திருவாரூர், மே 16: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் இறால் பண்ணைகள் குறித்து களஆய்வு வரும் 19ந் தேதி நடைபெறவுள்ளதாக கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தாலுக்காவில் உள்ள தில்லை விளாகம், உதயமார்த்தாண்டபுரம், தொண்டியக்காடு உள்ளிட்ட கிராமங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாய நிலப்பகுதிகளில் உள்ள இறால் பண்ணைகளை அகற்றிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதையடுத்து கலெக்டர் தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்து 12 வாரங்களுக்குள் மனுதாரருக்கு தகவல் அளித்திட நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி வரும் 19ந் தேதி முதல் 24ந் தேதி வரை மண்டல அளவிலான குழு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோரால் முத்துப்பேட்டை தாலுக்காவில் உள்ள இறால் பண்ணைகள் நேரடியாக களஆய்வு செய்யப்படவுள்ளது. ஆகவே, இறால் பண்ணை உரிமையாளர்கள் இறால் பண்ணை தொடர்பான ஆவணங்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறும் களஆய்வில் ஈடுபடும் குழுவிற்கு ஒத்துழைப்பு வழங்கிடுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும்,ஆய்வில் தகுதியின்றி சட்டத்திற்கு புறம்பாக மற்றும் விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இறால் பண்ணைகள் உரிம நிபந்தனைகளை மீறியிருப்பது கண்டறியப்பட்டால் அதன் உரிமம் ரத்து செய்யபடுவதுடன் இறால் பண்ணைகள் முழுவதுமாக அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு கலெக்டர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
The post முத்துப்பேட்டையில் மே19ம் தேதி; இறால் பண்ணைகள் குறித்து களஆய்வு appeared first on Dinakaran.
