மூன்றரை மாதத்திற்கு பிறகு அம்பலமானது ராகிங், பாலியல் தொல்லையால் இமாச்சல் கல்லூரி மாணவி பலி: பேராசிரியர், 3 மாணவிகள் மீது வழக்கு

சிம்லா: இமாச்சலபிரதேசத்தில் ராகிங், பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட மாணவி பலியானார். இதுதொடர்பாக கல்லூரி பேராசிரியர், 3 மாணவிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இமாச்சல் மாநிலம் தர்மசாலாவில் உள்ள அரசு கல்லூரியில் 19 வயது மாணவி படித்து வந்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி, அந்த மாணவியை, சீனியர் மாணவிகள் ஹர்ஷிதா, ஆக்ருதி, கோமோலிகா ஆகியோர் ராகிங் செய்துள்ளனர். மேலும், பேராசிரியர் அசோக்குமார் பாலியல் தொல்லை கொடுத்து ஆபாசமான செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

சீனியர் மாணவிகள் தாக்கியதாலும், பேராசிரியர் பாலியல் துன்புறுத்தலாலும் 19 வயது மாணவி கடுமையாக பாதிக்கப்பட்டார். இந்த சம்பவம் கடந்த ஆண்டு செப்.18ஆம் தேதி நடந்துள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடைசியாக லூதியானாவில் உள்ள தயானந்த் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார். அங்கு அவர் கடந்த டிசம்பர் 26 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தந்தை ஜன.1 அன்று சீனியர் மாணவிகள் ஹர்ஷிதா, ஆக்ருதி மற்றும் கோமோலிகா மீதும், கல்லூரிப் பேராசிரியர் அசோக் குமார் மீதும் போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், காவல்துறை பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 75 (பாலியல் துன்புறுத்தல்), 115(2) (தானாக முன்வந்து காயம் ஏற்படுத்துதல்) மற்றும் 3(5) (பொது நோக்கத்துடன் குற்றவியல் மிரட்டல்) ஆகிய பிரிவுகளின் கீழும், இமாச்சலப் பிரதேச கல்வி நிறுவனங்கள் (ராகிங் தடை) சட்டம், 2009-இன் பிரிவு 3-இன் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மூன்றரை மாதங்களுக்கு பிறகு வெளியே தெரிய வந்த மாணவி ராகிங், பாலியல் வன்கொடுமை பற்றி விசாரணை நடந்து வருகிறது.

Related Stories: