சிபிஎஸ்இ பள்ளிகளில் 3, 5, 8ம் வகுப்பு மாணவர்களை பெயிலாக்கும் திட்டத்துக்கு தமிழக அரசு எதிர்ப்பு: அநீதியான நடவடிக்கையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது என எச்சரிக்கை

சென்னை: சிபிஎஸ்இ பள்ளிகளில் 3, 5, 8ம் வகுப்பு மாணவர்களை பெயிலாக்கும் ஒன்றிய அரசின் திட்டத்துக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த அநீதியான நடவடிக்கையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்று எச்சரிக்கை விடுத்துள்ள கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவர்களின் பெற்றோர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) பள்ளிகளில், இனிமேல் 3, 5, 8ம் வகுப்புகளில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தால் ‘பெயில்’ என்ற நடைமுறை அமலுக்கு கொண்டு வரமுடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தங்களின் குழந்தைகள் 30 சதவிகிதத்திற்கும் குறைவான மதிப்பெண்கள் எடுத்தால் ‘பெயில்’ ஆக்க சம்மதிப்பதாக பெற்றோர்களிடம் பள்ளிகள் தரப்பில் ஒப்புதல் கடிதம் பெறப்படுகிறது. அதேநேரம், ஏப்ரல் மாதம் முடிவதற்கு முன்பே 9ம் வகுப்பு வரை விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, பழைய விதிமுறைப்படி மாணவர்கள் அடுத்த வகுப்புக்குச் சென்று விட்டதால், புதிய நடைமுறையானது அடுத்த கல்வி ஆண்டில் இருந்துதான் முழுமையாக நடைமுறைக்கு வரும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி, 8ம் வகுப்பு வரையில் கட்டாய தேர்ச்சி என்ற நடைமுறை மாற்றப்பட்டு அதற்கேற்றால் போல் விதிகள் திருத்தப்பட்டுள்ளன. அதன்படி, இனிமேல் குறைந்தட்ச தேர்ச்சிக்காக நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்கள் எடுக்காத மாணவர்கள் 3, 5 மற்றும் 8ம் வகுப்புகளில் பெயில் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய கல்வி அமைச்சகம் 2024ல் பழையை கட்டாய கல்வி சட்டத்தின், 16 மற்றும் 38 விதிகளிலிருந்த கட்டாய தேர்ச்சியை திருத்தியது. இதன்படி, ஆண்டு இறுதி தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள், அடுத்த 2 மாதங்களில் மீண்டும் இறுதி தேர்வை எழுத அனுமதிக்கப்படுவார்கள். ஒருவேளை மாணவர்கள் அதிலும் தோல்வியுற்றால், அவர்கள் மீண்டும் அதே வகுப்பை படிக்க வேண்டி இருக்கும். ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் கேந்திரியா வித்யாலாயா, நவோதயா வித்யாலயா மற்றும் சைனிக் பள்ளிகளில் இந்த விதிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், மாநில அரசு பள்ளிகளில் இதனை செயல்படுத்துவது, அந்தந்த மாநில அரசுகளின் விருப்பம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிபிஎஸ்இ பள்ளிகளில், இனிமேல் 3, 5, 8ம் வகுப்புகளில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தால் ‘பெயில்’ என்ற நடைமுறை அமலுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் 3, 5, 8ம் வகுப்பில் மாணவர்களை பெயிலாக்கும் திட்டத்தை ஏற்க முடியாது. இதை எதிர்த்து பெற்றோர்கள் குரல் கொடுக்க வேண்டும் என திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திருச்சி விமான நிலையத்தில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று அளித்த பேட்டி: சிபிஎஸ்இயில் 3, 5, 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்தால் பெயில் ஆக்கப்படுவார்கள் என்றும் பெயில் ஆனால், அவர்கள் மீண்டும் அதே வகுப்பில் தான் படிக்க வேண்டும் என்கிற தேசிய கல்வி கொள்கை என்ன சொல்கிறதோ அந்த சரத்தை அமல்படுத்தப் போவதாக கூறப்பட்டுள்ளது.
இதற்காக தான் தமிழ்நாடு முதலமைச்சர் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

2019 டிராஃப்ட் வெர்சனாக இருக்கும்போதே கொரோனா காலத்தில் அவசர அவசரமாக தேசிய கல்வி கொள்கை அமல்படுத்தப்பட்டு, படிப்படியாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்று அவர்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ திமுகவை சேர்ந்தவர்களின் பிள்ளைகளுக்காக நாங்கள் பேசவில்லை. ஒட்டுமொத்த தமிழகத்தை சேர்ந்தவர்களின் பிள்ளைகளுக்காக பேசுகிறோம். ஒட்டுமொத்த மாணவர் சமுதாயத்திற்காக பேசுகிறோம். ரிசல்ட் வந்து 2 மாதம் அவகாசம் தந்து அதற்குள் அந்த மாணவர்களை தேர்ச்சி பெற வையுங்கள். பெயில் ஆகும் மாணவர்கள் ஐந்தாம் வகுப்பே படிக்கட்டும் அல்லது எட்டாம் வகுப்ேப படிக்கட்டும் என சொல்வதை ஏற்க முடியாது. எலிமென்ட்ரியில் ட்ராப் அவுட் இல்லாத மாநிலமாக நாம் இருக்கிறோம். ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கும், அவனது பெற்றோருக்கும் பிரஷர் ஏற்படும். ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஆல் பாஸ் போட்டு ஒன்பதாம் வகுப்பில் இருந்து எவால்யுவேஷன் கொண்டு போகும்போது தான் ட்ராப் அவுட் இல்லாமல் இருக்கும். இல்லையென்றால் எஜுகேஷன் சிஸ்டத்தை விட்டு பிள்ளைகள் வெளியே போய்விடுவார்கள். அதை உணர்ந்து தான் தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து மாணவர்களுக்காக இதை எதிர்த்துக் கொண்டிருக்கிறார்.

இன்று அரசு பள்ளியை சார்ந்துள்ள நாம் ‘ரைட் டு எஜுகேஷன் ஆக்ட்’ என்ன சொல்கிறதோ அதை கடைபிடித்து நம்முடைய பிள்ளைகளை பாதுகாத்து உள்ளோம். நமக்கு பெருமையாக உள்ளது. சந்தோஷமாக உள்ளது. பிள்ளைகளுடைய எதிர்காலத்தில் தேசிய கல்விக் கொள்கையை வைத்து விளையாடும் இந்த அநீதியான நடவடிக்கையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. தயவு செய்து இத்திட்டத்தை எதிர்த்து பெற்றோர்கள் குரல் கொடுக்க வேண்டும். இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும், எனது பிள்ளை ஐந்தாவது பெயில் ஆகிவிட்டால் அந்த பிள்ளையின் ஒரு வருஷ படிப்பு என்ன ஆகும். எதிர்காலம் என்ன ஆகும் என தயவு செய்து பெற்றோர்கள் கேள்வி கேளுங்கள். அப்படி கேள்வி கேட்கும்போது தான் தமிழ்நாடு முதலமைச்சரின் கரத்தை வலுப்படுத்தும் விதமாக இருக்கும். ஒரு கோடியே 29 லட்சம் மாணவர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள், அவர்களுக்காக சேர்த்து தான் கேட்கிறோம். பெற்றோர்களுக்கு நான் வைக்கும் வேண்டுகோள். இதுபோன்று யாராவது உங்களிடம் கையெழுத்து வாங்கி ஐந்தாம் வகுப்பில் உங்கள் பிள்ளை பெயில் என்றால் நீ ஒத்துக்கொள் என்று சொன்னால் கையெழுத்து போடாமல் தயவுசெய்து எதிர்த்து கேள்வி கேளுங்கள். இது எப்படி சாத்தியப்படும் என்று எதிர்த்து கேள்வி கேளுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

 

The post சிபிஎஸ்இ பள்ளிகளில் 3, 5, 8ம் வகுப்பு மாணவர்களை பெயிலாக்கும் திட்டத்துக்கு தமிழக அரசு எதிர்ப்பு: அநீதியான நடவடிக்கையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது என எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: