கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான வழக்கு; சிபிஐ முன் விஜய் ஆஜர் ஆவாரா?: பொருளாளரிடம் நாளை விசாரணை

கரூர்: கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு தமிழக வெற்றி கழகம் கட்சித் தலைவர் விஜய் நாளை டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக பொருளாளர் ஆஜராவார் என்று கூறப்படுகிறது. கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் கரூரில் முகாமிட்டு விசாரித்து வருகின்றனர். வேலுசாமிபுரத்தை சேர்ந்த பொது மக்கள், தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள், பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள், போலீசார், தவெக நிர்வாகிகள் என பல்வேறு தரப்பினரிடமும் கடந்த 3 மாதங்களாக விசாரணை நடத்தப்பட்டது.

நேற்று முன்தினம் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் தடயவியல் துறை அதிகாரிகள் மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவ அதிகாரிகள், கரூர் வந்து சம்பவம் நடந்த இடத்தில் உயர்தர தொழில்நுட்ப கேமராக்களுடன் ஆய்வு செய்தனர். அன்று இரவு விஜய் பிரசாரத்திற்கு பயன்படுத்திய வாகனத்தை சிபிஐ அதிகாரிகள் சென்னையில் இருந்து கரூருக்கு கொண்டு வந்தனர். கரூர் தாந்தோன்றிமலையில் உள்ள தற்காலிக சிபிஐ அலுவலகத்தில் விஜய் பிரசார வாகனம் நிறுத்தப்பட்டது. நேற்று காலை 11 மணிக்கு சிபிஐ அதிகாரிகள் மற்றும் தடயவியல் துறை அதிகாரிகள் வாகனத்தில் ஏறி சோதனை செய்தனர். வாகனத்தின் மேல் விஜய் ஏறி நின்று பேசிய இடத்தை அளவீடு செய்தனர்.

மேலும் பேருந்தை ஓட்டிய டிரைவரான சென்னையை சேர்ந்த பரணிதரனிடம் நாமக்கல்லில் இருந்து எத்தனை மணிக்கு வாகனம் புறப்பட்டது, எவ்வளவு நேரத்தில் கரூர் எல்லைக்கு வந்தீர்கள், கரூர் எல்லையில் இருந்து கூட்டம் நடந்த வேலுசாமிபுரத்துக்கு எவ்வளவு நேரத்தில் வந்தீர்கள், எத்தனை கி.மீ. வேகத்தில் வாகனம் வந்தது, கூட்டத்தை ஒழுங்குப்படுத்த போலீசார் வந்தார்களா போன்ற கேள்விகளை கேட்டனர். அப்போது பரணிதரன் அளித்த வாக்குமூலத்தை வீடியோவாக பதிவு செய்து கொண்டனர். இந்த விசாரணை மாலை 5 மணிக்கு முடிந்தது. இதைதொடர்ந்து சென்னைக்கு விஜய் பிரசார வாகனத்தை டிரைவர் பரணிதரன் ஓட்டி சென்றார். மேலும் சம்பவம் நடந்த போது பாதுகாப்பு
பணியில் இருந்த 5 எஸ்ஐகள், தவெக நிர்வாகிகள் 5 பேர் நேற்று சிபிஐ முன் ஆஜராகினர். அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அதேபோல் கடந்த 29, 30, 31 ஆகிய தேதிகளில் தவெக பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மை பொது செயலாளர் ஆதவ் அர்ஜூனா, இணை பொது செயலாளர் நிர்மல்குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோரை டெல்லிக்கு வரவழைத்து சிபிஐ அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். கரூர் கலெக்டர் தங்கவேல், எஸ்பி ஜோஸ் தங்கையா ஆகியோரும் டெல்லி சென்று சிபிஐ முன் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
இதனிடையே டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஜன. 12ம் தேதி (நாளை) விசாரணைக்கு ஆஜராக தவெக தலைவர் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதை ஏற்று விஜய் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் விஜய்க்கு பதிலாக கட்சியின் பொருளாளர் சிபிஐ விசாரணைக்கு நாளை ஆஜராவார் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: