முன்னாள் ராணுவ வீரர்களுக்காக ரூ.14 ஆயிரம் கோடி ஒதுக்காதது ஏன்? காங்கிரஸ் கேள்வி

புதுடெல்லி: முன்னாள் ராணுவ வீரர்களுக்கான பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (ECHS) கடந்த 2003ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டது. ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான அரசு, இந்த திட்டத்திற்கு போதுமான நிதி ஒதுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து கவலை தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் ராணுவ வீரர்கள் துறைத் தலைவர் கர்னல் ரோஹித் சவுத்திரி, இந்தத் திட்டத்திற்காக ஆண்டுதோறும் ரூ.14,000 கோடி ஒதுக்கீடு செய்யுமாறு ஒன்றிய அரசை வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது: பணி ஓய்வுக்குப் பிறகு, அரசாங்கம் தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் கவனித்துக் கொள்ளும் என்ற நம்பிக்கை ராணுவ வீரர்களுக்கு உள்ளது. ஆனால் மோடி அரசு முன்னாள் ராணுவவீரர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்ய முயற்சிக்கிறது. முன்னாள் ராணுவ வீரர்கள் தற்போது அதிகரித்து வரும் வேளையில் பங்களிப்பு சுகாதாரத் திட்டத்திற்கு தேவையான உள்கட்டமைப்பை ஒன்றிய அரசு உருவாக்கவும் இல்லை, அதற்கேற்ப நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கவும் இல்லை. ராணுவத்தில் ஆள் பற்றாக்குறை இருப்பதாகவும், அதை விரைவில் சரிசெய்ய வேண்டும் என்றும் இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கை கூறுகிறது.

2023-24 நிதியாண்டில் முன்னாள் ராணுவ வீரர்களின் சுகாதார திட்டத்திற்கு ரூ.13,500 கோடி தேவைப்பட்டது. ஆனால் ரூ.9,831 கோடி மட்டுமே கிடைத்தது. பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் வரும் முன்னாள் ராணுவ வீரர்கள் நலத்துறை, இந்த திட்டத்தை நிர்வகிக்கும் திறனற்ற நிலையில் உள்ளது. எனவே இந்தத் திட்டம் முப்படைகளின் தலைமைத் தளபதியின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். அந்த திட்டத்தின் நிர்வாக அதிகாரம் மீட்டெடுக்கப்பட வேண்டும். ஆண்டுதோறும் ரூ.14,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். மேலும் நிலுவையில் உள்ள அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: