பெற்றோரை இழந்த 4 மகள்களுக்கு வசிக்க வீடு, படிக்க வைக்க ஏற்பாடு: மாதம் தோறும் உதவித்தொகை

புதுக்கோட்டை: பெற்றோரை இழந்த 4 மகள்களை அழைத்து வந்து அவர்களுக்கு உதவும்படி திமுக ஒன்றிய செயலாளர் வேண்டுகோள் விடுத்தபோது புதுகை கலெக்டர் கண் கலங்கி நன்றி தெரிவித்ததோடு, அவர்கள் தங்க வீடு, மாதம் தோறும் உதவித்தொகை, படிக்க ஏற்பாடு செய்வதாக கூறினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா கிளிக்குடி ஊராட்சி வேப்பங்கனிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி சின்னப்பொண்ணு. கூலித்தொழிலாளிகள். இவர்களது மகள், மருமகன் இறந்த நிலையில் இவர்களது மகள்கள் சுப, சூர்யா, சந்தியா, ஸ்வேதா ஆகியோர் பாட்டி சின்னப்பொண்ணு பராமரிப்பில் இருந்து வருகின்றனர். இதில் 17 வயதான சுப கூலி வேலைக்கு சென்று 3 சகோதரிகளையும் படிக்க வைத்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இலுப்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சி கலந்து கொள்வதற்காக புதுக்கோட்டை கலெக்டர் அருணா வந்தார். இதையறிந்து அன்னவாசல் திமுக ஒன்றிய செயலாளர் சந்திரன், மேற்கண்ட 4 பேரையும் புதுக்கோட்டை கலெக்டர் அருணாவிடம் அழைத்து சென்று, ‘இந்த 4 குழந்தைகளின் தந்தை 2 ஆண்டுகளுக்கு முன்பும், தாய் 4 ஆண்டுகளுக்கு முன்பும் இறந்துவிட்டனர். இதனால் தாத்தா, பாட்டி வீட்டில் வசித்து வருவதோடு வாழ்வாதாரம் இன்றி தவிக்கின்றனர், 17வயதான சிறுமி வேலை செய்து மற்றவர்களை படிக்க வைக்கிறார்’ என தெரிவித்தார்.

இதைக்கேட்டு கண் கலங்கிய கலெக்டர் அருணா, ‘இவர்கள் வசிப்பதற்கு வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும். அன்புக்கரங்கள் திட்டத்தின் கீழ், குழந்தைகளை படிக்க வைப்பதாகவும், அவர்களுக்கு மாத உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு செய்து தரப்படும்’ என்றும் தெரிவித்தார். அப்போது கலெக்டர், ‘சுபஸ்ரீயிடம் வேலைக்கு போக வேண்டாம், உன்னை படிக்க வைக்கிறேன், படிக்கிறாயா?’ என்று கேட்டார். ஒன்றிய செயலாளரும் மற்றவர்களும் படிம்மா என்று கூற, சுபயும் படிப்பதாக தெரிவித்தார். உடனே கலெக்டர், ‘உன்னை பாலிடெக்னிக்கில் சேர்த்து விடுகிறேன், நல்லா படிக்கனும், படித்தால் மட்டுமே இதெல்லாம் கிடைக்கும். படிக்க வில்லை என்றால் இதெல்லாம் கிடைக்காது’ என அன்பு கட்டளையிட்டார்.

அப்போது திமுக ஒன்றிய செயலாளர் சந்திரன், கலெக்டருக்கு நன்றி தெரிவித்தார். அதற்கு இவர்களை அழைத்து வந்ததற்கு நான்தான் உங்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார். இந்த செயலால் கலெக்டர் அருணாவையும், திமுக ஒன்றிய செயலாளர் சந்திரனையும் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் வெகுவாக பாராட்டினர். இதுகுறித்த வீடியோ சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories: