* சிந்து நதியின் முக்கியத்துவம்
சிந்து நதி இமய மலைத் தொடரில் கயிலை மலையில் மானசரோவர் அருகே திபெத்தின் மேற்குப் பகுதியில் உருவாகி லடாக் வழியாக பாய்ந்து, இந்தியாவின் காஷ்மீர், மற்றும் பாகிஸ்தானுக்குள் நுழைந்து அரபிக் கடலில் கலக்கிறது. ஆற்றின் மொத்த நீளம் 3,610 கி.மீ ஆகும், இது ஆசியாவின் நீண்ட ஆறுகளில் ஒன்றாகவும், பாகிஸ்தானில் பாயும் முக்கியமான ஆறாகவும் உள்ளது. சிந்து நதி படுகை சுமார் 11.2 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இது பாகிஸ்தானில் 47 சதவீதம், இந்தியாவில் 39 சதவீதம், திபெத்தில் 8 சதவீதம் மற்றும் ஆப்கானிஸ்தானில் 6 சதவீதம் அமைந்துள்ளது.
* எதற்காக இந்த ஒப்பந்தம்?
இந்தியாவும், தற்போதைய பாகிஸ்தானும் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் ஒன்றாக இருந்தபோதே பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்கள் இடையே சிந்து நதி நீர் பங்கீட்டில் மோதல் இருந்ததாக வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு இரு நாடுகளுக்கு இடையே நதி நீர் பங்கீட்டில் மோதல் தீவிரமானது. 1948ல் சிந்து நிதி மற்றும் கிளை நதிகளில் இருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் செல்வதை இந்தியா தடுத்து நிறுத்தியது. தண்ணீரின்றி திண்டாடிப்போன பாகிஸ்தான் ஐநாவில் முறையிட, மத்தியஸ்த முயற்சியில் உலக வங்கி இறங்கியது. ஒரு வழியாக 1960 செப்டம்பரில் சிந்து நிதி ஒப்பந்தம் இறுதிசெய்யப்பட்டது. இந்தியா சார்பில் நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவும், பாகிஸ்தான் சார்பில் அதன் அதிபர் அயூப் கானும் கையெழுத்திட்டனர்.
* என்ன சொல்கிறது சிந்து நதி ஒப்பந்தம்?
ஒப்பந்தப்படி சிந்து நதியின் கிழக்கு கிளை நதிகளான சட்லெஜ், பியாஸ் மற்றும் ராவி ஆகிய நதிகள் இந்தியாவின் கட்டுப்பாட்டிலும், மேற்கு கிளை நதிகளான ஜீலம், செனாப் மற்றும் சிந்து ஆகியவை பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலும் இருக்கும் .
* இந்தியா என்ன செய்யும்?
நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை இந்தியா ஒருதலை பட்சமாக நிறுத்தி வைக்க முடியாது என்று பாகிஸ்தான் கூறுகிறது. ஆனால், எங்களுக்கு அதிகாரம் உண்டு என்கிறது இந்தியா. சிந்து மற்றும் கிளை நதிகளில் பாகிஸ்தானுக்குள் பாயும் தண்ணீரை இந்தியா தடுத்து நிறுத்தும். ஆனால், ஒட்டு மொத்த தண்ணீரையும் தேக்கி வைக்கும் அளவுக்கு இந்தியாவில பெரிய அணைகள் கிடையாது. இப்போதுதான் லடாக்கில் புதிய நீர் மின் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் நிறைவேற சில ஆண்டுகள் ஆகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
* பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு?
சிந்து நதியில் பாயும் தண்ணீரில் 80 சதவீதத்தை பயன்படுத்துவது பாகிஸ்தான் மட்டுமே. இந்தியாவில் இருந்து வரும் தண்ணீர் நின்றுவிட்டாலும் மேற்கு பகுதி கிளை நதிகளில் இருந்து தண்ணீர் கிடைக்கும். ஆனால், அது பாகிஸ்தானுக்கு போதாது. சிந்து நதி தண்ணீரின்றி வறண்டால், பல மாகாணங்களில் விவசாயம் அடியோடு பாதிக்கப்படும், பல லட்சம் ஏக்கர் வளமான நிலம் தரிசாக மாறும். உணவு தானிய உற்பத்தி குறைந்து உணவுக்கு திண்டாடும் நிலை ஏற்படும். அதோடு பல கோடி மக்களின் குடிநீர் ஆதாரமே சிந்து நதிதான். பாகிஸ்தான் கடும் குடிநீர் பஞ்சத்தை சந்திக்கும். நீர் மின் திட்டங்கள் மூலம் கிடைக்கும் மின்சாரம் கிடைக்காமல் கடுமையான மின்சார தட்டுப்பாடு ஏற்படும். இந்தியாவை பொறுத்தவரை எந்த பாதிப்பும் கிடையாது. பாகிஸ்தானுக்கு தண்ணீர் தரத் தேவையில்லை என்பதால் உள்நாட்டு தேவைக்கு தண்ணீரை இந்தியா பயன்படுத்திக் கொள்ளும். மின்சார தயாரிக்கும்.
* பாகிஸ்தான் என்ன செய்யும்?
பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு இரு நாடுகளின் ஆணையர்களைக் கொண்ட நிரந்தர சிந்து நதி ஆணையம் உள்ளது. அங்கே பாகிஸ்தான் முறையிடலாம். இந்தப் பிரச்னையை ஆணையத்தால் தீர்க்க முடியாவிட்டால் அடுத்து உலக வங்கியால் நியமிக்கப்பட்ட மத்தியஸ்தர் எடுக்கும் முடிவே இறுதியானதாக இருக்கும்.
The post சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்திய இந்தியா பாலைவனமாக மாறுமா பாகிஸ்தான்? குடிநீர், மின்சாரம், உணவுக்கு திண்டாடும் நிலை ஏற்படும் appeared first on Dinakaran.