உழைப்புச் சுரண்டலுக்கு எதிரான உலகத் தொழிலாளர் எழுச்சியின் ஆணிவேர் கார்ல் மார்க்ஸ்: உதயநிதி ஸ்டாலின்

சென்னை: ஏழை-பணக்காரன், முதலாளி-தொழிலாளி எனும் பேதமில்லாத பொன்னுலகம் படைக்கப் பொதுவுடைமைத் தத்துவம் தந்த மாமேதை #KarlMarx அவர்களின் பிறந்த நாள் இன்று. உழைப்புச் சுரண்டலுக்கு எதிரான உலகத் தொழிலாளர் எழுச்சியின் ஆணிவேர் கார்ல் மார்க்ஸ்.

கார்ல் மார்க்சு செருமானிய மெய்யியலாளரும், பொருளாதார அறிஞரும், வரலாற்றாசிரியரும், சமூகவியலாளரும், அரசியல் கோட்பாட்டாளரும், பத்திரிகையாளரும், அரசியல் பொருளாதாரத் திறனாய்வாளரும், சோசலிசப் புரட்சியாளரும் ஆவார்.

1848 ஆம் ஆண்டில் இவர் வெளியிட்ட பொதுவுடைமை அறிக்கை துண்டுப் பிரசுரம், நான்கு-பாகங்களில் மூலதனம் (1867–1883) ஆகியவை இவரது மிகவும் பிரபலமான தலைப்புகள் ஆகும். மார்க்சின் அரசியல் மற்றும் மெய்யியல் சிந்தனைகள் அடுத்தடுத்த அறிவார்ந்த, பொருளாதார மற்றும் அரசியல் வரலாற்றில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியது.

செருமனியின் திரீர் நகரில் பிறந்த மார்க்சு, பான், பெர்லின் பல்கலைக்கழகங்களில் சட்டமும் மெய்யியலும் கற்றார். செருமானிய நாடகத் திறனாய்வாளரும் அரசியல் ஆர்வலருமான செனி வான் வெசுட்பலெனை 1843 இல் மணந்தார். இவருடைய அரசியல் வெளியீடுகள் காரணமாக, மார்க்சு நாடற்றவராகி, பல தசாப்தங்களாக இலண்டனுக்கு மனைவி மற்றும் குழந்தைகளுடன் நாடு கடத்தப்பட்டார்,

அங்கு செருமானிய மெய்யியலாளரான பிரெட்ரிக் எங்கெல்சுடன் இணைந்து தனது சிந்தனையைத் தொடர்ந்தார். எங்கெல்சுடன் இணைந்து பிரித்தானிய அருங்காட்சியக நூலகத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு தனது ஆக்கங்களை வெளியிட்டார்.

மார்க்ஸின் திருவுருவச்சிலையை சென்னை கன்னிமாரா நூலக நுழைவு வாயிலில் நிறுவப் பணிகள் நடைபெறுகின்றன என்னும் சிறப்புக்குரிய செய்தியை நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். மார்க்ஸ் அவர்கள் காட்டிய வழிநின்று உழைப்பாளரின் உரிமைகளைப் பாதுகாப்போம், பொதுவுடைமைச் சமூகம் படைப்போம்.

The post உழைப்புச் சுரண்டலுக்கு எதிரான உலகத் தொழிலாளர் எழுச்சியின் ஆணிவேர் கார்ல் மார்க்ஸ்: உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: