மதுரை: ‘எமனையே பார்த்தவர்கள் நாங்கள். யாருக்கும் எப்போதும் அடிபணிந்து போக மாட்டோம்’ என செல்லூர் ராஜூ கூறியுள்ளார். மதுரையில் நேற்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அளித்த பேட்டி: அதிமுக கூட்டணிக்கு வரக்கூடிய கட்சிகள் குறித்து எடப்பாடி பழனிசாமி தான் முடிவு செய்வார். கூட்டணி குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும். ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணி நாட்கள் எண்ணிக்கையை 125 நாட்களாக உயர்த்தி வழங்கியதற்காக அமித்ஷாவிற்கு நன்றி கூறவே எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார். விஜய் கட்சி நடத்துவதற்கு எத்தனையோ விதத்தில் நெருக்கடி கொடுக்கலாம். அதை விட்டு விட்டு ஜனநாயகன் படம் வெளியிடுவதற்கு நெருக்கடி கொடுப்பதெல்லாம் தவறு. ஜனநாயகன் விவகாரத்தில் அரசியல் சாயம் பூசப்படுகிறது. அமித்ஷா மாபெரும் தலைவர்.
அவரது இயக்கம் மாபெரும் இயக்கம். விஜய் கட்சி மற்றும் அவரது படத்திற்கு நெருக்கடி கொடுப்பது போன்ற வேலை எல்லாம் அவர் செய்ய மாட்டார். எங்களது கூட்டணி குறித்து எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம்தான் கேட்க வேண்டும். அதிமுக பலம் இழக்கவில்லை. பாமகவில் நடப்பது உட்கட்சிப் பிரச்னை. அது தந்தை – மகன் விவகாரம். நாங்கள் பாஜவுக்கும், அமித்ஷாவுக்கும் அடிமை என நீங்கள் தான் ஏதேதோ கூறுகிறீர்கள். எமனையே பார்த்தவர்கள் நாங்கள். குண்டையே தொண்டையில் வைத்துக்கொண்டு எமனுக்கு டாடா காட்டிய இயக்கம் இது. நாங்கள் யாருக்கும் எப்போதும் அடிபணிந்து போக மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
