கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் சாலை விபத்தில் இறப்பு 10% குறைவு: பெருநகர காவல்துறை தகவல்

சென்னை: கடந்த 2024ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது சென்னையில் நடந்த சாலை விபத்துக்களில் 2025ம் ஆண்டு இறப்பு விகிதம் 10 சதவீதம் குறைந்துள்ளதாக சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது. சென்னை பெருநகர காவல்துறையில் போலீஸ் கமிஷனர் அருண் பதவியேற்ற பிறகு எடுத்த சிறப்பான நடவடிக்கையால் சாலை விபத்துக்களின் இறப்பு விகிதம் பெருமளவு குறைந்துள்ளது. குறிப்பாக, சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி பள்ளி கல்லூரிகள், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு மற்றும் கலந்தாய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டன.

மேலும், சென்னையில் ஏற்படும் சாலை விபத்துக்களை குறைக்கும் வகையில் சென்னை ஐஐடி நிபுணர்களுடன் ஒருங்கிணைந்து தொழிநுட்ப அணுகுமுறைகள் குறித்து போக்குவரத்து போலீசாருக்கு பயிற்சி திட்டங்கள் நடத்தப்பட்டது.
நகரம் முழுவதும் தீவிர சோதனைகள், ஏஎன்பிஆர் கேமராக்கள், ‘2டி’ வேக ரேடார் அமைப்பு மற்றும் நவீன வாகன கேமராக்கள் மூலம் கண்காணிப்பு போன்ற தொழில்நுட்ப முயற்சிகள் மூலம் அதிக வேகமாக வாகனம் ஓட்டுதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், வேகமாக வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல் ஆகியவற்றிற்கு எதிராக அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் பதிவு செய்தன.

அதன் மூலம் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் அதன் அமலாக்க உத்தியை வலுப்படுத்தி, விபத்து நடைபெறும் இடங்களை அடையாளம் காணப்பட்டு, அவ்விபத்து மண்டலங்களில் உள்ள சாலையின் நிலைமைகள், அறிவிப்பு பலகைகள் மற்றும் விளக்குகள் மேம்படுத்தி விபத்து நடைபெறுவதை குறைத்து வருகிறது. போக்குவரத்து போலீசாரின் இந்த கூட்டு முயற்சியின் மூலம் கடந்த ஆண்டை விட சாலை விபத்து மற்றும் அதன் மூலம் ஏற்படும் இறப்புகளை கணிசமாக குறைக்க வழிவகுக்கப்பட்டது.

அதன்படி, கடந்த 2024ம் ஆண்டு உடன் ஒப்பிடும் போது 2025ம் ஆண்டு சாலை விபத்துக்களில் இறப்பு விகிதம் 10 சதவீதம் குறைந்துள்ளது. 15.12.2023ம் ஆண்டு முதல் 15.12.2024ம் ஆண்டு நிலவரப்படி நடந்த சாலை விபத்துக்களில் 519 பேர் இறந்தனர். ஆனால், இந்த ஆண்டு அதே காலகட்டத்தில் நடந்த சாலை விபத்துக்களில் 469 பேர் மட்டுமே பலியாகி உள்ளனர். மேலும், கடந்த ஆண்டு 2,093 கொடுங்காய விபத்துக்கள் நடந்தது. அதே இந்த ஆண்டில் 721 கொடுங்காய விபத்துக்களாக பதிவாகியுள்ளது. இந்த பதிவின் மூலம் கடந்த ஆண்டை விட 66 சதவீதம் கொடுங்காய விபத்துக்களின் அளவு குறைந்துள்ளதாக சென்னை பெருநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: