நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுக்களுடன் திரண்ட மக்கள்

நாகர்கோவில் : நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் மனுக்களுடன் வந்த மக்களிடம் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் நேரடியாக குறைகளை கேட்டு மனுக்களை பெறுவது வழக்கம் என்பதால் பொதுமக்கள் அதிக அளவில் வந்து மனுக்களை அளித்து வருகின்றனர்.

நேற்றும் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, நலத்திட்ட உதவிகள் வழங்க கேட்டும் மக்கள் மனுக்களை அளித்தனர். கடந்த 14ம் தேதி மக்கள் குறைதீர்க்கும் நாள் அன்று விடுமுறை என்பதால் நேற்று வழக்கத்தைவிட கூட்டம் சற்று அதிகமாக காணப்பட்டது.

கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் மனுக்கள் பதிவு செய்தல் நடந்தது. இங்கு நீண்ட வரிசையில் நின்று மக்கள் மனுக்களை பதிவு செய்தனர். இதனால் அந்த பகுதியில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

மனுக்கள் உடனுக்குடன் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு ஆன்லைனில் அனுப்பி வைக்கும் பணிகளும் நடந்தது.கோரிக்கை மனுக்கள் அளிக்க வருகின்ற சிலர் அவ்வப்போது கலெக்டர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி திடீர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்ற நிகழ்வுகளும் நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் கலெக்டர் அலுவலகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது. நாகர்கோவிலில் நேசமணி நகர் காவல்நிலைய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் பொதுமக்கள் கொண்டு வந்த உடைமைகள், தண்ணீர் பாட்டில் போன்றவற்றை போலீசார் தீவிரமாக பரிசோதனை செய்த பிறகே கலெக்டர் அலுவலகத்திற்குள் பொதுமக்களை அனுமதித்தனர்.

The post நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுக்களுடன் திரண்ட மக்கள் appeared first on Dinakaran.

Related Stories: