ஆதிதிராவிட, பழங்குடியின மக்கள் வசிக்கின்ற பகுதியில் கோயில்களின் திருப்பணிகளுக்கு இதுவரை ரூ.212 கோடி நிதியுதவி: பேரவையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

சென்னை: ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்கள் வசிக்கின்ற பகுதியில் உள்ள கோயில்களின் திருப்பணிக்கு இதுவரை ரூ.212 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, மனோஜ் பாண்டியன் (ஆலங்குளம்): தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதிதிராவிட மக்கள் வசிக்கின்ற பகுதிகளில் கோயில்களுக்கு திருப்பணி நிதியுதவி அதிமுக ஆட்சியில் ஒரு லட்சம் அறிவிக்கப்பட்டது. தற்போது அதை இரண்டரை லட்சமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. ஆனால் அது போதுமானதாக இல்லை என்ற காரணத்தினால் கூடுதலாக மேலும் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுப்பார்களா. அமைச்சர் பி.கே.சேகர்பாபு: ஆதிதிராடவிட மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கோயில் திருப்பணி நிதியுதவி திட்டம் 1997ம் ஆண்டு கலைஞர் முதன்முதலில் ஒரு கோயிலின் திருப்பணிக்கு ரூ.25 ஆயிரம் என்று நிதியுதவி மானியமாக வழங்கி தொடங்கப்பட்ட திட்டமாகும். இது அதிமுக ஆட்சியில் ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டது.

இதன் பின்னர் திராவிட மாடல் ஆட்சி வந்தவுடன், அந்த தொகை இரண்டரை லட்சமாக உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓர் அமைதி புரட்சியை ஏற்படுத்தினார். இந்த அரசு பொறுப்பேற்றபின் கிராமப்புற கோயில்கள் மற்றும் ஆதிதிராவிட, பழங்குடியின மக்கள் வசிக்கிற பகுதி கோயில்களில் திருப்பணிகளுக்கு நிதியுதவியாக இதுவரை ரூ.212 கோடி வழங்கப்பட்டுள்ளது. தற்போது உறுப்பினர் கோரிய கூடுதல் தொகை ரூ.50 ஆயிரத்தையும் சேர்த்தால் இந்த ஆண்டிற்கு மட்டும் ரூ.12 கோடியே 50 லட்சம் கூடுதலாக தேவைப்படுகிறது. இதனை முதல்வர் கவனத்திற்கு எடுத்து சென்று, விரைவில் ரூ.3 லட்சமாக அந்த நிதியுதவி உயர்த்துவதற்கு வழிவகை காணப்படும்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

The post ஆதிதிராவிட, பழங்குடியின மக்கள் வசிக்கின்ற பகுதியில் கோயில்களின் திருப்பணிகளுக்கு இதுவரை ரூ.212 கோடி நிதியுதவி: பேரவையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: