10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி அதிமுக மாஜி அமைச்சர் அரசுக்கு மனதார பாராட்டு

கோவில்பட்டி: ‘மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுக்கும் திட்டத்தை மனதார பாராட்டுகிறேன்’ என்று அதிமுக மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார். கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான கடம்பூர் ராஜூ, கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். பின்னர் விழாவில் அவர் பேசியதாவது: மாணவர்கள் கல்வியில் உயர்வதற்கு இன்றைக்கு அரசு உதவிகரமாக இருக்கிறது. நாங்கள் படிக்கும் போது நோட்டு புத்தகம், சைக்கிள் எல்லாம் நாங்கள்தான் வாங்க வேண்டும்.

அந்த காலத்தில் பள்ளிக்கு நாங்கள் சைக்கிளில் போனால் சட்டை காலரை தூக்கி விட்டுப்போவோம், ஏனெனில் ஒரு சிலரிடம் தான் சைக்கிள் இருக்கும். ஆனால் இன்றைக்கு உள்ள மாணவர்களுக்கு இலவச சைக்கிள், பஸ் பாஸ், புத்தகம் ஆகியவற்றை அரசே வழங்குகிறது. நோட், பேனா, பென்சில், பேக், வரைபடம், ஜாமென்ட்ரி பாக்ஸ் என அனைத்து கல்வி உபகரணங்களையும் அரசே வழங்குகிறது. காலில் போடும் காலணி முதல் கம்ப்யூட்டர் வரை இன்றைக்கு அரசே கொடுத்து படிக்க வைக்கிறது என்றால் இந்த காலத்து மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள். இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி சிறந்த மாணவர்களாக உருவாக எந்த தடையும் இல்லை.

இன்றைக்குள்ள ஆசிரியர்களுக்கு வேலை சுமை அதிகம் என்றாலும் உங்களை செதுக்கும் சிற்பிகளாக செயல்படுகின்றனர். மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவது சிறந்த திட்டம். உலகத்திலேயே படிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுத்த முதல் மாநிலம் தமிழ்நாடு தான். மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுக்கும் திட்டம் இன்றைக்கு அனைத்து மாநிலங்களிலும் பின்பற்றப்படுகிறது. அதை மனதார பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
சென்னையில் கடந்த 5ம் தேதி நடந்த விழாவில், 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனை அதிமுக எம்எல்ஏ கடம்பூர் ராஜூ பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: