சென்னை: தமிழ்நாடு பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்பு மற்றும் தமிழ்நாடு நிலப் பயன்பாட்டு தகவல் அமைப்பு திணை ஆகிய இணையதளங்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு பெருநிறுவன சமூக பொறுப்பு https://csr.tn.gov.in இணையதளம், திட்டம் (ம) வளர்ச்சி துறை மற்றும் ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் உதவியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள், பெருநிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்த இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்பு சிஎஸ்ஆர் முன்னுரிமைகளை மாநிலத்தின் வளர்ச்சி இலக்குகளுடன் ஒருங்கிணைக்க இது உதவும்.
தமிழ்நாடு புத்தாக்க முயற்சிகள் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நிலப் பயன்பாட்டு தகவல் அமைப்பினை உருவாக்க ரூ.1.50 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டது. மாநில திட்ட குழுவின், தமிழ்நாடு நிலப் பயன்பாட்டு ஆராய்ச்சி வாரியத்தால் தமிழ்நாடு நிலப் பயன்பாட்டு தகவல் அமைப்பு – திணை (https://tnslurb.tn.gov.in/tinai/) என்ற புவியியல் தகவல் சார்ந்த இணையதளமானது ஆராய்ச்சி வாரியத்தின் 50 ஆண்டுகால ஆய்வுகளையும், பல்வேறு அரசு துறைகள் மற்றும் முன்னணி நிறுவனங்களின் தரவுகளையும், நவீன புவியியல் தகவல் தொழில்நுட்பத்தையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தின் மூலம் தரவுகளை கடந்து, செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் பல்வேறு நிகழ்வுகளுக்கான பகுப்பாய்வுகளை மேற்கொண்டு அவற்றை காட்சி வடிவத்தில் அனைவரும் தெளிவாக புரிந்து கொள்ள முடியும். இத்தகைய சிறப்பு வாய்ந்த இணைய தளங்களை சென்னை தலைமை செயலகத்தில் துணை முதலமைச்சர் மற்றும் மாநில திட்டக் குழுவின் அலுவல்சார் துணைத்தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், மாநில திட்ட குழுவின் செயல் துணைத் தலைவர் ஜெயரஞ்சன், சிறப்பு திட்ட செயலாக்கத் துறை செயலாளர் பிரதீப் யாதவ், திட்டம் (ம) வளர்ச்சித் துறையின் செயலாளர் சஜ்ஜன்சிங் ரா சவான், மாநில திட்ட குழுவின் உறுப்பினர் செயலர் சுதா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
