உளுந்தூர்பேட்டை, மே 16: காரைக்குடி அருகே புதுவயல் பகுதியை சேர்ந்தவர் காதர் இப்ராஹிம் (64). இவர் தனது குடும்பத்தை சேர்ந்த ஜலிலாபேகம் (56), சஹர் பானு (44), தாஹிரா பானு (35), சபீர் (10), அப்துல் ரகுமான், அப்துல் தாரிக் உள்ளிட்ட 10 பேருடன் சென்னைக்கு சென்று விட்டு மீண்டும் அதே காரில் சென்னையில் இருந்து காரைக்குடி நோக்கி நேற்று சென்று கொண்டிருந்தனர். இந்த காரை நூர்தின் (35) என்பவர் ஓட்டிச் சென்றார். உளுந்தூர்பேட்டை அடுத்த ஆசனூர் சிட்கோ எதிரில் நேற்று சென்று கொண்டிருந்தபோது திடீரென காரின் முன்பக்க டயர் வெடித்து தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் இருந்த தடுப்பு கட்டையில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காரின் ஒரு பகுதி அப்பளம் போல் நொறுங்கியதுடன் காரில் சென்ற காதர் இப்ராஹிம், ஜலிலாபேகம், சஹர்பானு, தாகிராபானு, சபீர் உள்ளிட்ட 7 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற எடைக்கல் காவல் நிலைய போலீசார், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் காதர் இப்ராஹீம் மற்றும் தாகிராபானு ஆகிய இருவரும் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து எடைக்கல் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்விபத்தால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கார் டயர் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post கார் டயர் வெடித்து தடுப்பு கட்டையில் மோதி விபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகாயம் appeared first on Dinakaran.
