சென்னை: வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்த மற்றொரு வழக்கில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவியை விடுவித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உள்ளது. கடந்த 2006-11ம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் பொதுப்பணித்துறை மற்றும் சிறைத்துறை அமைச்சராக பதவி வகித்த அமைச்சர் துரைமுருகன், 2007-09ம் ஆண்டு கால கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் சொத்துகள் சேர்த்ததாக 2011ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரி ஆகிய இருவருக்கும் எதிராக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கிலிருந்து இருவரையும் விடுவித்து வேலூர் சிறப்பு நீதிமன்றம் 2017 ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை நீதிபதி வேல்முருகன் விசாரித்தார். அப்போது அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவி தரப்பில், ஆஜரான வழக்கறிஞர், வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்துகள், வழக்கு காலகட்டத்துக்கு முன் வாங்கப்பட்டவை. துரைமுருகன் மனைவிக்கு தனிப்பட்ட வருவாய் ஆதாரங்கள் இருந்தும், அவரை இல்லத்தரசி எனக்கூறி, அவருக்கு தனிப்பட்ட வருவாய் ஆதாரங்கள் இல்லை எனக் கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆவண ஆதாரங்களை சுட்டிக்காட்டி, இருவரையும் வழக்கில் இருந்து விடுவித்துள்ளதாக வாதிடப்பட்டது. ஆவண ஆதாரங்களின் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை எதிர்த்த மறு ஆய்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதி, அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவியை சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுவித்து வேலூர் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் வழக்கில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து, தினந்தோறும் விசாரணை நடத்தி 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் வேலூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டுள்ளார். கடந்த 1996-2001ம் ஆண்டுகளில் பொதுப்பணித் துறை அமைச்சராக பதவி வகித்த அமைச்சர் துரைமுருகன் வருமானத்துக்கு அதிகமாக ரூ.3 கோடியே 92லட்சம் அளவுக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கில் இருந்து அமைச்சர் துரைமுருகன்,
அவரது மனைவி சாந்தகுமாரி மகனும் வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கதிர் ஆனந்த், மருமகள் சங்கீதா மற்றும் சகோதரர் துரை சிங்காரம் மீது தொடரப்பட்ட வழக்கில் இருந்து அவர்களை விடுவித்து வேலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நேற்று ரத்து செய்த உயர் நீதிமன்றம், இரண்டாவது சொத்து குவிப்பு வழக்கில் இருந்தும் விடுவித்த உத்தரவை ரத்து செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
The post வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த மற்றொரு வழக்கில் அமைச்சர் துரைமுருகன், மனைவியை விடுதலை செய்த உத்தரவு ரத்து: 6 மாதத்திற்குள் முடிக்க வேலூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.