பலாத்கார விவகாரம் பிஷப்பை எதிர்த்து போராடிய அனுபமா கன்னியாஸ்திரி பட்டத்தை துறந்தார்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள குரவிலங்காட்டில் கத்தோலிக்க சபையைச் சேர்ந்த கன்னியாஸ்திரிகள் ஆசிரமம் உள்ளது. கடந்த 2018ம் ஆண்டு இந்த ஆசிரமத்தை சேர்ந்த ஒரு கன்னியாஸ்திரி, ஜலந்தர் கத்தோலிக்க சபை பிஷப்பாக இருந்த பிராங்கோ தன்னை பலாத்காரம் செய்ததாக புகார் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக குரவிலங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

ஆனால் வழக்கு பதிவு செய்து பல மாதங்கள் ஆன பின்னரும் பிஷப் பிராங்கோவை போலீசார் கைது செய்யவில்லை. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்யக்கோரி கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் குதித்தனர். குரவிலங்காடு ஆசிரமத்தை சேர்ந்த அனுபமா என்ற கன்னியாஸ்திரி தலைமையில் கொச்சியில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. இதற்கிடையே பிஷப் பிராங்கோ கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு கோட்டயம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த 2022ம் ஆண்டு பிஷப் பிராங்கோவை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.இந்நிலையில் பிஷப் பிராங்கோவை எதிர்த்து போராட்டம் நடத்திய அனுபமா தன்னுடைய கன்னியாஸ்திரி பட்டத்தை துறந்துள்ளார். கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன் இவர் குரவிலங்காடு மடத்திலிருந்து வீட்டுக்கு திரும்பினார். எம்எஸ்டபுள்யு படித்து முடித்துள்ள இவர் ஆலப்புழா அருகே பள்ளிப்புரத்தில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார். கன்னியாஸ்திரி பட்டத்தை துறந்தது குறித்து இவர் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

 

The post பலாத்கார விவகாரம் பிஷப்பை எதிர்த்து போராடிய அனுபமா கன்னியாஸ்திரி பட்டத்தை துறந்தார் appeared first on Dinakaran.

Related Stories: