பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் வழக்கு கூட பதியாமல் குற்றவாளிகளை காப்பாற்ற துடித்தவர் எடப்பாடி: அமைச்சர் ரகுபதி காட்டம்

சென்னை: இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்ட அறிக்கை:
பச்சைப் பொய்கள் பேசுவதில் பழனிசாமிக்கு நிகர் பழனிசாமிதான் என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு கிடைத்ததற்கு, வெட்கமே இல்லாமல் தான்தான் காரணம் என்று பெருமை பேசுகிறார். உண்மையில் வழக்குக்கூட பதிவு செய்யாமல் குற்றவாளிகளைக் காப்பாற்றத் துடித்ததுதான் பழனிசாமி செய்த கேவலமான சாதனை. அதிமுகவைச் சேர்ந்தவர்கள் இந்த வழக்கில் தொடர்பு கொண்டுள்ளார்கள் என்று அறிந்தவுடன், அவர்களைக் காப்பாற்ற பழனிச்சாமி மேற்கொண்ட பித்தலாட்டங்களுக்கும் அளவில்லை; மூடி மறைக்க மேற்கொண்ட முயற்சிகளுக்கும் கணக்கில்லை! அப்பொழுது திமுகவும் இதர எதிர்க்கட்சிகளும் நடத்தியப் போராட்டங்களின் விளைவாகத்தான் வேறு வழியின்றி பொள்ளாச்சி வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

பொள்ளாச்சி வழக்கில் இன்று கிடைத்திருக்கிற தீர்ப்புக்கு, திமுகவுக்கு என்ன பங்கு உள்ளது என கேட்கிறார் பழனிசாமி. திமுக தலைவர் இப்பிரச்னையை கையில் எடுத்திருக்காவிட்டால் 2021 வரை இந்த லீலைகளை அதிமுக நிர்வாகிகள் நடத்தி இருப்பார்கள். இன்னும் ஆயிரக்கணக்கான பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள். பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரைத் தாக்கியது, பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை வெளியிட்டு அச்சுறுத்தியது என பாதிக்கப்பட்டவர்களை மிரட்டியதுதான் பொள்ளாச்சி வழக்கில் பழனிசாமி ஆட்சியின் சாதனை. இன்றைக்கு பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர்கூட பிறழ் சாட்சியமாக மாறாமல் இருந்திருக்கிறார்கள் என்றால், தமிழ்நாட்டில் முதல்வர் பெண்களுக்கு ஏற்படுத்தியிருக்கிற பாதுகாப்பான சூழலும், குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் எனும் நம்பிக்கையும்தான் காரணம்.

யார் அந்த சார்? என அருவருப்பு பிரசாரத்தை மேற்கொண்டு தோற்றுப் போன பழனிசாமி, அண்ணா பல்கலைக்கழக வழக்கில் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளை உயர்நீதிமன்றமே பாராட்டியது என்பதை அறிவாரா? பழனிசாமியின் பதட்டத்திற்குக் கொடநாடு கொலை வழக்குப் பற்றி முதல்வர் பேசியிருப்பதுதான் காரணம். திமுக மக்களிடம் பெற்றிருக்கும் பேராதரவால் தன்னிலை இழந்து என்ன செய்வது என்று தெரியாமல் மனம்போன போக்கில் உளறிக் கொட்டிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி. இரண்டு ரெய்டுகளுக்கு பயந்து தனது கட்சியையே டெல்லியில் அடகு வைத்துவிட்டு வந்த எடுபுடி பழனிசாமிக்கு, மாநில உணர்வு என்று சொல்லுவதற்குத் தகுதி இல்லை. இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறினார்.

The post பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் வழக்கு கூட பதியாமல் குற்றவாளிகளை காப்பாற்ற துடித்தவர் எடப்பாடி: அமைச்சர் ரகுபதி காட்டம் appeared first on Dinakaran.

Related Stories: