. டிட்வா புயல் பாதிப்பு ஏற்பட்டபோது ‘ஆபரேஷன் சாகர் பந்து’ என்ற பெயரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள, 1100 டன் நிவாரண பொருட்களை இலங்கைக்கு இந்தியா அனுப்பி உதவியது. தற்போதும் புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா சார்பில் ரூபாய் 4,050 கோடி நிதி உதவி கூட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த 23-ஆம் தேதி கொழும்புவில் வழங்கியுள்ளார். இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு துணையாக நிற்க வேண்டியது இந்தியாவின் கடமை என குறிப்பிட்டு இலங்கைக்கு இந்தியா பல்வேறு உதவிகளையும் செய்து தருகிறது.
அண்டை நாடு என்கிற போது அந்நாடு பாதிப்புக்குள்ளாகும் போது, இலங்கைக்கு உதவி செய்வது நம்முடைய தார்மீக கடமை தான். அதேசமயம் நம் நாட்டு மீனவர்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும் இந்திய வெளியுறவுத்துறை முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எனவே, இந்திய அரசு தமிழக மீனவர்கள் விவகாரத்தில் நிரந்தர தீர்வு காணும் பொருட்டு இருநாட்டு மீனவர்களும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இதிலும் அக்கறையுடன் செயல்பட வேண்டும். அதற்கு முதல் கட்டமாக இலங்கை சிறையில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய அரசை கேட்டுக்கொள்கிறேன்.
