பள்ளிகள் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஆதிதிராவிட பழங்குடியின மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 96 சதவீதமாக உயர்வு: ஐ.ஐ.டி. என்.ஐ.டி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்த மாணவர்கள்

சென்னை: கடந்த பல ஆண்டுகளில் இல்லாத வகையில் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் ஆதிதிராவிட பழங்குடியின மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 96% ஆக உயர்ந்துள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றது முதல் திராவிட மாடல் அரசு மூலம் எல்லார்க்கும் எல்லாம் கிடைத்திட வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை தீட்டி, அவற்றை திறம்பட நிறைவேற்றி வருகிறார். அவற்றில் குறிப்பாக சமூக நீதி அடிப்படையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் மேம்பாட்டில் தனிக் கவனம் செலுத்தி, அவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்.

அதன் விவரம் பின்வருமாறு:
* ஆதிதிராவிடர் பள்ளிகளில் 480 புதிய வகுப்பறைகள்: ஆதிதிராவிடர் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் அனைத்து வசதிகளுடனும் கல்வி கூடங்கள், விடுதிகள், கிராம அறிவு மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, ரூ.108.50 கோடி மதிப்பில் 154 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் 480 புதிய வகுப்பறைகள் மற்றும் 15 அறிவியல் ஆய்வுக் கூடங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும், 107 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் 256 வகுப்பறைகள், 42 கழிவறைகள், 21 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 65 மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வகங்கள் ரூ.125.00 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகின்றன. சிறப்பான கல்வியினை வழங்க உதவும் வகையில் 119 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் அறிவுத்திறன் வகுப்பறைகளும், 174 பள்ளிகளில் அறிவுத் திறன் பலகைகளும், 206 பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. 126 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள அறிவியல் ஆய்வகங்களுக்கு ரூ.3.15 கோடி மதிப்பீட்டில் ஆய்வு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

* உயர்கல்வி நிறுவனங்களின் நுழைவுத்தேர்விற்கான பயிற்சி: பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளில் பயிலும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு JEE, NEET, CLUT, NIFT மற்றும் CUET போன்ற உயர்கல்வி தேர்விற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு மருத்துவக் கல்லூரியில் 2 மாணவர்களும், திருச்சி NIT கல்லூரியில் 3 மாணவர்களும், திருச்சி தேசிய சட்டக் கல்லூரியில் ஒரு மாணவரும், சென்னை தரமணி NIFT-ல் 4 மாணவர்களும் திண்டுக்கல் காந்தி கிராம் மத்திய பல்கலைக் கழகத்தில் 6 மாணவர்களும், ஆக 16 மாணவர்கள் சேர்ந்து அரசின் கல்வி உதவித் தொகையுடன் பயின்று வருகின்றனர்.

* உயர்கல்வி நிறுவனங்களுக்கான கல்விச்சுற்றுலா: உயர்கல்வி நிறுவனங்களுக்கான சுற்றுலா என்ற திட்டத்தின் கீழ், உயர்கல்வி பயில்வதற்கான ஆர்வத்தைத் தூண்டவும், உயர்கல்விக்கான வழிகாட்டுதல்களை அறிந்து தெளிவான முடிவுகளை எடுக்கவும், உயர்கல்வி நிறுவனங்களுக்குக் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல ஒவ்வொரு பள்ளிக்கும் திராவிட மாடல் அரசு ரூ.25,000 வழங்கியுள்ளது.

* பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள்: “புதியதோர் உலகு செய்” என்னும் புத்தாக்க பயிற்சி, அனைத்து ஆசிரியர்களுக்கும் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்கள் மூலமாக வழங்கப்பட்டது. மேலும், மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் வழங்குவது குறித்த பயிற்சியும் வழங்கப்பட்டது.

* சட்டக்கல்லூரி மாணவர்களுக்கான உதவித்தொகை திட்டம்: அரசு சட்டக் கல்லூரிகளில் இறுதி ஆண்டு பயிலும் (3 மற்றும் 5 ஆண்டு படிப்பு) ஆதிதிராவிடர்/ பழங்குடியினர்/மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிட மாணவர்களுக்கு பாடத்திட்டத்திற்கு ஏற்ப வழங்கப்படும் உட்பயிற்சி காலங்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.10,000/- வழங்கப்படுகிறது. 2023-2024ஆம் ஆண்டு 789 மாணவர்களுக்கு ரூ.78.90 லட்சமும் நீதியரசர்களிடம் பயிற்சி பெற உதவித்தொகை ரூ.10,000 வீதம் 15 மாணாக்கர்களுக்கு ரூ.1.50 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2024-2025-ஆம் நிதியாண்டில் உட்பயிற்சி உதவித்தொகையாக 774 மாணாக்கருக்கு ரூ.77.40 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

* அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் வெளிநாட்டிற்குச் சென்று கல்வி கற்பதற்கான கல்வி உதவித்தொகை திட்டம் மறுசீரமைப்பு செய்யப்பட்டு, பெற்றோரின் வருமான உச்சவரம்பு ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கலை, அறிவியல், வணிகம், சட்டம், பொறியியல் மற்றும் மருத்துவம் போன்ற துறைகளில் வெளிநாடுகளில் முதுகலை அல்லது ஆராய்ச்சி படிப்பைத் தொடரும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.36 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 2021-2022ஆம் ஆண்டில் இந்தத் திட்டத்தின் மூலம் 9 மாணவர்கள் மட்டுமே பயனடைந்த நிலையில், முதல்வர் அளித்து வரும் ஊக்கம் காரணமாக தற்போது 176 மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். 2021-2022 ஆம் நிதியாண்டில் இந்தத் திட்டத்திற்கு ரூ.5.31 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், 2024-2025 நிதியாண்டிற்கு ரூ.60.33 கோடி வழங்கியுள்ளது திராவிட மாடல் ஆட்சி.

* முனைவர் பட்டப் படிப்புகளுக்கான கல்வி உதவித்தொகை: முனைவர் பட்டப் படிப்புகளுக்கான கல்வி உதவித் தொகை ரூ. 50,000 என்பது ரூ.1,00,000 என்று உயர்த்தப்பட்டுள்ளதுடன், அதிக மாணக்கர் பயன் அடையும் வகையில் எண்ணிக்கையினை 1,600 என்பது 2,000 எனவும் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளதுடன், இதற்கான குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.8 லட்சமாக 2021-ஆம் ஆண்டு முதல் உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

* தொல்குடி புத்தாய்வுத் திட்டம்: பழங்குடியினர் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் ஆய்வு மேற்கொள்ளும் இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம், முனைவர் பட்ட மேலாய்வாளர் படிப்பினை மேற்கொள்ளும் இளம் வல்லுநர்களை ஊக்குவிக்கும் பொருட்டு “தொல்குடி புத்தாய்வு திட்டம்” எனும் உதவித்தொகை திட்டத்தினை ரூ.1.50 கோடி செலவில் திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது.

* உயர் திறன் ஊக்கத்தொகை திட்டம்: பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, தொழில்நுட்ப படிப்புகளில் 60 விழுக்காடு அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறும் மாணக்கரின் வேலைவாய்ப்பு திறன்களை வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில் ரூ.25,000/- மதிப்பிலான திறன் பயிற்சிக்கான பண உறுதி ஆவணம் வழங்கப்படுகிறது.

* விடுதி மேம்பாட்டு திட்டங்கள்: தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை சைதாப்பேட்டை எம்.சி.ராஜா விடுதி வளாகத்தில் ரூ. 45 கோடி செலவில் அதிநவீன வசதிகளுடன் 10 தளங்களுடன் கூடிய மாணவர் விடுதியை திறந்துவைத்தார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயிலும் பொருட்டு தமிழ்நாடு முழுவதும் ரூ.300 கோடி மதிப்பில் 60க்கும் மேற்பட்ட புதிய விடுதிகள் கட்டுப்படுவதுடன் பழைய விடுதிகளில் பராமரிப்புப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான 535 விடுதிகளுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2025-26 ஆம் நிதியாண்டில் புதிய விடுதிகள் கட்டுதல் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக ரூ. 125.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

* கற்றல் கற்பித்தல் அறை: 17 மாவட்டங்களில் உள்ள 22 விடுதிகளில் 2,197 மாணாக்கர் பயன்பெறும் வகையில் ரூ. 10 கோடி செலவில் நவீன வசதிகளுடன் கூடிய கற்றல் கற்பித்தல் அறைகள் அமைக்கப்படுகின்றன.

