சென்னை: சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 2026ம் ஆண்டிற்கான ஓராண்டு கல்வெட்டியல் மற்றும் தொல்லியல், அகழாய்வுக்கான பட்டய வகுப்பு 2026 ஜனவரி திங்கள் முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த வகுப்பில் கல்வெட்டியல், தொல்லியல் வழி தமிழக வரலாறு, மொழி, பண்பாடு, கலை, இலக்கியம் குறித்து அறிந்து கொள்வதற்கும், கல்வெட்டுப் படியெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்தலுக்கான பயிற்சியும் அளிக்கப்படும். இதில் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பட்டய வகுப்பு வார விடுமுறை நாளான ஞாயிறுதோறும் (முழுநேரம்) நேரடியாக ஓராண்டுக்காலம் சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடத்தப்படும். இப்பட்டய வகுப்பிற்கான விண்ணப்பத்தினை நிறுவன வலைதளத்தில் www.ulakaththamizh.in பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். வகுப்புக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி 10ம் வகுப்புத் தேர்ச்சி, வயது வரம்பு கிடையாது. விண்ணப்பக் கட்டணம், சேர்க்கைக் கட்டணம், அடையாள அட்டை, தேர்வுக் கட்டணம் என மொத்தம் ரூ.4000 செலுத்த வேண்டும். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜனவரி 20ம் தேதி மாலை 5 மணிக்குள் நிறுவன முகவரிக்கு வந்து சேர வேண்டும்.
