புதுக்கோட்டை: துணை ஜனாதிபதியின் கருத்து உச்சநீதிமன்றத்தின் சுதந்திரத்திற்க பாஜ விடுத்துள்ள எச்சரிக்கை மணியாகும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பாஜவின் அடிமைகள் சொல்வதை பற்றி எல்லாம் நாங்கள் கவலைப்படுவது கிடையாது. எங்களின் முதலமைச்சர் மாநில சுயாட்சியை முன்னெடுத்து செல்ல வேண்டும், மாநிலத்திற்கு அதிக அதிகாரம் வேண்டும். ஒன்றிய அரசு எங்கள் மீது எந்த கருத்தையும் திணிக்க கூடாது. கல்வி, சுகாதாரம் போன்றவை எல்லாம் பொது பட்டியலில் இருக்கின்றது. அதனால் எங்களை கலந்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பதில் என்ன தவறு. ஒன்றிய அரசின் பட்டியலில் நாங்கள் குறிக்கிடவில்லை. ஆனால் பொதுப்பட்டியலில் இருக்கக்கூடிய விஷயங்களை பற்றி முடிவெடுக்கும் போது ஒன்றிய அரசு, மாநில அரசை கலந்து முடிவெடுக்க வேண்டும். எனவே தான் மாநில சுயாட்சி என்பது அவசியம் தேவைப்படுகிறது என்று வலியுறுத்தப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய சட்டங்கள் குறித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து 9 நாட்களுக்கு பிறகு இந்திய குடியரசு துணை தலைவர் விழித்து கொண்டு ஒரு கருத்தை கூறியுள்ளார். இடைக்கால தடைக்கு பிறகு உச்சநீதிமன்றத்தை எச்சரிக்கும் விதமாக, பயமுறுத்தும் விதமாக துணை குடியரசு தலைவரை கொண்டு பாஜவால் கருத்து வெளியிடப்பட்டுள்ளது. இது உச்ச நீதிமன்றத்தின் சுதந்திரத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணி. உச்சநீதிமன்றம் தன்னிச்சையாக செயல்படக்கூடாது, நாங்கள் சொல்வதை கேட்க வேண்டும் என்பதை போல அவர்களை வற்புறுத்துவதற்காக சொல்லப்பட்ட கருத்துதான் துணை குடியரசு தலைவரின் கருத்து. 9 நாட்களுக்கு முன்பு அரசியல் சாசன சட்டம் 142ஐ பயன்படுத்தி உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை தந்துள்ளது. இதேபோல் பேரறிவாளன் வழக்கிலும் 142 ஐ பயன்படுத்தி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அப்போதெல்லாம் மௌனமாக இருந்துவிட்டு தற்போது வக்பு திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை மட்டுமே விதித்துள்ளது. அதற்கே இந்த அளவுக்கு குதிக்கிறார்கள். குடியரசு தலைவர் ஒப்புதல் தந்துள்ள ஒரு சட்டத்தை திருத்த வேண்டும், அந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கு தொடரும் உரிமை இந்தியாவில் இருக்கக்கூடிய ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு. நான் இந்த சட்டத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றேன் என்று கூறலாம். அப்படி பாதிக்கப்படக்கூடிய இந்திய குடிமகனாக இருந்தாலும், அமைப்பாக இருந்தாலும் உச்ச நீதிமன்றத்தை நாடி அதற்கான தீர்ப்பை பெற முடியும்.அதனால் குடியரசு தலைவர் ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் தந்து சட்டம் ஆகிவிட்டது என்று சொன்னால் அதை யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்று கூறினால் இது ஜனநாயக நாடு அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.
The post துணை ஜனாதிபதியின் கருத்து உச்சநீதிமன்றத்துக்கு மிரட்டல்: அமைச்சர் ரகுபதி பேட்டி appeared first on Dinakaran.