புதுடெல்லி: எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் எலக்ட்ரானிக்ஸ் உதிரிபாகங்கள் உற்பத்தி திட்டத்தின் கீழ் ஏற்கனவே ரூ.12,704 கோடி முதலீட்டில் 24 திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதனை தொடர்ந்து ரூ.41,863 கோடி முதலீட்டில் மேலும் 22புதிய திட்டங்களுக்கு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ஒப்புதல் கடிதங்களை வழங்கினார். இந்த ஒப்பந்தங்கள் மூலமாக 33,791 நேரடி வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் ரூ.2,58,152கோடி மதிப்பிலான உற்பத்தியும் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்களில் டிக்சன், சாம்சங் டிஸ்ப்ளே நொய்டா பிரைவேட் லிமிடெட் , பாக்ஸ்கான், மற்றும் ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் ஆகிய தொழிற்சாலைகள் அடங்கும். இந்த திட்டத்தின் கீழ் மொபைல் உற்பத்தி, தொலைத்தொடர்பு நுகர்வோர் மின்னணுவியல் , பாதுகாப்பு மின்னணுவியல், ஆட்டோமொபைல் மற்றும் தகவல் தொழில்நுட்ப வன்பொருள் போன்ற பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படும் 11 இலக்குத் துறை பொருட்களின் உற்பத்தி அடங்கும். ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்கள் ஆந்திரப்பிரதேசம், அரியானா, கர்நாடகா, மத்தியப்பிரதேம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட எட்டு மாநிலங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.
