பல ஆண்டுகளாக காத்திருந்தும் இலவச விவசாய மின் இணைப்பு வழங்குவதில் கால தாமதம்: விவசாயிகள் குற்றச்சாட்டு

சென்னை: இலவச விவசாய மின் இணைப்பு வழங்குவதில் மின்சார வாரியம் காலம் தாழ்த்தி வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழகத்தில் 1989ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி, விவசாயிகளுக்கான இலவச மின்சார திட்டத்தை கொண்டு வந்தார். அதன் பிறகு, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, 2003ம் ஆண்டில் இருந்து இந்த திட்டத்துக்கு போதிய நிதி ஒதுக்கப்படாததால், விண்ணப்பித்த விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது. தமிழகத்தில் தற்போது 23.56 லட்சம் விவசாய மின் இணைப்புகளுக்கு தமிழக அரசு சார்பில் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. 2021ம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்றது முதல் தற்போது வரை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு மொத்தம் 1.69 லட்சம் புதிய இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன.

கடந்த 10 ஆண்டுகளாக 3 லட்சம் விவசாயிகள் இலவச மின் இணைப்புகளுக்காக காத்திருந்த நிலையில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் புதிய விவசாய இலவச மின் இணைப்புகள் சாதாரண வரிசை, திருத்தப்பட்ட சுயநிதி திட்டம், சிறப்பு முன்னுரிமை, தட்கல் சுயநிதி திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், தாட்கோ திட்டங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் 2 லட்சம் பேருக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது, ஆனால் 1.69 லட்சம் பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அடுத்தடுத்த ஆண்டுகளில் 50,000 விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த விவசாய மின் இணைப்புகளை விரைந்து வழங்க மின்வாரியம் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கூறியதாவது: தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் 1 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்படும் என அறிவித்து, அதன்படி வழங்கினார். அதன்பிறகு, 2022-23, 2023-24, 2024-25ம் ஆண்டுகளில் தலா 50 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அவை முழுமையாக வழங்கப்படவில்லை. மேலும், கடந்த 3 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான விவசாயிகளிடம் மின் இணைப்பு பெறுவதற்கு தயார்நிலையில் இருக்கும்படி முன்னறிவிப்பு கடிதங்களை மின் துறையினர் வழங்கினர்.

இதனால், விவசாயிகள் பயன்படுத்தாமல் இருந்த தங்களின் ஆழ்துளை கிணறுகள், குழாய்களை சரி செய்து, மின்வாரிய அறிவிப்பின்படி ரூ.75,000 மதிப்பிலான புதிய மின் மோட்டார்களை வாங்கி வைத்து காத்திருக்கின்றனர். பல மாவட்டங்களில் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்குவதற்கு தேவையான மின்கம்பங்கள் வயல்வெளிகளில் நடப்பட்டு, மின் கம்பிகள் இழுத்து கட்டப்பட்டுள்ளன. ஆனால், மின்மாற்றிகள் அமைக்கப்படவில்லை. இதுதொடர்பாக மின்வாரிய அலுவலர்களிடம் கேட்டாலும் உரிய பதில் கிடைப்பதில்லை. இதேபோல, ஏற்கனவே முன்பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் உள்ள 2.39 லட்சம் பேருக்கு மின் இணைப்புகள் வழங்குவது குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

தட்கல் திட்டத்தில் மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்த விவசாயிகளுக்கும் ஒரு சிலவற்றை தவிர மற்ற பெரும்பாலான இடங்களில் இதே நிலைதான் உள்ளது. வணிக ரிதியான விவசாய மின் இணைப்புகளுக்குதான் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். இலவச இணைப்புகளுக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை. மேலும் பல இடங்களில் விவசாயிகள் பெயரில் போலியாக மின் இணைப்புகள் வழங்கியுள்ளனர். ஒரு சில நேரங்களில் விவசாயிகள் மீது பொய் புகார்கள் தெரிவித்து அபராதம் வசூலிக்கின்றனர். எனவே கடந்த 4 ஆண்டுகளில் வழங்கப்பட்ட இலவச மின் இணைப்புகள் குறித்து மின்சார வாரியம் வெளிப்படையான அறிக்கையை வெளியிட வேண்டும். மின் இணைப்பு பெற்ற விவசாயிகளின் விவரங்களை மின் பிரிவு அலுவலகங்கள், மின் துறை இணையதளங்களில் வெளியிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post பல ஆண்டுகளாக காத்திருந்தும் இலவச விவசாய மின் இணைப்பு வழங்குவதில் கால தாமதம்: விவசாயிகள் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: