வேலூர்: வேலூர் சேண்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் 30 அடி உயர ரயில்வே மேம்பாலத்தில் இருந்து தவறிவிழுந்து தொழிலாளி பலியானார். ராணிப்பேட்டை உசேன் தெருவை சேர்ந்தவர் தமீம்தாவூத்(71). இவர் சேண்பாக்கத்தில் உள்ள பழைய இரும்பு கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். வழக்கம்போல் நேற்று காலை தமீம்தாவூத் பைக்கில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். வேலூர் சேண்பாக்கம் ரயில்வே மேம்பாலத்தில் சென்றபோது பைக் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதியது. இதில் அவர், 30 அடி உயர மேம்பாலத்தில் இருந்து தூக்கிவீசப்பட்டு கீழே விழுந்தார். மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அவர் அதே இடத்தில் இறந்தார். அப்போது குடியாத்தம் நிகழ்ச்சியில் பங்கேற்க வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி மேம்பாலம் வழியாக சென்றுகொண்டிருந்தார். விபத்து நடந்த இடத்தில் பொதுமக்கள் திரண்டிருந்ததால் உடனடியாக காரை நிறுத்தி அங்கு விசாரணை நடத்தினார்.இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து 30 அடி மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட தொழிலாளி பலி: கலெக்டர் நேரில் விசாரணை appeared first on Dinakaran.