பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் நார் உலர வைக்கும் பணி தீவிரம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் டிராக்டர் மூலம் நார் உலர வைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை விவசாயமே அதிகளவில் உள்ளது. சுற்று வட்டார கிராம பகுதிகளில் 350க்கும் மேற்பட்ட நார் தொழிற்சாலைகளில் நார் உலர வைக்கும் பணி நடக்கிறது. மழை காலங்களில் நார் உலர வைக்கும் பணி மந்தமாக இருக்கும், பின் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும்போது நார் உலர வைத்து அதன் உற்பத்தியை அதிகமாக்குகின்றனர்.

இங்கு உற்பத்தியாகும் நார் வெளி மாநிலம், வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதில், கடந்தாண்டில் தென்மேற்கு மற்றும் வடகிகழக்கு பருவமழை அடுத்தடுத்து பொழிந்தது. இதனால் அந்நேரத்தில் நார் உலர வைக்க முடியாமல் உற்பத்தியாளர்கள் தவித்தனர்.

மேலும் கடந்த டிசம்பர் மாதம் துவக்கம் வரை பனிப்பொழிவு மற்றும் அவ்வப்போது சாரல் மழைப்பொழிவு இருந்ததால் நார் உலர வைக்கும் பணி மந்தமாக இருந்தது. வெளியிடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் நாரின் அளவு குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில மாதமாக பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாமல் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் தொடர்ந்திருப்பதால் களங்களில் நார் உலர வைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. இதில், பெரும்பாலான களங்களில், நார் உலர வைக்கும் பணியில் வெளி மாவட்ட மற்றும் வெளிமாநில தொழிலாளர்களே ஈடுபடுகின்றனர்.

இருப்பினும், அந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை போதியளவு இல்லாமல் இருப்பதால், தொழிற்சாலைகளில் மட்டையிலிருந்து அதிகபடியான நார்களை பிரித்தெடுத்து அதனை டிராக்டரில் தனி இயந்திரம் பொறுத்தி விரைந்து உலர வைக்கம் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து நார் உற்பத்தியாளர்கள் கூறுகையில், ‘கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை அடுத்தடுத்து பொழிவு இருந்ததால், அந்நேரத்தில் நார் உலர வைக்கும் பணி சற்று மந்தமானது. மேலும், ஈரப்பதத்தால் நார் உலர வைப்பதில் தடைபட்டது. ஆனால், கடந்த 3 மாதத்திற்கும் மேலாக சுற்று வட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் களங்களில் நார் உலர வைக்கும் பணியில் தீவிரமாக உள்ளோம்.

2 வாரத்திற்கு முன்பு அவ்வப்போது மழைப்பெய்தது. அந்நேரத்தில் மட்டும், நார் உற்பத்தி சற்று பாதிப்படைந்தது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் பகல் மற்றும் இரவு என தொடர்ந்து நார் உலர வைக்கும் பணி நடக்கிறது.

தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளதால் தொழிற்சாலையில் அதிகளவு நார் உற்பத்தி செய்யப்பட்டு, அதனை விரைந்து உலர வைத்து எடுப்பதற்காக, டிராக்டரில் நவீன இயந்திரம் பொறுத்தி அதன் மூலம் உலர வைக்கும் பணி தொடர்ந்துள்ளது. இதனால், உற்பத்தி அதிகரித்து வெளியிடங்களுக்கு அதிக அளவு அனுப்ப ஏதுவாக இருக்கும்’ என்றனர்.

The post பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் நார் உலர வைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: