புதுச்சேரி, மே 17: கர்நாடகாவில் வீடுகளை உடைத்து நடந்த 200 பவுன் நகை திருட்டு சம்பவத்தில் கைதான புதுச்சேரி கொள்ளையர்கள் இங்குள்ள அடகு கடையில் நகை அடகு வைத்ததாக தெரிவித்ததால், அம்மாநில போலீசார் நேற்று அடகு கடையில் திடீர் சோதனையில் ஈடுபட்டு ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அடுத்தடுத்து வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் நடந்தது. போலீசாரின் அதிரடி விசாரணையில், புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்த ரகுராமன், அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த நட்சத்திரம் உள்ளிட்ட 3 பேர் இக்கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதில் ரகுராமன் உள்ளிட்ட 2 பேர் நேரடியாக கொள்ளையில் ஈடுபடுவதும், நட்சத்திரம் நகைகளை விற்க உதவி செய்து வந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. தீவிர விசாரணைக்குப்பின் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
ஒருவர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், ரகுராமன், ஜெயச்சந்திரன் ஆகிய 2 பேரையும் பெங்களூரு போலீசார், நேற்று புதுச்சேரி அழைத்து வந்தனர். இதற்கிடையே, பாரதி வீதியில் உள்ள ஒரு அடகு கடையில் நகைகளை விற்பனை செய்துள்ளனர். இதையடுத்து கர்நாடக போலீசார் நேற்று புதுவை பாரதி வீதியில் உள்ள நகை அடகுகடையில் சோதனை நடத்தி உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். 200 பவுனுக்கு மேல் நகைகளை அடகு வைத்துள்ளனர். எவ்வளவு பணம் பெற்றனர் என விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
The post பெங்களூரு நகை கொள்ளையில் 3 பேர் கைது புதுச்சேரி அடகு கடையில் கர்நாடக போலீசார் அதிரடி சோதனை appeared first on Dinakaran.