* பயோமெட்ரிக் வருகைப்பதிவேடு: விடுதிகளை சீரான முறையில் பராமரித்து, மாணாக்கர் கல்வி பயில நல்ல சூழலை உருவாக்கும் வகையில், பராமரிப்புப் பணிகள் மற்றும் கண்காணிப்புக் கேமரா, பயோமெட்ரிக் வருகைப் பதிவுடன் கூடிய விடுதி மேலாண்மை அமைப்பு 1,383 விடுதிகளில் ரூ.27.15 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளன.

* உணவுக் கட்டணம் உயர்வு: விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு உணவுக்காக வழங்கப்பட்டு வரும் தொகையானது உயர்த்தப்பட்டு, பள்ளி மாணவர்களுக்கு ரூ.1,000லிருந்து ரூ.1,400 ஆகவும், கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1,100லிருந்து ரூ.1,500 ஆகவும் உயர்த்தி வழங்கப்படுகிறது.

* ஒருங்கிணைந்த சமையற்கூடம்: விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணாக்கருக்கு தரமான மற்றும் சுவையான உணவினை வழங்கும் பொருட்டு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை பின்பற்றி ஒருங்கிணைந்த சமையற்கூடம் மூலம் உணவு வழங்கும் திட்டம் சென்னையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், திருச்சி, கோயம்புத்தூர் மற்றும் மதுரையிலும் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

* இணையவழி நூலகங்கள்: 50 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல கல்லூரி மாணாக்கர் விடுதிகளில் நூலகங்கள் மற்றும் இணைய வழி நூலகங்கள் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளன.

* 10,12 வகுப்புகளில் தேர்ச்சி சாதனை: 10 ஆம் வகுப்பு பொது தேர்வில் 2021-2022 ஆம் ஆண்டில் ஆதி திராவிடர் பழங்குடியின தேர்ச்சி விகிதம் 78% என்பது 2023-2024 ஆம் ஆண்டில் 92% என உயர்ந்து சாதனை படைத்தது. அதே போல 12ஆம் வகுப்பு பொது தேர்வில் ஆதிதிராவிடர் பழங்குடியின தேர்ச்சி 2021-2022 இல் 84% சதவீதம் என்பது 2024-2025 ஆம் ஆண்டில் 96% சதவீதம் அதிகரித்து சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. முதல்வரின் இத்தகைய புரட்சிகரமான திட்டங்களால் ஆதிதிராவிடர் பழங்குடியின இளைஞர்கள் கல்வியில் வரலாறு காணாத வகையில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்.

* பழங்குடியின மாணவிகள் மாபெரும் சாதனை
60 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவில் பழங்குடி இன சமுதாயத்தைச் சேர்ந்த ரோகினி, சுகன்யா, என்னும் 2 மாணவியர் 2024 ஜே.இ.இ தேர்வில் தேர்ச்சி பெற்று திருச்சி என்.ஐ.டி இல் சேர்ந்து மாபெரும் சாதனை படைத்துள்ளனர். எல்.சுகன்யா, ஆர்.ரோகினி ஆகிய இருவரும் சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் படித்தவர்கள் ஆவர். ஜே.இ.இ. தேர்ச்சி பெற்று திருச்சி என்.ஐ.டி. நிறுவனத்தில் சேர்ந்து படிப்பதற்கு எங்களுக்கு நான் முதல்வன் திட்டம்தான் உதவியது என முதல்வருக்கு இந்த இரு மாணவிகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

* வானூர்தி படிப்பில் சேர்ந்த விருதுநகர் மாணவன்
விருதுநகர் மாவட்டம் சுந்தரராஜபுரம் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி மாணவன் சி. பார்த்தசாரதி, சென்னை ஐ.ஐ.டி இல் வானூர்தி வடிவமைப்புப் பிரிவில் சேர்ந்து, தனது கனவு நிறைவேறியது என பெருமிதத்துடன் கூறியுள்ளார். ஆதிதிராவிட நலத்துறை நடத்தும் பள்ளிகளில் படித்து முதன்முதலில் ஐ.ஐ.டி நிறுவனத்தில் சேர்ந்த அந்த மாணவன், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் கனவு திட்டமான நான் முதல்வன் திட்டம்தான் எனக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

The post பள்ளிகள் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஆதிதிராவிட பழங்குடியின மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 96 சதவீதமாக உயர்வு: ஐ.ஐ.டி. என்.ஐ.டி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்த மாணவர்கள் appeared first on Dinakaran.

Related Stories: